வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 3

வணக்கம் பறம்பினரே…..வாருங்கள் வாரிக்கையன்(என் அப்பா) அனுபவங்களை தொடர்வோம். செந்நாய்களை பற்றி பேச ஆரம்பித்தாலே அப்பா ரொம்பவே குதூகலமாகி விடுவார். நாட்டு நாய்கள் போல அதுங்க கூடவேதானே நானே வளர்ந்தேன் என்பார். கவனியுங்கள் ‘வளர்ந்தேன்’….!ஏனெனில்,செந்நாய்களை பிடித்தெல்லாம்,வளர்க்க முடியாது. அத்தனை ஆக்ரோஷம்!தந்திரம்!ஒற்றுமை!!ஆனால்,வாரிக்கையனின் அதிர்ஷ்டமோ அல்லது அவரின் வேகமோ பல முறைகள் செந்நாய்களிடமிருந்து தப்பித்திருக்கிறார்.

என் அப்பாவின் வேகம் குறித்து சென்ற பதிவில் என் அத்தை,அப்பாவின் மூத்த தங்கை ஒரு அழகான பின்னூட்டம் இட்டிருந்தார்.

என் அப்பத்தா சொல்வார்களாம்,”என் பையன்கிட்ட ஒரு வேலையை கொடுக்குறது யானைகிட்ட உலக்கையை கொடுக்கிற மாதிரி”அத்தனை வேகம்,நேர்த்தி என்று!!இது சொல்லப்பட்டு எழுபது வருடங்கள் ஆகியிருக்கலாம்!!இன்று, எத்தனை வீரியமாக வெளி வந்திருக்கிறது பாருங்கள்!!அத்தனை பலம் சொற்களுக்கு!!!

எதற்காக இந்த பீடிகை என்றால் செந்நாய்கள் வேட்டையாடிய காட்டுப்பன்றியை கைப்பற்றி வர எவ்வளவு வேகம் தேவைப்பட்டிருக்கும், அதுவும்,எளிதில் ஏறி தப்பிக்க முடியாத செங்குத்தான மலைப்பகுதிகளில்!!!இந்த சம்பவம் நடைபெற்றது சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு!!காட்டை சீர்திருத்தி,எங்கள் குடும்பம் மலை விவசாயம் செய்ய ஆரம்பித்திருந்த நாட்கள் அவை! கடுமையான வேலை முடித்து,அப்பாவும்,என் ஒன்று விட்ட சித்தப்பாவும் ஓய்வில் அமர்ந்திருந்த முன் மாலை நேரம். பனி சூழ ஆரம்பிக்கிறது.

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருக்கும் பள்ளத்தாக்கில் இருந்து ஒரு காட்டுப்பன்றியின் மரண ஓலம் கேட்கிறது. இவர்களுக்கு புரிந்து விட்டது, செந்நாய்கள் பன்றியை சூழ்ந்து விட்டதென!!

ஏனென்றால்,புலியோ,சிறுத்தையோ பன்றியை வேட்டையாடுகிறதென்றால், சத்தமே எழுப்ப முடியாதவாறு பன்றியின் கழுத்தை குறி வைத்து பிடித்து,குரல் வளையை முறித்து விடும்!!சத்தமின்றி ஒரு வதம்,வேட்டை!!ஆனால்,தன்னிலும் பலம் மிகுந்த இரையை செந்நாய்கள் திட்டமிட்டு சூழ்ந்து,அலைக்கழித்து,களைப்பாக்கி,கூட்டம்,கூட்டமாக பாய்ந்து கடித்து,கொஞ்சம்,கொஞ்சமாக சாகடித்து,பின்னர் பசியாறும்!!

இதுவும் இயற்கையின் ஏற்பாடுகளில் ஒன்றுதான்! தவறேதுமில்லை!!வலிய இரையை,எளிய புலால் உண்ணும் மிருகங்கள் வெல்வதற்கான ஒரு வேட்டை தந்திரம்!

சத்தம் கேட்பது அலங்காரம் ஆற்றுப்படுகையிலிருந்து!!!

கிட்டத்தட்ட மூவாயிரம் அடி பள்ளத்தாக்கு!பத்து நிமிடங்களில் போய் விடலாம்தான்(நமக்கு அரை மணிநேரம் பிடிக்கும்)!!
யோசிக்காமல் பாய்ந்து விட்டனர் இறக்கத்தில், குத்தீட்டியோடு வாரிக்கையன் முன்னால்!! படுகையை நெருங்க,நெருங்க பன்றியின் அலறல் ஓய்கிறது,செந்நாய்களின் கூச்சல் பெரிதாகிறது. இவர்களின் கால்களில் இன்னமும் வேகம் கூடுகிறது. சுவையான பன்றி இறைச்சி, கால்களுக்கு வெறியை ஊட்டுகின்றன. ஆற்றுப்படுகையை நெருங்க,பன்றியின் வயிற்றை கிழித்து,குடலை உருவ ஆரம்பித்திருக்கின்றன செந்நாய்கள்!!ஆக்ரோஷ கூச்சலோடும்,கையில் குத்தீட்டியோடும் செந்நாய்களை இவர்கள் விரட்ட,இருபதுக்கும் மேற்பட்ட செந்நாய்கள் இவர்கள் இருவரையும் எளிதில் வேட்டையாடியிருக்கும் பன்றியை வீழ்த்திய அதே முறையில்!!ஆனால்,வலது புறத்திலிருந்த மலை மீதிருந்து இவர்கள் இறங்க,பன்றியின் ஓலம் கேட்டு எதிர்மலையிலிருந்தும் பளியர்கள் இறங்கியிருக்கின்றனர்.

இருபுறமும் மனிதர்கள் சூழ்ந்ததால் செந்நாய்கள் விலகியிருக்கின்றன. அப்புறம் என்ன!!பன்றிக்கறிகள்,தனைமயக்கி மூலிகைதான்!!

காட்டை சீர் திருத்தும் பணியின் போதுதான் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் கிடைத்ததென்பார் வாரிக்கையன்!!சாட்டை,சாட்டையாய் தொங்கும் கைகளில் வீச்சரிவாள் கொண்டு புதர்களை சரித்து கொண்டே முன்னேறுவார் அப்பா.
ஓங்கு தாங்கான உயரத்தில்,வேகம் கூடிய வீச்சுகளால் காய்ந்த மரங்களை அப்பா சரிப்பது,யானை கிளைகளை உடைப்பது போன்றே இருக்கும் என்பார் என் அம்மா!!அத்தனை வேகம் அப்பாவிடம் இளம் வயதில்!!பளியர் அண்ணன்களும் அப்பாவின் வேகத்தை வியந்ததை பலமுறை நான் கேட்டிருக்கிறேன்.

பளியர் அண்ணன்களே அதீத பலத்துடன் இருப்பர்.ஆனால், உயரம் குறைவாக இருப்பர்,அது, அவர்களுக்கு பெரும் மரங்களேற,தேன் எடுக்க உதவி செய்யும்!!கத்தி வேலை செய்ய,பாறைகளை நகட்ட,குதிரைகளை பராமரிக்க என்று வரும்போது அப்பாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாது தினறுவார்கள்!!ஆனால்,அப்பாவும்,பளியர் அண்ணன்களும் செம கூட்டணி!!

அப்படித்தான்,அன்றும் ஒரு நாள் கடுமையான வேலைகளை முடித்து விட்டு,குத்து குடிசையின்(வட்டமாக அல்லது செவ்வக வடிவில்,சுவர் இல்லாமல், கம்புகள் ஊண்டி,போதைப்புல் வேயப்பட்ட தற்காலிக குடிசைகளே,குத்துகுடிசை என்பது!மழைநீர் வடிய,கூரை முடியும் இடத்திற்கு கீழே,சிறு வாய்க்கால் எடுத்து,குடிசையை சுற்றி நீர் வடியுமாறு ஓர் ஏற்பாடு செய்திருப்பர்)வெளிப்புற கால்வாயை ஒட்டி,பலகைகளை தலைக்கு அண்டக்கொடுத்து,உள்புறமாக கால் நீட்டி,காலுக்கடியில்,சற்று தள்ளி அடுப்பில் தனல் மூட்டி,குளிருக்கு இதமாக இரவெல்லாம் படுத்துறங்கியின்றனர்,அப்பாவும்,பளியர்களும்!!

காலையில் அனைவருக்கும் சற்று முன்பாகவே, கண்முழித்த அப்பாவின் வயதான அத்தை,எலேய்,என்னாங்கடா இன்னும் தூக்கம்,தலைக்கு கீழே தண்ணி போறது கூட தெரியாம என்று சத்தமிட, அட சும்மாருத்தேஏஏ,ராத்திரியெல்லாம் பனி கவ்விருச்சு,நீ வேற மழை,கிழன்னுட்டு என்று அப்பா எகிற,அப்புறம் அதென்னடா ஒங்க மண்டைக்கு பின்னாடி நெளியறதுன்னு பாட்டியும் கண்களை கசக்கி கொண்டே எகிற,விபரீதம் புரிந்து அலறி எந்திரித்தால்,பதினாறு,பதினேழடி வக்கனத்தி(மலை பாம்பு)இரவெல்லாம்,இவர்கள் தலை வைத்திருந்த பலகைகளுக்கு கீழே,மழை நீர் வாய்க்காலில்,நிம்மதியான உறக்கம் போட்டிருக்கிறது!!

அலறி எந்தரித்து,இவர்கள் போட்ட சப்தம் கேட்டு வந்த,பேச்சி கிழவி,முதிர்ந்த பளியர் இன குலநாகினி ,
அசால்டாக மலைப்பாம்பின் தலையை பிடித்து,இழுத்து போயிருக்கிறது,இத்தாம் பெரிய வக்கனத்தி சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு சாமி,என்று புலம்பிக் கொண்டே!!!

ஆனாலும் அப்பா இன்றும் சொல்வார் எவ்வளவோ காட்டு கறி சாப்பிடாச்சு! என்னவோ பாம்பு கறி சாப்புட மனசு ஒப்பலைன்னு!!அப்படித்தான் பளியர்கள் நல்ல பெரிய மலை பாம்பை அவர்கள் உணவுக்கென பிடித்து வந்து,
வயிற்றை கீறியதில்,உள்ளே மூன்று கூரான்கள்(சிறிய அளவிலான சருகு மான்கள் )முழுவதுமாக உள்ளே இருந்திருக்கின்றன.ஒன்றன் பின் ஒன்றாக மூன்றையும் விழுங்கிய மலைப்பாம்பு ஓட முடியாமல் பளியர்களுக்கு கிடைத்திருக்கிறது. அப்புறம் என்ன??பாம்பு பளியர்களுக்கு,சருகு மான்கள் வாரிக்கையனுக்கு உணவாகியிருக்கிறது!!
பின்னர்,பல வருடங்கள் கழித்து,அப்பாவுக்கு திருமணமாகி,நான் பிறந்து,என்னுடைய பதினைந்து வயதில்,அந்த தொண்ணூறு வயது பேச்சி கிழவியை,குலநாகினியை அந்த அலங்கார ஆற்றுப்படுகையில் சந்தித்தேன்!அந்த வக்கனத்தி கதைகளை ஒம்பேரனுக்கு சொல்லாத்தா என்று அப்பா சொல்ல,கிழங்கு,கிழங்கா வக்கனத்திக இந்த பள்ளத்துல படுத்து கெடக்குமே!!!நாம்பாட்டுக்கு வேனுங்குறப்பெல்லாம் உறிச்சு கொளம்பு வப்பேன்!!கெழவனும் வழிச்சு,வழிச்சு திம்பான்!!இப்ப கெழவனுமுல்ல,வக்கனத்தியுமில்ல என்று பேச்சி கிழவி புலம்ப,நான் “ஙே”என்று முழித்தேன்!!

மதிகெட்டானில் வாரிக்கையன் பெரும்புலியை சந்தித்தது,கதம்ப வண்டு கடைசல் செய்து பளியர்கள் அதகளம் செய்தது என அடுத்தடுத்து பறம்பினரே……..