வாரிக்கையன் சாகசங்கள் – பாகம் 5

செம்மஞ்சேரலை வீழ்த்தி,சேரனின் குதிரைகளை கைப்பற்றி,பாரி தம் புதிய குதிரைப்படையை அமைத்ததை படித்ததிலிருந்தும்,தட்டியங்காட்டில் பறம்பின் குதிரைகள் செய்த சாகசங்கள் மற்றும் தோகை நாய்களிடமிருந்து குதிரைகளை காப்பாற்ற பதைபதைப்புடன் பறம்பினர் செய்த முயற்சிகள் போன்ற சிலிர்ப்பூட்டும் அத்தியாயங்கள்,எங்கள் பறம்பில் குதிரைகளுடனான என் நினைவுகளை தட்டி தூக்கின!

ஏறக்குறைய பதினைந்து குதிரைகளை நாங்கள் வைத்திருந்தோம்.அகமலையின் சுற்று வட்டத்திலிருந்த எங்களின் தோட்டங்களிலிருந்து விளை பொருட்களை கீழே கொண்டு வருவதற்கு இன்றும் ஒரே வழி குதிரைகள்தான் எங்களுக்கு!காலையில் ஆரம்பிக்கும் பயணம் மாலையில் பெரியகுளத்தில் வந்து முடியும்!கிட்டத்தட்ட இருபத்தியெட்டு கி.மீ நடை!குதிரைகள் பொதியோடு,நாங்கள் கை பொறுக்கும் சுமையோடு!மலை மக்கள் குதிரையை எப்பொழுதும் சவாரிக்கு பயன் படுத்துவதில்லை.மேலிருந்து விளை பயிர்களை கொண்டு வரவும்,கீழேயிருந்து பலசரக்கு சாமான்களை சிப்பம் போட்டு மேலே கொண்டு போகவும் மட்டுமே!பெரும்பாலும் குதிரைகள் காலியாக வந்தாலும்(எப்போதாவது)நாங்கள் குதிரை மேல் ஏற மாட்டோம்.அப்படியே வெறும் குதிரையை பத்திக் கொண்டு போவது தான்!ஏனெனில்,ஒற்றையடி பாதையில்,மலைசரிவுகளில்,குண்டாங்கற்களாக குவிந்திருக்கும் பாதையில் குதிரை மேல் சவாரி செய்வது நடந்து செல்வதை விட கடினமானது,வலி தருவது அதை விட அந்த மட்டக் குதிரைகளை இம்சிப்பது!

ஆமாம்,நாங்கள் பயன் படுத்துவது உயரம் குறைவான மட்டக் குதிரைகள்!பந்தயக் குதிரைகளை போன்ற ஓங்குதாங்கான ஆறடி குதிரைகள் அல்ல! அந்த பெரிய குதிரைகள்தாம் பந்தயத்திற்கும்,படைக்கும்,உல்லாச சவாரிக்கும் பயன்படும்.நாங்கள் பயன் படுத்துவது நான்கு,ஐந்தடி உயரம் உள்ள மட்டக் குதிரைகள்!நன்றாக பாரம் சுமக்கும்!!எழுபது முதல் நூறு கிலோ சிப்பங்கள் வரை அனாயாசமாக சுமக்கும் காலை முதல் மாலை வரை!பந்தயக் குதிரைகள் வெறும் அலங்கார குதிரைகளே!!ஆகவே,பெரும்பாலும் நாங்கள் குறிஞ்சியில் இருக்கும் போது குதிரை மீது ஏறவே மாட்டோம்.

மேலும் எங்களின் குதிரைகளும் அடிக்கடி பெரியகுளம் வரை வராமல்,சோத்துப்பாறை அடிவாரம் வரை வந்து விட்டு,சிப்பங்களை மாட்டு வண்டிகளில் ஏற்றி விட்டு,மீண்டும் மலையேறி விடும் அன்றே!!வருடங்களுக்கு ஓரிரு முறை மட்டுமே கீழே வீடு வரை வரும்!!அப்படி வரும் நாட்களில் எனக்கு பண்டிகைதான்!

மாலை நான்கு மணிக்கு நான் பள்ளி விட்டு வந்து,வாசலில் குதிரைகள் கட்டப் பட்டிருப்பதை பார்த்தால் மனம் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விடும்.புத்தகப்பையை அரக்க பறக்க வீசியெறிந்து விட்டு, பளியர் அண்ணன்களுடன் சேர்த்து குதிரைகளை குளிப்பாட்ட வராகநதிக்கு ஓடி விடுவேன்.பெரியகுளம் நகரை சரி பாதியாக கிழித்துக் கொண்டு ஓடும் நதிதான் வராகநதி!!வைரமுத்துவின் “வராக நதிக்கரையோரம் ஒரேயொரு…….”அந்த நதியேதான்!அன்றெல்லாம்,பளிங்கு போல் முழங்காலளவு தண்ணீர் வருடம் முழுவதும் ஆற்றின் நடுவே ஓடும்!இரு படித்துறைகளிலும்(வடகரை,தென்கரையென)துணி துவைக்கும்,குளிக்கும் பெண்கள்,ஆண்களென வருடம் முழுவதும் திருவிழா கோலம்தான்!நடுவில் பளிங்கு போல ஓடும் நீர்,உள்ளே துள்ளிக் குதிக்கும் வெள்ளிக் கெண்டைகள்,ஆற்றின் இருபுறமும் வெண் மணல் கூட்டங்கள்,மணற்பகுதியை தாண்டி படித்துறைகள்,ஆற்றை ஒட்டியே கிழக்கிலும்,மேற்கிலுமாக தென்னந்தோப்புகள்,அதைத் தாண்டி நீளும் வீடுகள்,தெருக்கள் என விரியும் நகரமென அதி அற்புதமான ஊர் பெரியகுளம்!

அந்த அழகான ஆற்றுக்கு குதிரைகளை கொண்டு சென்று,அவிழ்த்து விட்டவுடனேயே குதிரைகள் அலுப்பு தீர வெண் மணலில் விழுந்து புரளும்,பின் எழுந்து,கணைத்துக் கொண்டே உடலை சிலுப்புகிற சிலுப்பில் மணற் துகள்கள் போர் களம் போல எண்திசைகளிலும் பறக்கும் புகை போல்,பனி போல்!!
அதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேல் நிதானமாக குதிரைகளை பளியர் அண்ணன்கள்,உண்ணிப் பூச்சிகள் பறித்து,தேங்காய் சிரட்டையால் தேய்த்து குளிப்பாட்டி கரையேற்றிய அடுத்த நொடி குதிரைகள் மீண்டும் மணலில் விழுந்து புரளும்,பின் எழுந்து சிலுப்பும் சிலுப்பில் வாணவிற்கள் பறக்கும் பல வண்ணங்களில்,பல திசைகளில்!அது ஒரு அதி அற்புத காட்சி!அண்ணன்கள் குதிரைகளை நிதானமாக குளிப்பாட்டும் அந்த ஒரு மணி நேரம்தான் எனக்கான நேரம்!குதிரைகளின் காதில் நீர் போகாதவாறு குளிப்பாட்ட வேண்டுமென பலமுறை வலியுறுத்தி சொல்லி அனுப்புவார் அப்பா!ஆகவே,ஆதிவாசி அண்ணன்கள் நிதானமாக குளிப்பாட்டுவார்கள் குதிரைகளை!அப்பொழுது எனக்கு பிடித்த,நட்பான குதிரை ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு,விரி,வெண்டயம்,சேனை,கடிவாளம் ஏதுமில்லாமல்(குதிரைகள் வசதியாக பாரம் சுமக்கவும்,சவாரி செய்பவன் கீழே விழுந்துவிழுந்து விடாமல் இருக்க உதவும் உபகரணங்கள்)வெறும் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு முழங்காலளவு நீர் ஓடும் ஆற்றில்,எதிர் காற்றில் பறக்கும் குதிரையின் பிடரி முடியை பிடித்துக் கொண்டு,மனதில் மலைக்கள்ளன் எம்ஜிஆர் போன்று நினைத்துக் கொண்டு அப்படியே பறப்பேன் காற்றின் வேகத்தில்,ஆலா வேகத்தில்!அப்படியே ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் மீதிருந்து ஆற்றில் தாவி குதித்து,மீண்டும்,அதே வேகத்தில் குதிரையின் மீது தாவி ஏறி பயணிக்கும் கதாநாயகத்துவம் இருக்கிறதே,அடடா அடடா!!!ஆடுபாலத்தின் மேலிருந்து(பிதாமகன் படத்தில் ஒரு சலூனிலிருந்து விக்ரமை துரத்தி கொண்டு சூர்யா ஓடுவாரே அந்த பாலம்தான்,இன்று அது இல்லை)பொதுமக்கள் இந்த காட்சியை வேடிக்கை பார்க்க,நான் ஹீரோ என்று நினைத்து கொண்டு மீண்டும் மீண்டும் பறப்பேன் குதிரை மீது!!இப்போது புரிகிறது,நான் காட்டியது காசு வாங்காத சர்க்கஸ் என!!ஆடுபாலத்தின் அடியில் ஆரம்பித்து குண்டாங்கற்கள் கிடக்கும் ஆற்றின் மேல் முனை வரை கிட்டத்தட்ட ஒரு கி.மீ போய் திரும்புவது என,அது ஒரு அட்டகாசமான,சாகசப்பயணம்,வெறும் குதிரைகளின் மீது பயணிக்கும் பொழுது,பிடறியை குதிரைக்கு வலிக்காதவாறு பற்றிக்கொண்டு,குதிரையின் வயிற்றை லாவகமாக பற்றிக்கொண்டால்,குதிரை நம்மை தூக்கியெறியாது,மாறாக குதிரைகளை வெறியேற்றினால் குண்டாங்கற்களின் மீது சிதறு தேங்காய்தான்!!

எங்கள் பறம்பில் நாங்கள் என்றும் நம்புவது நாட்டு குதிரைகளையும்,நாட்டு நாய்களையும்தான்!!அதிலும் எனக்கு குதிரைகளின் மீது அதீத காதல்!!இதோ,இப்பொழுதும்,முப்பது வருடங்களுக்கு பிறகும் குதிரைகளின் அந்த வாசம் மூக்கில் பரவுகிறது!ராம்,லட்சுமணன்,லட்சுமி,செவலை,பெருமாள் என்று தொடரும் அந்த குதிரைகளின் பெயர்களும்,அவற்றின் நினைவுகளும் எங்களுடன்!இன்று குதிரைகள் உள்ளன,ஆனால்,அந்த வராகநதிதான் சாக்கடையாய்….………