குறிஞ்சித் திணை 6

இடம்- பட்டூர்.

மூலக்கதை- ஆசான் சு. வெங்கடேசன்.

இது நான் விடும் கதை-6
தொடர்கிறது……

குட்டன் சுமந்து வந்த செய்தி
பாரிக்கு கடும் கோபத்தை வரவழைத்திருந்தாலும் , விரைந்து முடிவெடுப்பதில் பாரிக்கு நிகர் பாரியேதான் என்பதால், செய்தி சுமந்து வந்த பறம்பு வீரன் உணவருந்தி வெளியேறுவதற்குள் பாரியின் மனதில் முழு திட்டமும் உருவாகி, பாரியின் கண்கள் ஆழமான கடல் போல தெளிவானது!

பழையனை வணங்கி குட்டன் வெளியேற, பழையனின் கையிலிருந்த அவித்த காய்களை வாங்கி பாரி பசியாற ஆரம்பித்தான்.

பாரியின் சிவந்த கண்கள், கோபம் தணிந்து அமைதியுற்றதை கண்ட பழையன், “என்ன பாரி! சோழன் எழுவனாறு வழியாக பறம்பின் எல்லையை தொட்டு விட்டானா? அன்னியனொருவன் பறம்பில் கால் வைத்ததை பொறுக்காமல் உன் கண்கள் தேறலை அருந்தாமலேயே சிவந்து விட்டதே?” என கேட்டார்.

“சேரனும் கூட ஆயி மலை வழியாக பறம்பில் நுழைந்து விட்டானாம் “
பாரி மெல்லிய புன்னகையோடு இதைச் சொல்ல பழையனுக்கும், பட்டூர் பெரியாத்தாளுக்கும் கோபத்தில் உடல் துடிக்க ஆரம்பித்தன!

“நீலன், மயிலா திருமணத்திற்கு எல்லோரும் கிளம்பி வேட்டுவன் பாறைக்கு நேற்றே போய் விட்டனராம்!
கிளிமூக்கு மாங்காய் பறிக்கப் போன
அங்கவையும், உதிரனும் இன்னும் திரும்ப வில்லை! சேரன் பறம்பில் நுழைந்த செய்தி கேட்ட தேக்கன் ஒரு சிறு படையுடன் ஆயி மலைக்கு போயிருக்கிறார்!
சோழனும் இன்னும் இரண்டு தினங்களில் பாழி நகர் செல்லும் பாதையில் திரும்பி விடுவானாம்!
கூவல் குடியினரின் செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம்!” என்று நிறுத்தாமல், ஆனால், நிதானமாக பாரி சொல்லி முடிக்க,

பெரியாத்தா, தண்டட்டிகள் எகிறி குதிக்க தின்னையிலிருந்து தாவி களத்திலிறங்கி கண்களை உருட்டி, நாவை புரட்டி உரத்த குரலில் குலவையிட ஆரம்பித்தாள்!

பெரியாத்தாளின் கோபம் கண்ட பட்டூர் குடிகள் அடுத்த கணம் ஆத்தாளை சூழ, “கிளம்புங்கள் ஆயி மலைக்கும், எழுவனாற்றுக்கும்!
அந்த சேர, சோழனின் தலைகளை கொண்டு வந்து கொற்றவையின் காலடியில் புதையுங்களடா ” என பெரியாத்தா அரற்றிய வேகத்தில், பட்டூரின் இளைஞர்கள் ஆயுத பட்டறையை நோக்கி பாய்ந்த கணம்……..

” கொஞ்சம் நில்லுங்கள் ! “
பாரியின் இடி குரல் கேட்டு பட்டூர் இளைஞர்கள் அதிர்ந்து நிற்க , “நாளை காலை கிளம்புவோம்! உணவருந்தி விட்டு, நன்றாக ஓய்வெடுங்கள்! நாளை முதல் உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது! என்ற பாரியின் ஆணை கேட்டு, இலைகளை கையோடு எடுத்துக் கொண்டு அவரவர் குடில் நோக்கி போயினர் பறம்பின் ஆணும், பெண்ணும்!

குலவையிடுவதை நிறுத்தி விட்டாலும், பெரியாத்தாளின் உடல் மட்டும் கோபத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

“மகனே பாரி, பறம்பில் கால் வைத்த எதிரி எவனும் உயிரோடு அவர்களின் நாட்டுக்கு திரும்பி விடக் கூடாது! மீறி தப்பியோடுபவனின் உடலும் ஒச்சப்பட்டே போக வேண்டும்! முழுமையாக எவனையும் போக விட்டு விடாதே” பற்களை கடித்து, விழிகளை உருட்டி ஆணையிட்டாள் பெரியாத்தா.

“பாரியின் ஆழமான கண்களை பார் கிழவி, எதிரிகளின் சாவுக்கு பிறகான அமைதி தெரியவில்லையா? முடிவெடுத்து விட்டான் பாரி” என்றார் பட்டூர் பழையன்!

அதன் பின், ஆதினியும், பாரியும்
அவித்த காய்களையும், பயிரையும், வெந்து மலர்ந்திருந்த கிழங்குகளையும் நிதானமாக உண்டு முடிக்க, “இன்னும் எத்தனை நாட்கள் கழித்து உண்ணப் போகிறோனா பாரி! பகைவரை சிதறடித்து விரட்டும் வரை இனி கண் துஞ்ச மாட்டானே என் அருமை மகன்” என்று கண் கலங்கிய பழையன் ,
சரி பாரி! இனி நீயும் உறங்கச் செல்! காலை, கதிரவன் விழிக்கும் முன் சந்திப்போம்” என்றார் .

“உன் எண்ணம் நிறைவேறும் பெரியாத்தா! போய் நிம்மதியாக ஓய்வெடு! பழையனையும் கொஞ்சம் கவனித்துக் கொள்! பகைவர்களின் மீதுள்ள கோபத்தை பழையனிடம் காட்டி விடாதே ” என்று பெரியாத்தாவிடம் கூறிய பாரி
கண் சிமிட்டி சிரித்து பழையன் பக்கம் திரும்ப………

“இன்றிரவும் உன் கையில்தான் இருக்க வேண்டும் ஆதினி ” என்று பெரியாத்தாவும் ஆதினியின் காதில் கிசுகிசுக்க, ஆதினியும் முகம் சிவந்து தலையாட்டினாள்.

பழையனிடமும், பெரியாத்தளிடமும் விடைபெற்று கொடித்தொட்டிலுக்கு திரும்பினர் பாரியும், ஆதினியும்.

கொடித்தொட்டிலில் விழுந்தவுடன்,
கை, கால்களை விரித்து மல்லாந்து படுத்த பாரி, இடைவெளி விட்டு பின்னிய கொடிகளின் வழியே தெரிந்த நட்சத்திர கூட்டங்களை பார்க்க ஆரம்பித்தான்.

“இங்கே வா ஆதினி! என் அருகில் வந்து இந்த நீல நட்சத்திரத்தை பார்” என்றான் பாரி.

தொட்டிலில் பாரிக்கு சற்றே தூரத்தில் குப்புற படுத்துக் கொண்டு, பின்னலின் வழியே, கீழே விரியும் பட்டூரின் சரிவில் பறந்து கொண்டிருந்த மின்மினிகளை பார்த்து கொண்டிருந்த ஆதினி,
“நீங்கள் கொஞ்சம் என் பக்கம் வந்து இந்த மிதக்கும் நட்சத்திரங்களை பார்க்கிறீர்களா? அதிலும் அந்த பெரிய நிசாப்பூச்சியை பாருங்கள்! மற்றவற்றை விட எத்தனை பெரியதாக இருக்கிறதென்று?” என கேட்டவள் பாரியின் இடுப்புப் பட்டையை தனது வலது கையால் பிடித்து தன் பக்கம் இழுத்தாள்!

ஆதினியின் ஒற்றை இழுப்பில் நீல நட்சத்திரத்தை அந்தரத்தில் விட்டு விட்டு ஆதினி பக்கம் வந்த பாரி,
தன் இடது கையை ஆதினியின் முதுகில் படற விட்ட படி, ஆதினியின் கன்னத்தோடு, கன்னம் வைத்து, “எந்த நட்சத்திரத்தை பார்க்க சொல்கிறாய்?” ஆதினி என்றான் குறும்பாக!

“சற்றே குனிந்து, நான் பார்க்கும் இந்த இடுக்குகளின் வழியே தெரியும் அந்த பெரிய நிசாப்பூச்சியை பாருங்கள்! எத்தனை பெரியதாக இருக்கிறதென்று! அதுவும், தேறலருந்திய பூச்சி போல் ஏன் அது தள்ளாடி, தள்ளாடி பறக்கிறது? அப்படியே என் மேலிருக்கும் உங்கள் கையையும் எடுத்து விட்டு இன்னும் உன்னிப்பாக பாருங்கள்! அப்போதுதான் தெரியும் அந்த பூச்சியும், அதன் நிலையும்” என்றாள் ஆதினி!

“அந்த பூச்சியின் நிலையை சொல்ல நான் ஏன் கையை எடுக்க வேண்டும் ஆதினி? நான் என்ன கைகளாலா பார்க்க போகிறேன்! அதுவுமில்லாமல், கொடித்தொட்டிலில், அந்தரத்தில் காதல் செய்யும் வாய்ப்பு மனிதர்களுக்கு எப்போதாவது தான் கிடைக்கும்! பறந்து கொண்டே வம்சத்தை தழைக்க வைக்கும் பெருமைகளெல்லாம் சில பூச்சியினங்களுக்கே உண்டு!
இன்று அந்த மின்மினிகளுக்கு
தலை இரவாயிருக்கும்! தலையிரவு கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் பூச்சிகள் தள்ளாடுவதில் வியப்பென்ன?! வா! நாமும் மின்மினிகளாய் மாறுவோமென்றான்” பாரி!

“நாளைக்கான போர் தந்திரங்களை இன்றே தொடங்கி விட்டான் பாரி”
என்று நினைத்த ஆதினி, “நடைபெறுகின்ற செயல்களும் உங்களுக்கு சாதகமாகத்தான் நடக்கின்றன, நான்தான் அறியாமல் சிக்கி விடுகிறேன் போல” என்றாள் முகம் சிவந்து!

“எது எனக்கு சாதகமாக நடக்கிறது ஆதினி? சேரனின் தந்திர தாக்குதலா இல்லை, சோழனின் யானை படையெடுப்பா? ” திரும்பவும் மல்லாந்து படுத்து, குப்புற கவிழ்ந்திருந்த ஆதினியின் முகத்தை தன் பக்கம் இழுத்து, சிரித்துக் கொண்டே கேட்டான் பாரி.

“யானைகளை நம்பி களமிறங்கியிருக்கிறானா சோழன்?பிறகு, இந்த சேரனின் தந்திரமும் என்னவோ? “முகம் சுருக்கி
கேட்டாள் ஆதினி .

“முகத்தை சுருக்கினாலும் உன் முகப் பொலிவில் குறைவில்லை ஆதினி “
என்றபடியே இரு கைகளாலும் ஆதினியின் முகத்தை ஏந்தப் போனான் பாரி.

“ம்கூம்! நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்! குட்டன் வந்து தகவல் தெரிவித்தவுடனேயே உங்களின் கண்களில் தெரிந்த கோபத்திலும், பின்னர் அது தணிந்த வேகத்திலும் நீங்கள் முழு தாக்குதலையும் வடிவமைத்து விட்டீர்களென்று புரிந்து விட்டது! என்ன செய்யப் போகிறீர்கள் சோழனை? ” பொய்க் கோபத்துடன், முகத்தை சற்றே விலக்கிய படியே கேட்டாள் ஆதினி.

“யானைகளை நம்பியது ஒன்றும் சோழனின் தவறில்லை! சமவெளி மனிதர்கள் பெரிதானது எல்லாம் வலிமையானதென நம்புவார்கள்.
அது எத்தனை தவறென்று இயற்கை அவனுக்கு விரைவில் கற்பிக்கும்!
ஆனால், மலைகளை நன்கு தெரிந்த எவனோ ஒருவன் வழி நடத்திதான் இத்தனை தூரம் நம்பிக்கையோடு வருகிறான் என நினைக்கிறேன்” என்றான் பாரி.

“உங்கள் கணிப்பு நிச்சயம் சரிதான்! சமவெளி சோழன் இத்தனை நம்பிக்கையோடு பறம்பில் நுழைகிறானென்றால் மலை குடிகளின் வழிகாட்டுதலின்றி இயலாது! பார்ப்போம், இது யாருடைய வேலையென்று! ஆமாம், சோழனை எப்படி வீழ்த்துவீர்கள்? நிச்சயம் சோழனின் வேழத்தை வைத்துதான் சிதற விடுவீர்கள் என நினைக்கிறேன்! என்ன சங்கு அட்டையா? ” என சிரித்தாள் ஆதினி!

” உனக்கு தெரியாத எந்த தற்காப்பு முறையாவது பறம்பில் உண்டா ஆதினி? ” கேட்ட பாரியின் கண்களிலும் அத்தனை பெருமிதம்.

“ஆமாம் , சேரனின் தந்திரம் என்ன? அவன் தந்தையின் மரணம் சேரனுக்கு, அவன் உயிரோடுக்கும் வரை மரண பயத்தை கொடுக்குமே! எந்த துணிச்சலில் பறம்பின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறான்?அவனின் தந்தை பறம்பிற்கு குதிரைகளை கொடுத்தான்! தனயன் என்ன கொடுக்கப் போகிறானோ?! “
என்று கேட்ட ஆதினிக்கு ,

“இனி ஆக்கப்பூர்வமான எந்த விலங்கையும் பறம்பில் இறக்க மாட்டான் சேரன்! பெரும் அழிவு சக்திகளை மட்டும்தான் களமிறக்குவான்! அழிவுகளை மட்டுமே செய்யும் எதையும் பறம்பு முற்றிலுமாக துடைத்தெறியும்” என்ற பாரியின் கண்களில் மெல்லிய ஆவேசம்!

“கொஞ்சம் கவனமாகவும் இருங்கள்!போர் முடிந்ததும் பறம்பில் திரியும் யானைகளை குணப்படுத்த தந்ததமுத்து காரர்களையும் நான் தயார் செய்து அனுப்பி விடுகிறேன்”
என்ற ஆதினியின் கண்களில் சோழ வேழங்களின் மீதான பரிவு தெரிந்தது.

“ஆமாம்! இன்றிரவு மொத்தமும் பேசிக் கொண்டு மட்டுமே தான் இருக்கப் போகிறோமா? பெரியாத்தாளின் யோசனை என்னவோ? ” என்றான் பாரி, மயக்கும் சிரிப்பை உதிர்த்த படி!

“உங்கள் முதுகிலும் கண்கள் உண்டோ” கேட்டாள் ஆதினி!

“நான் பழையன் பக்கம் திரும்பியவுடன், பெரியாத்தாளின் மூக்கு அணி,
உன் காது கொப்புகளின் மேலுரசி எழுப்பிய சப்தம் கேட்டேன்!
பின்னர் திரும்பி உன் முகம் கண்டால், கன்னங்களின் சிவப்பும் எனக்கு தகவலை சொல்லி விட்டது ” என்ற பாரியின் கூற்றை கேட்டவுடன் சத்தமாக சிரித்து விட்டாள் ஆதினி!

“வழக்கம் போலவே இன்றைய இரவையும் உன்னையே
ஆளச் சொன்னாளா பெரியாத்தா? பாரியே ஆதினிக்குள் அடக்கமென்று பெரியாத்தாளுக்கு எப்படி தெரியாமல் போனது? ஒரு வேளை பழையனுக்கு பயிற்சி போத வில்லையோ? காட்டை முழுமையாக அறிந்த பழையனுக்கும் கூட பெண்கள் பற்றிய முழு புரிதலும்
இல்லையே” என்ற பாரியை நோக்கிய
ஆதினி,

“அப்படியானால் உங்களுக்கு பெண்கள் குறித்து முழுமையாக புரிந்து விட்டதா” என்றாள்.

“எனக்கு என் ஆதினியை முழுமையாக தெரியும்” என்று பாரி சொல்லி முடித்த கணம்…..

பாரியின் படர் மார்பில் தஞ்சம் புகுந்தாள் ஆதினி!

ஆதவனின் தனல் அடர் பனியை உருக்க, உருகிய பனி கரைந்து, புனலாய் நிலமெங்கும் பரவ, பரவிய புனல், காத்திருந்த உயிர்களை செழிப்பூட்ட, மதர்த்த உயிர்கள் உண்ட புனலை ஆதவனை நோக்கி திருப்ப,
தனலும், புனலும் கரைத்து, கரைந்து தொடர் விளையாட்டை நடத்த, பறம்பின் ஆற்றல் முழுவதையும் தன்னில் கரைத்து கொண்டிருந்தான் பாரி! தான் கரைந்து, தானே கரைத்து தன் ஆதியாற்றலை பாரிக்கு கொடுத்து கொண்டிருந்தாள் ஆதினி!

கதிரவன் விழிப்பதற்கு முன்பே, விழித்து குரலெலுப்பும் கொண்டலாத்தியின் நீளக் குரலில் கண் விழித்த ஆதினியும், பாரியும் பட்டூர் களத்தையடைய…….

சுளுந்தீ வெளிச்சத்தில் மொத்த பட்டூர் படையும் தயாராக இருந்தது வில் மற்றும் வாளேந்தி!

பழையனிடம் சென்ற பாரி, வீரர்களை இரு பிரிவாக பிரித்து, ஒரு பிரிவை ஆயி மலைக்கும், இன்னொரு பிரிவை எழுவனாற்றுக்கும் அனுப்ப உத்தரவிட்டான். ஆயிமலையில் தேக்கனும், எழுவனாற்றில் நானும் உங்களோடு இருப்போம் என்று பாரி உத்திரவாதம் கொடுத்ததும் பறம்பு வீரர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் இன்னும் விழிக்காத பட்டூர் பறவைகளை எழுப்பியது.

பெரியாத்தா வெற்றி குலவையிட்டு தொடங்கி வைக்க, வீரர்கள் பிரிந்து சரிவில் இறங்கி மறைந்தனர்.

வீரர்களை ஆசிர்வதித்து அனுப்பிய பெரியாத்தா, பாரியையும் உச்சி முகர்ந்து தலை தடவி, வலுவேற்றிய பெரியாத்தா, பாரியின் முகத்தில் தெரிந்த அமைதியையும், உடலில் இருந்த குளிர்ச்சியையும் வைத்து கொடித்தொட்டில் இரவை கணித்தவள், ஆதினியை அழைத்து கட்டித் தழுவி, கன்னங்களில் முத்தமிட்டு, “நீயிருக்கும் வரை பாரிக்கும், பறம்பிற்கும் எந்த குறைவுமிருக்காது! நீடுழி வாழ் மகளே! உன் வலிமைதான் பறம்பின் அரன்! இந்த பொதினியின் மகள் பறம்பை தாய்க்கோழி போல காப்பாள்! சென்று வாருங்கள் குழந்தைகளே! வெற்றிச் செய்திக்காக இந்த கிழவி உறங்காமல் காத்திருப்பேன்” என்று ஆசிர்வதித்து விடை கொடுத்தாள்.

பழையனிடமும், பெரியாத்தாளிடமும், பட்டூரின் குழந்தைகளிடமும் விடை பெற்று முயல் புல் மேட்டை நோக்கி பாரியும், ஆதினியும் பட்டூரின் கிழக்கு சரிவில் இறங்க, மேற்கை நோக்கிய தன் பயணத்தை தொடங்கிய கதிரவனும் தன் செந்நிற கதிர்களை பறம்பின் தலைவன், தலைவியின் முகத்தில் வெற்றி திலகமாயிட்டு வரவேற்றான்!

ஆதவனின் ஒளி மெதுவாக மேலேற,
பாரியும், ஆதினியும் சரிவில் விரைந்து கொண்டிருந்தனர்!

ஐந்து நாழிகைகளுக்குப் பிறகு,
ஆதினியும், பாரியும் முயல் புல் மேட்டை அடைந்த போது பிட்டனும், எயினியும் கையில் ஆளுக்கொரு குதிரைகளை பிடித்து கொண்டு தயாராக நின்றிருந்தனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு போதைப்புல் மேட்டை நோக்கி கிளம்பிய பறம்பின் தலைவனும், தலைவியும் புதிதாக மனம் முடித்த இணையர்களாகவே தெரிந்தனர் எவ்வியூர் மக்களுக்கு! ஆனால், சேரனும், சோழனும் பறம்பில் நுழைந்த செய்தி கேட்டு திரும்பிய அதே தலைவனும், தலைவியும் இன்று பசித்த வேங்கைகளாகவே தெரிந்தனர் பிட்டனுக்கும், எயினிக்கும்!

முயல்புல் மேட்டில் தலைநாளன்று விட்டுச் சென்ற தேர் முழுவதும் முல்லை கொடியால் மூடப்பட்டு, பறம்பை போலவே தேரும் செழித்து, பூத்து கிடந்தது ஆதினிக்கு, அங்கவையையும், சங்கவையும் மனதிற்குள் மலர்த்தியது!

கொடிகள் மேலும் படர்ந்து விரிய இடையூறாக இருந்த நஞ்சு முள் இன்டங்கொடிகளை தன் குறுவாளால் வெட்டியெறிந்து, தொடர்ந்து படற வழி செய்து, முல்லைக்கொடியை ஆதுரமாக ஆதினி வருடிக்கொடுத்தது, தாய்ப்புலி தன் குட்டிகளை வருடிக் கொடுப்பதாகவே தோன்றியது பாரிக்கும் கூட!

முல்லையை வருடிக் கொடுத்த ஆதினியும், பாரியும் அதனிடம் விடைபெற்று பிட்டன், எயினியிடம் வந்து, ” பிட்டா, நீ இங்கிருந்தே எழுவனாற்றுக்கு போ! எயினி, நீ சென்று தேக்கனோடு இணைந்து கொள்! நாங்கள் எவ்வியூருக்கு சென்று , அங்கிருந்து வேட்டுவன் பாறைக்கு போய் விட்டு , எழுவனாற்றில் உன்னோடு சேர்ந்து கொள்கிறேன் பிட்டா” என்று ஆணையிட்ட பாரி, செவலை புரவியில் தாவியேற, கறுத்த புரவியில் தாவியேறிய ஆதினியின் வேகம் கண்டு பாரியே ஒரு கணம் திகைத்து நின்றான்!

அடுத்த கணம் ஆதினியின் கருங்குதிரை எவ்வியூர் தடத்தில் விரைய, பாரியின் செவலையும் பின்னங்கால் பாய்ச்சலை தொடர்ந்தது!

புழுதியை கிளப்பிக் கொண்டு சரிவில் பாயும் குதிரைகளையே பெருமிதமாக பார்த்து, ரசித்து, புன்னகைத்து இரு வேறு திசைகளில் பிரிந்து நகர்ந்தனர் பறம்பின் இளம் தளபதிகள் பிட்டனும், எயினியும்!

குறிஞ்சி திணை நிறைவுற்றது.

கதையின் கதை –

நீலன், மயிலா மன நாளுக்கு பரிசளிக்க அங்கவையும், உதிரனும் கிளி மூக்கு மாங்கனி பறிக்கப்போக, வேட்டுவன் பாறைக்கு கிளம்புவதற்கு முன் ஆதினியும், பாரியும் ஒரு முன் தயாரிப்பாக, இரு தினங்களுக்கு மட்டும் காட்டுக்குள் புகுந்தால் எப்படியிருந்திருக்கும்!? குறிஞ்சியின் தலைவன், தலைவி காதல் எப்படியெல்லாம் இருந்திருக்கலாம் என்ற , பறம்பில் நாங்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் செய்த ஒரு கற்பனையே இது! இதை ஊக்குவித்து, பாராட்டி, தவறுகளை சுட்டிக்காட்டி நெறிப்படுத்திய மன்றத்து உறவுகள் அனைவருக்கும் நன்றி!

இது, இரு நாள் நிகழ்வென்பதால் ஆறு வாரங்களுக்கு மட்டுமே திட்டமிட்டேன். இத்தனை விரைவாக முடிக்க வேண்டாமென்ற கட்டளைகளும், ” மிரட்டல்களும் ” கூட வந்தன!

இன்னுமொரு “இடத்தை” அடுத்து எடுத்துக் கொண்டு, விரைவில் பல வாரங்களுக்கு தொடர்ந்து விடுகிறேன்!

நன்றி சொந்தங்களே!

About Thiruppathi Vasagan 2 Articles
வீரயுக நாயகன் வேள்பாரி நூறாவது வாரத்தை எட்டியதையொட்டி விகடன் விழா எடுத்தது. இதை ‘விகடன் விழா’ என்று சொல்வதா, ‘வாசகர்கள் விழா’ என்று சொல்வதா என்று சொல் மயக்கம், பொருள் மயக்கம் வருமளவுக்கு சென்னை இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன் அரங்கத்துக்கு வாசகர்கள் திரளாக வந்திருந்து நம்மை மயங்கவைத்தனர்; மலைக்கவைத்தனர்.