அடிமன வலி

image courtesy: pexels.com

நேசித்த மனங்களை
காலம் பிரித்திட்டால்
வலிகளுக்கேது
பாலின பேதம்?

தோல்வியில்
துவண்டு
துயரில்வாடி
மீண்டுவிடும்
வடிகால்
ஆணுக்கேனோ….

தாடியும் பீடியும்
தண்ணியும் கன்னியும்
நட்பும் தனிமையுமென….

மாற்றுத் துணை பற்றி
மெல்ல உயிர்த்தெழும்வரை
சுற்றம் சகித்திடும்….

பெண்ணுக்கது
பெருஞ்சாபம்
விட்டு விலகியதால்
வீட்டுக்குத் தியாகி
விரும்பியவனுக்கு துரோகி
கட்டியவனுக்கு பாவியெனும்
சமூகக் கட்டுக்கு….

காவு கொடுத்திட்ட
விருப்பங்கள் யாவும்
நினைவுகளாய்
அடிமனதை 
அறுக்கையில்
பீறிட்டு அழுதிட….

தாழிட்ட கொதிகலன் 
தடதடத்தடங்கியது
பெண்ணுக்கான
ஒற்றைச் சமாதானக்
கேடயம்
சமயத்தில் 
கண்ணீர்!!

– விஜி மணிகண்டன்