வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 2

மதி கெட்டான் சோலையில்,
மலை பளியர்களோடு(பழையர்கள்???) வாரிக்கையனின் வேட்டை(என் அப்பாவின், அறுபது வருடங்களுக்கு முந்தைய) அனுபவங்களை பகிர்கிறேன் என்று கூறியிருந்தேன் அல்லவா?!

நண்பர் சோமசுந்தர பாபுவின்
வெளவால் பதிவு ,
இன்னும் அந்த ஆர்வத்தை
தூண்டி விட்டது.

அப்பா எப்போது வேட்டை அசைகளை ஆரம்பித்தாலும், அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கும் பழந்தின்னி வெளல்களை பெரிதாக சிலாகிப்பார்!!!

மதிகெட்டானில் உள்ள குகைகளில் கிடைக்கும், அந்த பெரிய வெளவால்கள் அத்தனை பெரிதாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் இருக்குமென்பார்!!

குறுகிய குகை வாயிலின் ஒரு புறம், சணல் சாக்குகளை வைத்து மூடிக் கொண்டு, மறுபுறம் புகை போட்டு,
எதிர் வராமல் விரட்டினால், மூட்டை, மூட்டையாக வெளவால்கள் கிடைக்கும் என்பார்!!!

அரை கிலோக்கள் எடையுள்ள உருப்படிகளை நானே பலமுறை உள்ளே தள்ளியிருக்கிறேன் நல்ல காரசாரமான கான மிளகாய், குறு மிளகு, காட்டு தக்காளி கலவையோடு!!ம்ம்ம்ம்!!

வருடத்திற்கு ஒரு முறை,
பெரும் பண்டிகை நாட்களில்
(தை திருநாள்) பளியர்களோடு, வாரிக்கையன் மதிகெட்டானில் நுழைவதுண்டு!!
மதி கெட்டான் சோலை…………….

முறையான வழிகாட்டுதல் இன்றி,
மதிகெட்டானில் நுழைபவர்களுக்கு மதி கெட்டுத்தான் போகும்!!
சூரிய வெளிச்சம் சரியாக விழுகாததால், அடர் காடென்பதால்,
திசை தெரியாமல்,
உள்ளே,உள்ளே நுழைந்து,
காணாமல் போய் விடுவார்கள் என்பதால் அந்த காரணப் பெயர்!!!

அபூர்வ கரு மந்திகளுக்காகவும்,
கேளை ஆடுகளுக்காகவும்,
பெருந்தேன் கூடுகளுக்காகவும்தான்
(பாறை மலை தேன்) இவர்கள் மதி கெட்டான் சோலைக்குள் நுழைவது!!

ஒரு முறை,
உள்ளே நுழைந்து விட்டால்,
திரும்பவும் வெளியேறுவது,இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகே!!
அதுவரை, உணவும், உறைவிடமும்
மதி கெட்டானின் குகைகளே!!

கிடைக்கும் பறவை கீரிகளோ,கரு மந்திகளோ, கேளையாடோ, கடமானோ, காட்டு பன்றியோ, உரித்து பதப்படுத்த போவது,
தீ வண்டி பாறைக்கே…………!!!!

தீ வண்டி பாறை!!!!!

மதி கெட்டான் சோலையில் இருக்கும் ஒரு மிகப் பெரிய பாறை,
அதன் கீழே ஒரு சுனை………..
பாறையின் மேல் அமர்ந்து, கிட்டத்தட்ட முழு சோலையையும் பார்க்கும் வசதி,ஒரு பாதுகாப்பு!!

அன்றைய உணவுக்கு தேவையான இறைச்சி துண்டங்களை பொடியாக நறுக்கி, வெறும் உப்பும், மஞ்சளும், மிளகாய் தூளும் போட்டு பிரட்டி,
தீ வண்டி பாறையின் ஒரு மூலையில்,
விறகுகளை அடுக்கி, தீ வைத்து, பெரும் தணல் மூட்டி, அந்த பாறையை, தகிக்கும் இரும்புசட்டி போலாக்கி,
பின்னர்,
நெருப்பு துண்டங்களையும், சாம்பலையும் ஈச்சம் நார் கொண்டு,
மின்னல் வேகத்தில் கூட்டி தள்ளி,
அதன் மேல், நறுக்கிய இறைச்சி துண்டங்களை கொட்டி,பாறையின் வெப்பத்தில், திருப்பி,திருப்பி,
புரட்டி, புரட்டி வேக வைத்த கறியே,
“சூட்டான் கறி”………..

இவ்வாறு அன்றன்று தேவையான இறைச்சியை தின்றது போக,
மீதமுள்ள பெரும்பாலான இறைச்சியை,
பெரும், பெரும் துண்டங்களாகவே, சப்பை,சப்பையாக மஞ்சள் தடவி,
ஓரளவு சூடு குறைந்த, பாறையின் மேல் இட்டு, ஈரப்பதம் மட்டும் போகுமாறு
சுட்டு எடுத்து, வாழையிழையில் கட்டி வைத்து கொண்டால்
ஒரு வாரமானாலும்
கெடாது என்பார் அப்பா!!!

இப்படித்தான் அன்று இரவு சூட்டான் கறி தின்று விட்டு, மீதமுள்ள இறைச்சியை
பத்திரமாக வாழையிழையில் பொதிந்து விட்டு, அடிக்கும் குளிருக்கு இதமாக, நெருப்பை தூண்டி விட்டு,
தீ வண்டி பாறையின் இன்னொரு மூலையில் தூங்கியிருக்கின்றனர்.

வழக்கமாக மிகவும் அதிகாலையில், சூரியன் உதிப்பதற்கு முன்பே எழும் வழக்கமுள்ளவர் அப்பா!
அன்றும், காலை நாலரைக்கே எழுந்தரித்து, கீழே உள்ள சுனைக்கு இறங்கினால்,
சுனையின் மறுபுறமிருந்து
விநோத உறுமல் சப்தம் ஆக்ரோஷமாக ………..

பளியர்களை எழுப்பி காட்டியிருக்கிறார் வாரிக்கையன்……
அது ஒன்னுமில்ல,
நம்ம சுள்ளான்தான்(சிறுத்தை),
பசியிலேயும், கோவத்துலயும் உறுமுறாரு!!!அதோட குகை மேலதான் நாம இப்போ படுத்திருக்கிறது என்றிருக்கின்றனர் பளியர்கள் கூலாக!!!
ஆமாம்,
தீ வண்டி பாறையின் கீழே ஒரு குகை!!!!!

தொடரும்………………