வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 1

பறம்பில் வளர்ந்த தைரியத்தில், நான் பெரும் நண்டுகள் வளர்த்து பிடித்த அனுபவத்தை பகிரலாம் என நினைக்கிறேன்!!

1992 ன் இறுதியிலேயே நான் ஆந்திர மாநில நெய்தல் பகுதிக்கு வந்து விட்டாலும், இறால் பண்ணை தொழிலில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக, 94-95 களில் பச்சை நண்டு(Mud crabs) வளர்ப்பிற்கு, ஒரு சோதனை முயற்சியாக மாறினோம். அன்றும்,இன்றும் உள்ளூரிலும், உலக நாடுகளிலும் இந்த பச்சை நண்டுகளுக்கு நல்லதொரு வியாபார வாய்ப்பு உண்டு. உலகில் அநேகர் விரும்பி உண்ணும், சுவையான, சதை பிடிப்பான நண்டு வகையிது!!

கொடுக்குகள் உடையாமல், முழு நண்டுகளாக பிடித்து, அதை பக்குவமாக உயிரோடு சணல் கயிறுகளால் கட்டி ,அப்படியே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் டாலர்களில் பணம் கொட்டும்!!ஆனால், இதை வளர்ப்பதும், அறுவடை செய்வதும் (பிடித்து கட்டுவது) அத்தனை எளிதல்ல!!

முதலில் இதன் குஞ்சுகள் கிடைப்பது மிகவும் கடினம்!!அதன் பின், அதை சந்தைக்கு ஏற்ற அளவிற்கு (அரை கிலோக்கு மேல்) வளர்த்து, குட்டையில் இருந்து பிடிப்பதென்பது ஆகப்பெரும் சவால்!வளர்ப்பு குட்டையில் இருந்து, அரை கிலோ முதல் மூன்று கிலோக்கள் வரை வளர்த்து நிற்கும்
இந் நண்டுகளை பிடிக்க, முதலில் குட்டையில் இருக்கும் நீரை முழுவதும் வெளியேற்றி விட்டு, குட்டை முழுவதுமே இரு கொடுக்குகளையும் தூக்கி விரித்து நிரைந்து கிடக்கும் நண்டுகளை கவனமாக, கொடுக்குகள் உடையாதவாறு ஒவ்வொன்றாக பிடித்து கட்ட வேண்டும். கொடுக்குகள் உடைந்தால் ஏற்றுமதி செய்ய இயலாது.

கொடுக்குகள் உடையாமல் பிடிப்பதற்காக கவனமாக இருக்கிறேன் என்று நாம், நம் கால் விரல்கள் மீது அசட்டையாக இருந்தால், நம் கால் விரல்கள் நண்டுகளின் கொடுக்குகளுக்கு போய் விடும்.ஆமாம், நன்றாக வளர்ந்த நண்டுகள், மனித விரல்களை துண்டாக வெட்டும் ஆற்றல் படைத்தவையே!!!

இவ்வகை நண்டுகள், நதி கடலோடு கலக்கும் இடங்களில் உள்ள முகந்துவாரங்களிலும்,உப்பங்கழிகளில் உள்ள அலையாத்தி காடுகளில் மட்டுமே வளர கூடியவைகள்!!உப்பாற்று நண்டுகள்!!!ஆகவே,பழவேற்காடு, பிச்சாவரம், சுந்தரபன் போன்ற அலையாத்தி காடுகளுக்கு போகும் போது நீரில் இறங்கினால் இவ்வகை நண்டுகளின் கொடுக்குகளுக்கு சிக்கும் வாய்ப்புண்டு!!

இவ்வாறான சமயங்களில் நண்டுகள் காலையோ,விரலையோ அறக்கி பிடித்தால்,காலை அசைக்காது வைத்திருந்தால் (வலியை பொறுத்து கொண்டுதான்) சற்று நேரத்தில் நண்டு நம் விரலை விட்டு விடும்.ஆக,நம் விரல் நமக்கு!!!மீறி,கால்களை பதறி இழுத்தால் ஒன்று நண்டின் கொடுக்கு உடைந்து நம்
காலோடு வரும் அல்லது நம் விரல் நண்டோடு போகும், அவ்வளவுதான்!!

இப்படியான இந்த நண்டு குஞ்சுகளை மீனவர்களிடம் இருந்து சிறிது, சிறிதாக வாங்கி, வளர்ப்பு குட்டைகளில் இட்டு வளர்க்க தொடங்கினோம். அவைகளும் நன்றாகவே வளர்ந்தன. அறுவடை நாளும் வந்தது. பிடித்து கட்ட மீனவர்களும் வந்து விட்டனர். நீரை முழுவதுமாக வெளியேற்றி,குட்டையை பார்த்தால், ஆயிரக்கணக்கான கொடுக்குகள் இங்குமங்கும் அசைந்து கொண்டு!!!

அஞ்சு, பத்து நண்டுகளை ஆத்துல பிடிக்கறதே பெரிய விசயம், இத்தனை நண்டுகளை நாங்க எப்படி பிடிக்க என்று அரண்ட மீனவர்கள் ஓட்டம் எடுத்தனர் வீட்டிற்கு!!கங்காணி மீனவர் மட்டும், வாங்க சார் நாம பிடிப்போம், உங்களுக்கும் சொல்லித்தாரேன் நீங்க யாரு…….என்று, என்னை உசுப்பேத்த………….
இறங்கியே விட்டேன் குட்டையில்!!!

அப்படியே தக்குமுக்கி பிடித்து கட்ட பழகி,பாதி நண்டுகளை இருவர் மட்டுமே பிடித்திருப்போம் மதியம் உணவு இடைவேளை வரை!!அதன்பிறகு, பயம் தெளிந்து மற்றவர்களும் வர ,இடைவேளைக்குப் பிறகு இறங்கி குட்டையில் கால் வைத்தால், என் நடு பாதத்தை அறக்கி பிடித்தார் அந்த இரண்டு கிலோ “நண்டார்”………!!!

“நண்டு பிடி” இலக்கணப் படி அசையாது வைத்திருந்தேன் பாதத்தை!!ரத்தம் கசிந்து வெளியேறுகிறது; வலியும் மண்டைக்கேறுகிறது; ஆனாலும், அசைக்க வில்லையே…….அப்புறம், இவன் ரொம்ப “நல்லவன்ன்ன்னு”…………..
நண்டு என் பாதத்தை விட, அள்ளிக் கொண்டு வந்தேன் அந்த “நண்டாரை”……மனித புத்தி!!!

இப்படி அன்று பல பேரை பதம் பார்த்தது நண்டுகள்!!ஒரு வழியாக மொத்த நண்டுளையும் நல்லபடியாக அறுவடை செய்து முடித்தோம். எல்லோரும் பின்னங்கால் பிடரியில் பட ஓடினாலும், அன்று அந்த நண்டுகளை பிடிக்க குட்டையில் இறங்கும் துணிச்சலை கொடுத்தது எங்கள் பறம்பில் நான் வாழ்ந்த வாழ்க்கையே!!!