குறிஞ்சித் திணை 7

Elephant Eye

இடம்- வேழமுகப் பாறை

மூலக்கதை-ஆசான் சு.வெங்கடேசன்.

இது நான் விடும் கதை- 5 தொடர்கிறது………..

Elephant Eye

கொடித்தொட்டில் என்ற பெயரை கேட்டவுடன் முழு நிலவாக மலர்ந்த பாரியின் மனம், அப்படியே உள்ளுக்குள் நழுவி பாரியின்
சிறு வயது காலத்திற்கு போனது!

பெரும்பனையனும், ஆதிரையும் பட்டூருக்கு வரும் போதெல்லாம் பாரியும் வந்து விடுவான்! பட்டூருக்கு வந்து பழையனையும், பெரியாத்தாளையும் சந்தித்து, அவர்கள் உருட்டி, உருட்டி தரும் தேன்,தினைமாவு உருண்டைகளை உண்டு விட்டு, தன் வயதொத்த சிறுவர்களை அழைத்து கொண்டு வேழமுகப் பாறைக்கு ஓடி விடுவான்!

“வேழ முகப்பாறை……….”

பட்டூரிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருக்கும் ஒரு பெரும்பாறை! பட்டூரின் சரிவில் இறங்கி நடக்கும் சில நொடிகளிலேயே வேழமுகப் பாறைக்கு போய்விடலாம். பட்டூரின் சரிவு நேரடியாக போய் வேழமுகப்பாறையின் தலை மீது நிற்கும்! பாறையின் முகப்பில் நின்று பார்த்தால் பெரும் யானையின் மத்தளத்தின் மீதேறி இந்த உலகத்தை பார்ப்பது போலிருக்கும்! இந்த பாறையின் தோற்றமும் பறம்பின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் யானையின் மத்தளத்தையே நினைவூட்டும்! இந்த பாறை முகட்டிலிருந்துதான் பட்டூர் பழையன் பறம்பு மொத்தத்தையும் கண்காணித்து கொண்டிருப்பார்!
பச்சைமலைத் தொடர்களின் பெரும்பாலான பகுதிகளையும், பறம்பின் அனைத்து எல்லைகளையுமே இங்கிருந்து பார்க்க இயலும்! எவ்வியூரையும், அதன் அடர்ந்த காடுகளையும் ஒரு மலைக்கழுகின் பார்வையில் கவனித்து கொண்டிருப்பார் பழையன்!

இந்த பெரும் பாறையின் கழுத்து பகுதியில் பல பற்றிபடர் மரங்கள் பாறையின் செதில்களோடு செதில்களாக அப்பி, பின்னி,
பற்றிப் படரி வளர்ந்து,
அதன் வேர்களை கீழே கொடிகளை போல் தொங்க விட்டு கொண்டிருந்தன; பாறையின் கீழிருந்து வளர்ந்து கொண்டிருந்த மூங்கில், மலை பிரம்பு, இன்டங்கொடி, ஊனாங்கொடி, கட்டுக்கொடி போன்ற தாவரங்கள் இந்த பற்றிப்படர் மரங்களின் வேர்களோடு இணைந்து பெரும் அரை கோள வடிவிலான ஒரு வலைப்பின்னலை அமைத்து, பாறையின் நடுப்புற பகுதியில் ஒரு பெரும் கொடி கூண்டை, வலை பின்னலை உருவாக்கி விட்டன!

வேழமுகப் பாறையின் சரிவில் கவனமாக இறங்கி, எதிர்படும் சிறு,பெரு கொடிகளை விலக்கி இந்த வேர் கூண்டுக்குள் நுழைந்து விட்டால் ஒரு பெரும் யானையே உறங்கலாம்!

தரையிலிருந்து ஒரு பனை உயரத்தில் ஒரு பெரும் மிதக்கும் தொட்டில்! பாறையின் அகலமோ மிகப் பெரியது! பாறையின் இருபுற சரிவுகளில் இறங்கியும் இந்த தொட்டிலுக்குள் வரலாம்! குறுகிய திறப்பு மட்டுமே உண்டு. உள்ளே நுழைந்த பிறகு தானாகவே கொடிகளும் திறப்பை அடைத்து விடும்!

பாறையின் இரு சரிவுகளிலும் வளர்ந்து நிற்கும் மூங்கில்களும், மலை பிரம்பும்….எதிரெதிர் நின்று, தலையை கவிழ்த்து, கூந்தலை விரித்து,
ஒருவர் தோள் மீது மற்றவர்
இரு கைகளையும் சேர்த்து நிற்கும் தோழியர்களைப் போல் பின்னி, பினைந்திருப்பதால் பற்றிப்படர் மர வேர்களோடு இணைந்து ஒரு வலிமையான தொட்டிலாகி விட்டது “கொடித்தொட்டில்….!”

இப்படி இயற்கையே பின்னிய
இந்த கொடித்தொட்டில்…..
மூங்கில்களையும்,
காட்டுகொடிகளையும் கொண்டு நெடுங்காடர்கள் அமைக்கும் வலைப்பின்னலையும் விட வலிமையானதாக இருந்தது!
இப்படி தொங்கி கொண்டிருக்கும் கொடித் தொட்டிலின் கீழே ஒரு மலைப்பாதை!

சேரநாட்டிலிருந்து வரும் பாணர்கள் இந்த வழியாகத்தான் எவ்வியூருக்கு போவார்கள். உப்பு வாங்கவும், உணக்கிய மீன் வாங்கவும் பறம்பினர் பயன்படுத்துவதும் இந்த பாதை தான்.
ஆக, இந்த கொடித்தொட்டிலுக்குள் நுழைந்து விட்டால், கீழே பயணிக்கும் பறம்பினரையும், பாணர்களையும், பிறரையும் எளிதாக பார்க்கலாம்! ஆனால், கீழேயிருப்பவர்களுக்கு ஒரு பனை உயரத்தில், அதுவும் இலை, தழைகளுக்கு நடுவேயிருப்பவர்களை தெரியவே தெரியாது! தொட்டிலுக்குள் இருப்பவர்கள் சத்தமிடாது அமர்ந்து கொண்டால், கீழே பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும் போகிறவர்களை முழுமையாக கண்காணிக்கலாம், உள் வாங்கலாம்!

பறம்பின் மலைப்பாதைகளில் எப்போதுமே மனிதர்களின் நடமாட்டம் மிகவும் குறைவென்பதால், பெரும்பாலான நேரங்களில் இப்பாதையில் விலங்குகளின் ஆதிக்கமே மிகுந்திருக்கும்!

பகலிலும் இருள் மிகுந்திருக்கும் இந்த கொடிப் பின்னலுக்குள் அமர்ந்து கொண்டு விலங்குகளை கூர்ந்து கவனிப்பதில் சிறுவன் பாரிக்கு அத்தனை விருப்பம்!

வேழமுகப்பாறையின் மேற்கு சரிவின் வழியே நண்பர்களோடு உரத்த குரலில் பேசிக்கொண்டே கொடித்தொட்டிலுக்குள் நுழையும் சிறுவன் பாரி,
உள்ளே புகுந்துவுடனேயே,
பேச்சை குறைக்கும் படி நண்பர்களுக்கு உதடுகளின் மீது விரல் வைத்து குறிப்பு காட்டி விடுவான். வலைப் பின்னல்களின் மீது குப்புறப்படுத்துக்கொண்டு, கீழே கடந்து போகும் யானைக் கூட்டங்களை நாழிகைகளை கடந்தும் பார்த்து கொண்டிருப்பான்!

காட்டெருமை கூட்டங்களை கண்டவுடன் யானைகள் விலகிப் போவதை வியப்புடன் பார்ப்பான் சிறுவன் பாரி! அதே காட்டெருமைகள் கூட்டம், ஒற்றை ஆண் பன்றியோ அல்லது தாய் பன்றியோ,
குட்டிகள் சகிதம் வரும்போது விலகி நகர்வதும் வியப்பே,
சிறுவர்கள் அனைவருக்கும்!
கொஞ்சம் குரலுயர்த்தி பேசினாலும் விலங்குகள் பாதையை விட்டு விலகி விடும்; தூரம் அகன்று விடும்! ஆகவே வெகு கவனமாக இருப்பான் பாரி,
மூச்சு விடுவதை கூட சத்தமின்றி விடுமாறு வலியுறுத்துவான் நண்பர்களை!

சமயங்களில் சுண்டாப்பூனைகள் கடந்து போவதும், பட்டூரின் மலைச் சரிவுகளில் கேளையாடுகளையும், எகிறி பறக்கும் மலை இருவாச்சிகளையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுண்டாப்பூனைகள் கவ்விப் போவதை கண்டு, வளர்ந்ததும் ஓட்டத்தில் சுண்டாப்பூனைகளை விஞ்சுவேன் என்று கொடித்தொட்டிலை விட்டிறங்கி சவாலிட்டிருக்கிறான்!

இப்படியான கொடித்தொட்டில் தருணங்களில்தாம் செந்நாய்கள் கூட்டம், கூட்டமாக வந்து எளிய விலங்குகளான மான் முதல் வலிய மிருகமான பெரும்புலியை கூட
சுற்றி நின்று, அலைக்கழித்து தந்திரமாக வேட்டையாடுவதை கண்டு, உணவுக்குகாக மட்டுமின்றி வேட்டையாடுவதை ஒரு பொழுதுபோக்காகவும் செய்து கொண்டிருக்கும் செந்நாய்கள் மீது கடும் கோபம் கொண்டான்!

ஒற்றையாக வரும் எந்த விலங்கும் ஒரு மிரட்சியோடும்,
கடுங் கோபத்தோடும் பட்டூரின் சரிவுகளில் அலைவதை நேரில் கண்டு, விலங்குகளின் குணத்தை அணு, அணுவாக உள் வாங்கினான் பாரி!

“உருவத்தில் பறம்பின் ஆகப் பெரும் விலங்காக இருந்தாலும்,
சிறு விலங்குகளுக்கு அமைதியாக விலகி வலி விடும் யானையின் தலைமை பண்பை கண்டு வியந்து வளர்ந்தவன் பாரி; அதே யானை,
தன் குட்டிகளை, கூட்டத்தை விட்டு தனிமைப் படுத்தப்படும் சமயங்களில் காதுகளை விடைத்து, வாலை தூக்கி, தும்பிக்கையை உயர்த்தி பிளிறிக்கொண்டு அலையும் தருணங்களில் எந்த விலங்கும்…., பதினாறடி வேங்கை முதல் பறம்பின் வளர்ந்த ஆண்களே பதறி விலகும் காட்சிகளையும் உள் வாங்கி வளர்ந்ததால்தான் பாரிக்கு பெருங்கோபம் வந்தால் பறம்பின் உயிர்கள் மொத்தமுமே நடுங்குவதும்……”

“இப்படியான நேரங்களில்
யானைக்கு கரந்தையை சுமந்த பறம்பு பெண்ணும்,
பாரிக்கு அங்கவையை சுமந்த ஆதினியும் எதிர் வந்தால் போதும்..”

கொடித்தொட்டிலில் குப்புற படுத்துக்கொண்டு பட்டூரின் சிறுவர்களோடு சேர்ந்து கழித்த தினங்களெல்லாம், போதைப்போல் மேட்டின் புற்களை தலைதடவி, அசைத்து வரும் நறுமண காற்றின் வாசத்தைப்போல பாரியின் மனதை அசைத்துப் போக, அழகிய புன்னகையோடு இறங்கினான் பாரி பட்டூர் சரிவில்.

“ஆதினி, ஆதினி” உரத்த குரலில் அழைத்து கொண்டே ஓடி வந்தாள், கிளி மூக்கு மாங்காய் பறிக்க மூலக்காட்டுக்கு ஓடிய பட்டூர் பெண் மூச்சிரைக்க…..

“வெகு நேரமாகி விட்டது இந்த ஒற்றை மாங்காய் பறிக்க! கார்த்திகை மாதமல்லவா! கரு மந்திகளும் போட்டிக்கு வந்து விட்டன இந்த மாங்காய்க்காக ” வார்த்தைகளை வேக, வேகமாக உதிர்த்தவளின் கண்களில் குறும்பு; அவளிடமிருந்து மாங்காயை வாங்கிய ஆதினியின் கண்களிலும், கண்ணங்களிலும் வெட்கம் குடியேறியது!

“கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள் பாரி, ஒளி மங்கியதும் மரக்கறியாட்டு கூத்து இருக்கிறது! கதிரவன் மங்கும் சமயத்தில் வருகிறேன், அது வரை இளைப்பாருங்கள்” சொன்னார் பழையன்.

வேழமுகப்பாறையை அடைந்ததும் ஆதினியின் கரம் பற்றி, பாறைச் சரிவில் கவனமாகயிறங்கி, கொடிகளை விலக்கி, ஆதினியின் இடை பற்றி கொடித் தொட்டிலில் ஏற்றி விட்ட பாரி, தானும் உள்ளே ஏறினான்!

தலை நாள் நடந்தது ஆதி குகையில், வெண் சாரை ஒளியில்; நேற்றைய இடை நாள் நடந்தது பெருந்தேன் குகையில் நிசா பூச்சி ஒளியில்!
இன்றோ, பகலிலும் வெளிச்சம் மறையும் கொடித்தொட்டிலில் ஐவகை குறிஞ்சி மலர்களின் அலங்காரத்தில் மணக்கும் கொடிப்படுக்கையை…, ஆடும் தொட்டிலை கண்டதும் பாரி சொன்னது, “அங்கவையும், சங்கவையும் நம்மோடு இப்போது இருந்தால், பிள்ளைகள் பெரும் மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள்! அடிக்கடி சங்கவை கொடித்தொட்டில் குறித்து கேட்பாள், அவளை மட்டுமாவது அழைத்து வந்திருக்கலாம் ” வருத்தம் இழையோடியது குரலில்!

“பெருந்தேன் குகையில் எங்கு ஒளித்து வைத்திருப்பீர்களாம் அவளை” ஆதினியின் குரலில் கேலி இழையோடியது!

“போலா…..” பாரியின் குரலிலும் வெட்கம்!

கதிரவன் கொட்டாக்குடி சிகரத்தின் பின்னால் மறையும் தருணத்தில் சிறு பறையொலிக்க வந்தார் பழையன், பாரி, ஆதினியை அழைத்து செல்ல.

பறையொலி கேட்டு பாரியும், ஆதினியும் கொடித்தொட்டிலில் இருந்து வெளியேறி, வேழமுகப்பாறையில் ஏறி நிற்கவும், பழையன் வரவும் சரியாக இருந்தது.

பழையன் முன்னே போக, ஆதினியும், பாரியும் பின் தொடர்ந்து போய் பட்டூரின் களத்தையடைய……

களத்தின் நடுவில் அரையாள் அளவு மண் கலயங்கள், நன்றாக இடைவெளி விட்டு, வட்டமாக அடுக்கப்பட்டு, கலயங்களை சுற்றியும் விறகு கட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தன.

ஒவ்வொரு கலயத்திலும் பட்டூரின் பெண்கள் முதலில் பெருங் கிழங்குகளையும், பின்னர் சிறு,குறு கிழங்குகளையும், அடுத்து கொடிக்கால் கிழங்கு, வள்ளிக்கிழங்கு, கல்வாழை கிழங்கு போன்ற கிழங்குகளையும்,
அதன் பின் அரியாமல்,
கழுவி சுத்தப்படுத்திய
அத்திக்காய், கோவைக்காய், வழுதணங்காய், சிறு அவரை, கொடியவரை, மர அவரை, துவரை, கருந்துவரை, செந் துவரை, நுனா, புளி மாங்காய், மாதுள்ளங்காய், மரக்கத்திரி, அதலைக்காய், புடலை, பழுபாகல், கொடிக்கத்திரி,
மலை வாழை போன்ற காய்களையும் கொட்டி, அதன் பின், முற்றிய காய்களில் இருந்து கிடைத்த அவரை, துவரை போன்ற உரித்த பயிர்களையும் இட்டு, அதன் மேல் சிறு, சிறு சதுரங்களாக நறுக்கிய பலா துண்டங்களை முறத்தில் அள்ளி வந்து கொட்டி, மேலே குறுந்தக்காளி,கான மிளகாய் போன்றவைகளை தூவி,
பாரியை அழைத்து ஒவ்வொரு கலயத்திலும் கைப்பிடி கடலுப்பை அள்ளி போட வைக்க, குலவை சத்தமும், பறையொலியும் பட்டூரை அதிர வைத்தது!

உப்பிட்டு பாரி விலகிய பின், கிழங்குகளாலும், காய்,கறிகளாலும்,பயிறு வகைகளாலும் நிரம்பியிருந்த கலயங்களுக்குள் பொடி பசலை, கரிசலாங்கண்ணி, மிளகு தக்காளி போன்ற கீரைகளை அமுக்கி திணித்து, குறுங்கிழங்கு செடியின் அகலமான இலைகளை வைத்து கலயங்களை மூடி, மேலே முற்றாத பனையோலைகளை வைத்து, கட்டுக்கொடியால் கலயங்களை இறுக்கி கட்டினர்!

அடுத்து ஆரம்பித்தது அதகளம்!

எரிகின்ற சுளுந்து குச்சியை, ஆதினியிடம் கொடுத்து, கலயங்களை சுற்றி அடுக்கப் பட்டிருக்கும் விறகுகளை ஏற்றச்சொல்ல, பால்கொறண்டி வேர்
கலந்த விறகுகளில் நெருப்பு “பக்”கென்று பற்றியெறியவும், கொட்டாக்குடி சிகரத்தின் பின்னால் கதிரவன் முழுதாக மறையவும், பட்டூரின் மான் பறை, பெரும்பறை, மகிழ்ப்பறை, யானைப்பறை போன்ற பறைகள் முழங்கவும் சரியாக இருந்தன!

பறைகள் தொடர்ந்து முழங்க, கலயங்களை பற்றியெறியும் நெருப்பை சுற்றி, பட்டூரின் ஆண்களும், பெண்களும் நடனமாட ஆரம்பித்தனர்!

இப்போது ஆரம்பித்தாள் உரத்த குரலில் பெரியாத்தா பாரியின் சேர வேட்டையை பாடலாக……

குதிரைகளை பறித்து, யானைகளை விரட்டி, சேரனின் தலையை ஒரே சீவலில் சீவி பாரியாடிய உக்கிர தாண்டவத்தை கனத்த குரலில் பெரியாத்தா பாட, பாட………..

பெண்ணொருத்தியிடமிருந்து
சிறு பறையை பிடுங்கி கொண்டு களத்தில் குதித்து இறங்கினாள் ஆதினி!

ஆதினி குதித்த நொடி பட்டூர் குல நாகினிகளின் குலவை சத்தம் பறையொலிகளை மிஞ்சி, விஞ்சி ஏகியது கொட்டாக்குடி சிகரங்களில்!

சிறுபறையை வேகமாக இசைத்த படி களமிறங்கிய ஆதினி சுழன்று ஆட ஆரம்பித்தாள்………..
கால்களின் வேகத்தோடு கை விரல்கள் போட்டி போட,
பறையும், கால் தண்டைகளும் ஒலியெழுப்ப, களத்தில் அனல் பறந்தது; நெருப்பு கொளுந்து விட்டெறிந்தது!

மூட்டிய தனல் சூழலை எரியூட்ட,
மனதில் சூழ்ந்த கனல் கால்களுக்கு உரமூட்ட, கால்களின் உரம், உடலெங்கும் பரவ, அதிர்ந்து முழங்கியது பட்டூரின் பறைகள்…….

பறையோசை கூட, கூட அதி வேகத்தில் சுழன்று வந்த ஆதினி, பாரியின் கரம் பற்றி களத்தில் இழுக்க……

உச்ச பட்ச சப்தத்தில் முழங்கியது யானைப்பறை! ஆதினி இழுத்த வேகத்தில் களத்தில் தாவி குதித்த பாரி, பிடறியில் தவழும் கூந்தல் பறக்க, நெற்றியில் கட்டிய பட்டை தெறிக்க ஆடிய ஆட்டம்,
மீண்டும் சேர படையெடுப்பை நினைவூட்டியது பட்டூர் பழையனுக்கு!

பறம்பின் தலைவனும், தலைவியும் பறையிசைக்காட,
பட்டூரே இவர்களின் நடனத்திற்கு ஆடியது!

சுழன்று, சுழன்று ஆடிய பறம்பின் நடனத்தால் எழுந்த காற்று,
மூட்டிய தனலை இன்னும் மூட்ட, தனலால் ஆடுபவர்களுக்கு அனலும், அனலால் ஆடுபவர்களின் மூச்சால்
தனலும் ஒன்றுக்கொன்று இணைந்து, பலம்கூடி உலையை கொதிக்க வைக்க,
வெந்து தணிய ஆரம்பித்தது அவித்த காய்கள்!

காற்றில் பரவிய, பதமாக வெந்த காய்களின் மணம், ஆடுபவர்களை நிதானத்திற்கு கொண்டு வர………

“உணவருந்தலாம் மக்கா!” உரத்த குரலில் ஆணையிட்டார் பட்டூர் பழையன்.

களத்தில் வைத்த கலயங்களை சுற்றியும் பற்றியெரிந்த நெருப்பு தணிந்து, பெரும் கங்குகள் மட்டுமே பானைகளை சூழ்ந்திருந்தன.
கலயங்கள் அனைத்தும் கருஞ்சாம்பல் பூத்து, கொதித்து கொண்டிருந்தன.

பழையனின் குரல் கேட்டவுடன், கைகளில் ஈச்சம்பாய்களை சுமர்ந்து கொண்டிருந்த சிறுவர்கள், அவித்த காய்களின் வாசத்தில் பசி கூடிய பட்டூரின் சிறுவர், சிறுமிகள் பெரும்
பசியோடு ஓடிவந்து களத்தில் வரிசையாக பாய்களை விரிக்க……….

பறம்பின் ஆண்களும், பெண்களும் சுடும் கலயங்களை, கைகளில் பெருந்துணிகளை சுற்றிக்கொண்டு பக்குவமாக பிடித்து தூக்கி வந்து ,களத்தில் விரித்திரிந்த ஈச்சம்பாய்களில் காய்களை கொட்ட ஆரம்பித்தனர்!

பதமாக வெந்த காய்களில் இருந்து மேலெழும்பி வந்தது வெண் புகையும், கிழங்குகளின் இனிப்பு வாசமும்……

அவித்த காய்களின் வாசம் சிறுவர்களை ஆலாய் அலைய வைக்க, கலயங்களை எடுத்த பின் மிகுந்திருந்த பெருங்கங்குகளின் மேல் பட்டூரின் இளைஞர்கள் எறிந்த பன்றிகளின் தொடை சதையும், கடமான்களின் தசையும் பொசுங்கி வெந்த மணம் பெரியவர்களை
ஈச்சங் கள் இருந்த கலயங்களுக்கு அருகே நகர்த்தி சென்றது!

பசியோடு வந்த குழந்தைகளுக்கு ஆதினி மரக் கரண்டியால், அவித்த காய்களையும், வெந்த பயிர்களையும் அள்ளி, அள்ளி மந்தாரையிலையிலும், வாழையிலையிலும் வைத்து பரிமாற ஆரம்பித்தாள்! நெற்றியில் புரளும் முன் கூந்தலை இடது புறங்கையால் பின் தள்ளி, வழியும் கழுத்து வியர்வையை முந்தானையால் துடைத்து கொண்டே,
காய்களை அள்ளி, அள்ளி குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டிருந்த ஆதினியை ரசித்துக் கொண்டே,
இளைஞர்களுக்கு ஈச்சங்கள்ளை பெருங்கலயத்தில் வாரி, வாரி கொடுத்து கொண்டிருந்தான் பாரி!

“அன்பு அங்கு ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது, பறம்பு வழக்கம் போல் நிறைந்து கொண்டிருந்தது…..”

பாரியையும், ஆதினியியையும் தூரத்தில் இருந்து பார்த்து, பெருமிதப்பட்டு கொண்டிருந்த பெரியாத்தா, ஆதினியிடம் வந்து
” வா ஆதினி! நீயும் களைத்து போயிருக்கிறாய்! என்னவொரு வேகம் உன் கால்களுக்கு?! கூரானையே விஞ்சி விட்டாய் இன்று! பரிமாறுவதை இனி மற்றவர்கள் பார்க்கட்டும், பாரியோடு சேர்ந்து நீயும் பசியாறு” என்று பரிவோடு இழுத்து வந்து பாரியிடம் சேர்த்தாள்.

ஆதினி வந்ததும் கலயத்தை பட்டூர் இளைஞன் ஒருவனிடம் கொடுத்து தொடர்ந்து கள் ஊற்ற சொல்லி விட்டு,
பாரியும் நகர்ந்து ஆதினியிடம் வந்தான்.

ஒரு கலயத்தில் ஆதினிக்கு மலை வாழை தேறலையும், இன்னொரு கலயத்தில் பாரிக்கு ஈச்சங்கள்ளையும் சுமந்து வந்த பட்டூர் பழையன், இருவரிடம் அவற்றை கொடுத்து விட்டு, தானும் ஒரு பெருங்கலயத்தை எடுத்துக் கொண்டார்.

மந்தாரை இலைகளில் அவித்த காய்களையும், கிழங்குகளையும் எடுத்து கொண்டு வந்த பெரியாத்தா பாரிக்கும், ஆதினிக்கும் அவற்றை கொடுத்து விட்டு, தனக்கும், பழையனுக்கும் தேக்கு இலையில் சுட்ட கடமான் தசைகளை நெய் வடிய கொண்டு வந்தாள், கூடவே பெருங்கலயத்தில் பெரியாத்தாளுக்கு பிடித்த தேன் தேறலும்!

அவித்த பயிறும் வேண்டும் என்று கேட்ட ஆதினிக்கு பனங் கொட்டாய்
நிறைய பயிறு கொண்டு வந்த கொடுத்தாள் பட்டூர் பெண்ணொருத்தி.

தேறலும், கள்ளும் அமிர்தமாய் உள்ளிறங்க, வெந்த கிழங்குகளும், அவித்த காய்களும், பயிறும் கடலுப்போடும், கான மிளகாய் உரைப்போடும், குறு தக்காளி புளிப்புமிறங்கி நன்றாக புழுங்கி
கார்த்திகை குளிருக்கு, சூடான
பறம்பின் மரக்கறிகள், கூத்தாடி களைத்தவர்களை மீண்டும் உரமேற்றிக் கொண்டிருந்தன!

“இந்தா பாரி! கடித்திழு இந்த தசையை” நல்ல கொழுப்போடு வெந்து, நெகிழ்ந்திருந்த கடமானின் நெஞ்சு கறியை எடுத்து நீட்டினார் பழையன் பேரன்போடு!

“வேண்டாம் பழையா! இன்று மரக்கறி உணவுகளே போதும் ” பரிவோடு மறுத்தான் பாரி.

“கள்ளும், தேறலும் பசியை தூண்டி உணவுக்கு உடலை ஏங்க வைக்கும் பாரி, இந்த நேரத்தில் வலுவான இறைச்சியுணவு உள்ளே போகாமலிருந்தால், கள்ளும், தேறலும் வயிற்றை தின்று விடும் மகனே! அவித்த காய்கள் பசி தாங்காது , கை நிறைய பயிறையும், கொஞ்சம் இறைச்சியையும் உள்ளே அனுப்பு! யானையின் தலையை துளைக்கும் உன் ஈட்டியின் வேகம் என்றும் குறையக்கூடாது” பெரும் உணர்ச்சியோடு அறிவுறுத்தினார் பழையன்!

பழையனின் அன்பு மிகுந்த சொற்களை கேட்டு, புன்னகைத்தபடி,
பாரி இறைச்சி துண்டத்தை வாங்கி, சரிபாதியாக பிய்த்து, பாதியை ஆதினிக்கு கொடுக்க…..

மின்னல் வேகத்தில் பட்டூர் களத்திற்குள் குதித்து வந்தான் எவ்வியூரிலிருந்து செய்தி கொண்டு வந்த பறம்பு வீரனொருவன் கைகளில் ஈட்டியை ஏந்திய படி!

நேரே பாரியிடம் வந்த வீரன்,
பட்டூர் பழையனை வணங்கி,
குனிந்து பாரியின் காதில் அந்த செய்தியை சொன்னான்!

வீரன் கூறிய செய்தியை கேட்ட பாரியின் கண்கள் மட்டும் சிவப்பதையும், ஆனால், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாத பாரியையும் கண்ட ஆதினிக்கும், பழையனுக்கும் ,வந்த தகவலின் வீரியம் புரிந்தது!

பறம்பு வீரன் வந்த வேகத்திலும், பாரியின் காதோடு கிசுகிசுத்த காட்சியிலும் களத்தில் மகிழ்ந்திருந்த
பட்டூர் குடிகள் அமைதியாகி பாரியையும், பழையனையும் இமைக்காமல் பார்க்க……

குடிகளின் நிலை கண்ட பாரி,
உடனடியாக முகம் மலர்ந்து குவளையை தூக்கி காட்ட,
பட்டூரின் மக்கள் களைந்து, கலகலத்தனர்.

“நாளை காலை எவ்வியூர் திரும்புகிறோம் ஆதினி ” என்ற பாரி, பழையன் பக்கம் திரும்பி, அவரின்
காதுகளில் ஏதோ சொல்ல தலையாட்டி சம்மதித்தார் பழையன்!

மீண்டும் பறம்பு வீரன் பக்கம் திரும்பிய பாரி “பட பட” வென்று உத்தரவுகளை பிறப்பிக்க, வந்த வேகத்திலேயே வெளியேறப் போனான் பறம்பு வீரன்.

“சாப்பிட்டு விட்டுப் போ குட்டா, கையிலிருந்த ஈச்சங்கள் கலயத்தை குட்டனிடம் கொடுத்த பாரி,
பிய்த்த மான் தசையையும் அவனுக்கே கொடுத்தான்!

வந்த செய்தியை பாரியின் கண்களை வைத்தே ஊகித்த ஆதினி, சூழலை மாற்றக் கருதி, “நாளை எவ்வியூர் திரும்பும் போது முயல் புல் மேட்டில் நமது முல்லைக்கொடியை கண்டு போவோமா? என்று பாரியை நோக்கி கனிவோடு கேட்க,

“நிச்சயம் பார்த்தே போவோம்! அங்கவையை போலவே கொடியும் மலர்ந்து நிற்கும்; நமக்காக காத்திருக்கும்” என்று அதே கனிவில் பாரி பதிலுரைக்க…….

கடும் செய்தி வந்த இந்த சூழலிலும் கனிவோடும், பரிவோடும்,
நிலை குலையாமல், அசராமல் இருக்கும் பாரியையும், ஆதினியையும் வியந்து பார்த்து கொண்டேயிருந்தார்
பட்டூர் பழையன்.

“சரித்திரத்தில் பாரியின் பெயர் அவன் தந்தை பெரும்பனையனையும் தாண்டி நிலைக்கப் போகிறது ” பழையனின் நெஞ்சம் இந்த நினைப்பில் ஒரு முறை பொங்கி தணிந்தது!

…………………………………………………..

அடுத்த அத்தியாயத்துடன்
குறிஞ்சி திணை முடியும்……………!

About Thiruppathi Vasagan 2 Articles
வீரயுக நாயகன் வேள்பாரி நூறாவது வாரத்தை எட்டியதையொட்டி விகடன் விழா எடுத்தது. இதை ‘விகடன் விழா’ என்று சொல்வதா, ‘வாசகர்கள் விழா’ என்று சொல்வதா என்று சொல் மயக்கம், பொருள் மயக்கம் வருமளவுக்கு சென்னை இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன் அரங்கத்துக்கு வாசகர்கள் திரளாக வந்திருந்து நம்மை மயங்கவைத்தனர்; மலைக்கவைத்தனர்.