
ஆள்வோரால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி எப்போதெல்லாம் மறுக்கப்படுகிறது, எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதே இடக்கை என்னும் இந்தப் புதினத்தின் மையக்கரு. ஆள்பவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள், உயர்சாதியில் பிறந்தவர்கள் இவர்களையெல்லாம் வலது கையாகவும், வறியவர் மற்றும் கீழ்சாதியில் பிறந்தவர்களை இடது கையாகவும் உருவகப்படுத்தி இப்புதினம் வடிக்கப்பட்டுள்ளது. இடக்கையோடு ஒப்பிடும் போது வலக்கைக்கென தனித்த அந்தஸ்து, சிறப்புத் தகுதிகள், மரியாதையை என பலவும் அதிகம். பெரும்பாலும் இடக்கைக்கு உரிய அங்கீகாரத்தை நாம் வழங்குவதில்லை. அதுபோலவே மனிதருள் ஒரு பிரிவினர் அதிகாரவர்க்கத்தால் புறக்கணிக்கப்படும் அவலமே இப்புதினத்தின் தொடர் நிகழ்வுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நீதியுணர்வு என்பதொரு அறம்; அது சுடர்விடும் வாளைப்போன்றது; பற்றியெரியும் நெருப்பைப் போன்றது; பாரபட்சமற்றது” எனும் கருத்து சமூகத்தில் வேரூன்றியுள்ளது. ஆனால் நடைமுறையில் அது கானல் நீராகவே உள்ளது என்ற உண்மையை எஸ்ரா உரக்கக் கூறியுள்ளார். நீதிக்கு பொது நீதி , விசேஷ நீதி என இரு அடைமொழிகள் கொடுத்துள்ளார் ஆசிரியர். பொது நீதி என்பது பொது மக்களுக்கானது; அது ஆள்பவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. விசேஷ நீதி என்பது அரசர் மற்றும் அவரது நெருங்கிய சுற்றத்தாருக்கானது. நீதியை அடக்கி ஆள முடியாத போது, அதைப் பலியிடுவது ஒன்றே அதிகார வர்க்கத்தினரின் அடுத்த கட்ட நகர்வு என்பதை கருப்பு நிற குதிரை ஒன்றின் மூலம் விளக்கியுள்ளார் எஸ்ரா.
எண்ணற்ற கதாபாத்திரங்கள் உலவும் இப்புதினத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பயணிக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் தூமகேது. சாமர் குலத்தில் பிறந்தவனும், வறியவனும், ஆட்டுத்தோல் பதப்படுத்தும் தொழில் செய்பவனுமான தூமகேதுவின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் வாயிலாக வறுமை, தீண்டாமை, சாதியைக்கொடுமை, சமத்துவமின்மை, சமூக நீதி போன்றவற்றை பேசுபொருளாக்கி வாசகர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளார் ஆசிரியர். ஒருவரின் அடையாளங்களை மாற்றுவதில் கதை முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறி, ஒரு கதையின் வாயிலாகவே தூமகேதுவை சிறைச்சாலையிலிருந்து தப்ப வைப்பதும், ‘அவன் ஒரு மாயாவி; ஒரே நேரத்தில் பல உருவங்களில் வெவ்வேறு இடங்களில் சுற்றி அலைபவன்’ என்று புத்தகம் வாசிக்கும் நம் கண் முன் தூமகேதுவை உருவெளித்தோற்றம் போல் நிறுத்துவதுமாக தான் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்று நிரூபிக்கிறார் எஸ்ரா. இத்தகைய விசித்திரமான வாசிப்பனுபவம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி, சிந்திக்கத்தூண்டி இறுதியில் தெளிவையும் நல்குகிறது.
தூமகேது வாயிலாக கீழ்த்தட்டு மக்களின் வாழ்வியல் சவால்களை அரங்கேற்றிய ஆசிரியர், ஒளரங்கசீப் மற்றும் பிஷாடன் கதாபாத்திரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்போரின் மனநிலையை விவரித்துள்ளார்.
“ஆள்பவனின் முதல் பணி அச்சத்தை உருவாக்குவது”
“எவரையும் நம்பக்கூடாது என்பதே அதிகாரம் கற்றுத்தரும் முதல் பாடம்”
“நீதியைத் தன் விருப்பப்படி செயல்பட வைப்பவனே அரசன்”
“அரசபதவி என்பது அதிகாரம் செலுத்துவதற்கும் இன்பம் அனுபவிப்பதற்குமானது”
“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் அது அரசனுக்கு எதிரானது” என்பன போன்ற மனதில் நிற்கும் சொற்றொடர்கள் தற்கால சூழலுக்கும் பொருந்துவதை நாம் மறுத்து விட முடியாது. மாமன்னர் ஒளரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகான காலகட்டம் தான் இக்கதை நிகழும் காலம். மொகலாய சாம்ராஜ்யம் வீழ்ந்து, பின் இங்கு ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயரை வெளியேற்றி, சுதந்திரம் அடைந்து, ஜனநாயகம் மலர்ந்து என சில நூற்றாண்டுகளைக் கடந்த இப்போதும் அரசியலில் இதே சூழல் நிலவுவதேனோ?
ஆள்பவர்கள், அடித்தட்டு மக்கள் எனும் இரு பிரிவினரை ஒதுக்கினால் மிஞ்சும் ஏனையோரின் நிலைமை படகோட்டியான சம்பு கதாபாத்திரம் வழியே கூறப்பட்டுள்ளது. நீதியை விளையாட்டுப் பொருளாகக் கருதும் அதிகார வர்க்கம் ஒருபுறம்; தனக்கு நீதி கிடைத்துவிடாதா என ஏங்கித்தவித்து கண்ணீர் விடும் மக்கள் மறுபுறம்; இவர்களின் நடுவே நீதியை அறமாக ஏற்று வாழ்வில் பின்பற்றும் சாதாரண மக்களின் உருவகமாக சம்புவின் பாத்திரப்படைப்பு உள்ளது. அறத்திற்குப் புறம்பாக செயல்படும்போது மனதில் உண்டாகும் குற்ற உணர்வில் சிக்கி அவன் மாள்வது பரிதாபத்திற்குரிய யதார்த்தம். நீதியை அறமாக உணர்பவர்க்கு மட்டும்தான் இந்த வேதனை; மற்றவர் யாவரும் நலமாகவே உள்ளனர் கதையிலும் நிஜத்திலும்!
இவைதவிர அஜ்யா எனும் திருநங்கை வாயிலாக ஒளரங்கசீப்பின் இறுதிக்காலம், அந்தப்புரத்தில் பெண்களின் நிலை, மொகலாய சாம்ராஜ்யத்தில் திருநங்கைகளுக்கான இடம் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளது.
இடக்கை புதினத்தைப் படிக்கும் போது எனக்கு உண்டான சுவாரஸ்யத்திற்கு முக்கியக் காரணம் கதைக்குள் கதையாக விரியும் எண்ணற்ற கிளைக்கதைகள். சாமர்களின் கடவுளான கோகாவின் கதை, சொர்க்கத்தின் கண் எனப்படும் பாலைவணக்கிணறு, இரு தோளில் வந்தமரும் அரூபமான பறவைகள், சம்யுக்தா குளத்தில் வாழும் தாத்தா பாட்டி, மணற்பெண் லசியாவின் கதை, எலும்பின் கதை, குருடனின் கதை, இரண்டு தலை அரசன், சரமை என்ற நாயின் கதை, பூர்வகுடிகளான சிகிரிகளின் கதை, தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதியென உரத்துக்கூறும் இரண்டு புழுக்களின் கதை, பங்கி எனும் ஆடு திருடுபவனின் கதை என எக்கச்சக்கமான குட்டிக்கதைகள் படிக்கப் படிக்க சிந்திக்க வைப்பவையாக உள்ளன.
இப்புதினத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மிகுந்த அழகியலோடும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் என்னை ஈர்த்தன. மனித விருட்சம் எனும் சொல்லாடல் பூமியுடன் வேர்ப்பற்று கொண்ட மனிதனைக் குறிக்கிறது. அவனுடைய நிசப்தமே விருட்சத்தின் மலர்; சொற்களே கனிகள் என்கிறார் எஸ்ரா. இதேபோல நடமாடும் விருட்சம் எனும் சொல்லாடல் மூலம் இயற்கையோடு இயைந்து வாழும் மனிதனை விவரித்துள்ளார். சிகிரிகள் பயன்படுத்தும் அழகிய வேலைப்பாடு கொண்ட கூர்மையான விரல் நீளக்கத்தி, வடிவத்திலும் எடையிலும் பூவின் இதழை ஒத்திருக்கும் என எஸ்ரா வர்ணிக்கும்போது அதைக் காண எனக்குப் பெரும் ஆவல் உண்டானது. “கதைகள் தான் கடவுள்களையே காப்பாற்றி வைத்திருக்கின்றன” என்பது இப்புதினத்தின் ஆகச்சிறந்த வாக்கியம்.

மொழியின் அழகியல் வெளிப்படுவது கவிஞர்களால் அல்லவா? இதிலும் மூன்று கவிஞர் பற்றிய குறிப்புகள் உள்ளன. துயரம் தோய்ந்த காதல் கவிதைகளை வடிக்கும் இளவரசி மக்பி,
“துயரம் தான் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
ஒருதுளிக் கண்ணீர் சேரும்போது தான் கவிதைக்கு உயிர் வருகிறது” என்கிறாள்.
“வைரங்களை விட பிரமாதமாக ஒளிரும் சொற்கள் என்னிடம் உள்ளன”
“மக்பி கவிதை பாடுவதற்காகவே பிறந்தவள்; அவள் இறந்து போனாலும் எலும்புகள் பாடிக்கொண்டிருக்கும். ரோஜாச்செடியை புதைமேட்டில் வைத்தாலும் பூக்கவே செய்யும்; அதன் நிறமும் மணமும் மாறிவிடாது “
“பாதுஷாவின் கட்டளைக்கு வேலையாட்கள் அடிபணிவார்கள்; காற்று ஒருபோதும் அடிபணியாது”
என மக்பி பேசுவது அனைத்துமே கவிதைச்சாரல்கள் தான். உயர்ந்த குலத்தில் பிறந்த போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக காலா சிறைச்சாலையில் குரல்கொடுக்கும் ஸச்சல் எனும் உருதுமொழிக்கவிஞன் கல்வியின் அவசியத்தைப் போதிக்கிறான். “உன் வயிறு ஏன் பசிக்கிறது? பசிக்கிற நேரத்தில் உனக்கு மட்டும் ஏன் உணவு கிடைக்கவில்லை? நீயும் நானும் மட்டும் ஏன் வேலை செய்து சாப்பிடுகிறோம்? சிலர் மட்டும் எப்படி போகத்தில் திளைக்கிறார்கள்?” என்பதையெல்லாம் புரிந்துகொள்வதற்கு கல்வி அவசியம் என்கிறான் ஸச்சல். அதுமட்டுமின்றி,
“கடவுள் மனிதனைப் படைத்தது உண்மை என்றால் மனிதன் கடவுளைப் படைத்த கதையும் உண்மைதான்”
என்கிறான் அவன். அடுத்ததாக பூனையை எலி என்று பெயரிட்டழைக்கும் கவிஞன் ஜமீல், “புரட்சியை ஒடுக்க எந்த அரசும் ஆயுதங்களைத் தடை செய்வதில்லை; கவிதைகளையும் புத்தகங்களையும் தான் தடைசெய்கிறது” என்கிறான்.
டச்சு வணிகன் ரெமியஸ், சத்கரின் மஹாபிரஜாக்கள், கினாரி பஜார், மித்ரா கடிகா, பசியால் கண்ணிற்கண்ட அனைத்தையும் உண்ணும் தூமகேதுவின் மகன் மஞ்சா, மனைவி நளா, தன்னிறைவு பெற்ற ஜோயா கிராமம், மனிதர்களின் ரகசிய ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஊடகமாகும் கலவரம், இந்து முஸ்லீம் பிரச்சனைகள், காலா திறந்தவெளி சிறைச்சாலை, சிறைச்சாலையை விட மூச்சுமுட்டும் அந்தப்புரம், குரங்கு அநாம் எனப் பரந்து விரிந்து செல்லும் இப்புதினத்தின் கதைக்களத்தை ஒரு விமர்சனக் கட்டுரைக்குள் அடக்குவது என்னால் நிச்சயம் முடியாத காரியம்.
என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல புத்தகம் என்பது வாசிக்கும் போது பிற நல்ல புத்தகங்களை நினைவூட்ட வேண்டும். அந்த வகையில் வந்தார்கள் வென்றார்கள் – கார்ட்டூனிஸ்ட் மதன், உடைந்த நிலாக்கள்- பா.விஜய் , வேள்பாரி – சு.வெங்கடேசன் மற்றும் எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் போன்றவை ஒப்பிட்டுப் பார்க்கவும் மீள்வாசிப்புக்கும் என் நினைவில் தோன்றிய பிற புத்தகங்களாகும். ஆகமொத்தம் இடக்கை புதினம் வாசகர்களுக்கு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் : மலர்விழி தமிழரசன்