வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 4

வாரிக்கையன் பதிவின் தொடர்ச்சியாக, நம் பளியர் சகோதரர்களின் உணவு கலாட்டாக்களை பார்ப்போமா???!!!

காட்டில் கிடைக்கும் எந்த உயிரினமும் நமது உடலின் புரத தேவையை தீர்க்க வல்லதே!!ஆகவே,உணவில் உயர்வென்றும், தாழ்வென்றும் ஏதுமில்லை! இந்த பீடிகை, இனி கீழே வருவனவற்றை எளிதாக கடக்க உதவும் பறம்பினரே ………..

காட்டை சீர் திருத்தும் போது, பல சமயங்களில், புதர்களிலிருந்து உடும்பு முதல் அலுங்கு (எறும்பு தின்னி) வரை பல சிறு உயிரினங்கள் கிடைப்பதுண்டு. அபூர்வமாக கதம்ப வண்டுகளின் கூடுகளும் கிடைக்கும். குழவிகளில் சற்றே,பெரிய வகை குளவிகள்தாம் கதம்ப வண்டுகள்!!குளவிகளை விட வலிமையானவை!பத்திருபது கதம்ப வண்டுகள் மனிதனை கடித்தால் மரணம் நிச்சயம்! அதே நேரத்தில், பக்குவமாக, கதம்ப வண்டுகளின் கூண்டை கைப்பற்றினால், நான்கைந்து படிகள் கதம்ப வண்டு குஞ்சு, குளுவான்கள் நிச்சயம்!!!

கதம்ப வண்டுகளின் கூடுகளும், தேன் கூடுகளை ஒத்ததே!!ஆனால், இரண்டு குடங்களின் அளவில், உருண்டையாக இருக்கும். தாய் வண்டுகள் உள்ளே நுழைய, இரண்டு முதல் நான்கு பாதைகள் இருக்கும். முதல் அடுக்கை பிரித்து, உள்ளே நுழைந்தால்,தேன் ராடுகளை போலவே அடுக்கு, அடுக்காக உள்ளே பல அறைகள், அவற்றில், கதம்ப வண்டுகளின் முட்டைகளும், குஞ்சுகளும் ஆயிரக்கணக்கில்!!தேன் மட்டும் இருக்காது, ஆனால், அதே அமைப்பில்…….

இக்கூண்டுகளை பகலில் கைப்பற்றுவது எளிதான வேலை அல்ல. ஆகவே,ஒளி மங்கிய மாலை வேளைகளில், பகலிலேயே அடையாளம் கண்ட
கதம்ப வண்டுகளின் கூண்டை நோட்டமிட்டு, எரியும் தீ உருண்டைகளை கொண்டு, கூட்டினுள் வண்டுகள் நுழையும் அந்த வழிகளை (துளைகளை) பக்குவமாக அடைப்பர்! அந்த சூட்டிலும், புகையிலும் பெரிய வண்டுகள் முழுவதுமாக இறக்கும். பின்னர் எடுத்து, வெளி அடுக்கை பிரித்து, பக்குவமாக தட்டினால், வண்டுகளும், முட்டைகளும், குஞ்சுகளும் பொல பொலவென்று உதிரும். இறந்த வண்டுகள் பொறியலாகவும்,முட்டைகளும், குஞ்சுகளும் காட்டு கான மிளகாயும்,குறு தக்காளியும் போட்டு வேக வைத்து கடைசலாக மாறும்!!பளியர் இன மக்களை பொறுத்த வரை இது ஒரு பெரு விருந்து!!தவம்!!!வரம்!!!!

இதே போலத்தான் மலை தேன் கூடுகள் கிடைத்தாலும்!!தேன் கிடைத்த சந்தோசத்தை விட,நன்றாக விளைந்த, பெரிய தேன் கூட்டினுள் இருக்கும் குஞ்சு, குளுவான்களே பளியர் சகோதரர்களின் முதல் இலக்கு!!தேன் இருக்கும் அறைகளில் இருந்து தேனை நன்றாக பிழிந்து கொண்டு, குஞ்சு, குளுவான்கள் (லார்வாக்கள்) இருக்கும் அறைகளை நன்றாக தீயில் சுட்டு,அதை தேனில் முக்கி, முக்கி அப்படியே சாப்பிடுவார்கள்!!என்ன ஒரு ரசனை!!!

இவைகளே போன்றேதான் சாதா குளவிகளின் கூடுகள் கிடைத்தாலும்!!ஆனால், அதில் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். எடுத்து அப்படியே சுட்டு தின்பதோடு சரி!!

இதில் முக்கியமான ஒரு மருத்துவ குறிப்பு உண்டு!!சாதாரணமாக ஒரிரண்டு வண்டுகள் கடித்தால், பயங்கரமாக,
“கடு கடு “வென்று வலிக்குமே தவிர ,உயிர் பயம் இருக்காது!!ஆனால், மொத்தமாக கொட்டினால் மரணம் நிச்சயம்!!
இதிலிருந்து தப்பிக்க பளியர்கள், கதம்ப வண்டுகளிடம் கடி வாங்கிய அடுத்த கணம், பத்திருபது, அதி பயங்கர காரம் நிறைந்த கான மிளகாய்களை வெறும் வாயில் மென்று தின்று விட்டு, உடல் முழுவதும் விளக்கெண்ணெய் (ஆமணக்கு) தேய்த்து கொள்வார்கள்!!!நிச்சயம் உயிர் பிழைப்பார்கள்!!அப்படி பிழைத்தவர்களில், வாரிக்கையனும் (என் அப்பா) ஒருவர்!!!

இவர்களின் பெயர்களும் வித்தியாசமாகவே……பூதன், வாலன், கூழையன், மோளையன், பழையன், சின்ன பழநி, பெரிய பழனி, இடும்பன், இடும்பி என்று……..என்ன? ஆசானும், வேள்பாரியும் நினைவுக்கு வருகிறதா பறம்பினரே??இங்கேதான், நான் ஆசானை வியக்கிறேன்!!எத்தனை வருடங்கள் கள ஆய்வு செய்திருந்தால் ,இத்தனை தகவல்களையும், பெயர்களையும் திரட்டியிருப்பார்!!!வணங்குகிறேன் ஆசானே!!!

மதிகெட்டானில் உள்ள தீ வண்டி பாறையும், கேளையாடு சூட்டானும் அடுத்த பதிவில்!!!