என்(ப்) பொழுது

image courtesy: pexels.com

பூமியின் சுழற்சியில்
நாளொன்றின்
இருபத்திநான்கு மணிநேரங்களில்
ஒரு சில நொடிகள் கூடவோ
குறையவோ செய்யும்.

துளி துளியாய் சேர்த்த அந்த
நொடிபொழுதுகளே நான்கு
வருடங்களில் ஒரு
முழு நாளாக நிறைகிறது.

கடிகார முட்களுக்குள்
சிக்காது
ரகசியமாக மறைந்திருக்கும்
அந்த சில நொடிகளை
சேமிக்கும்
தீவிரத்தில் இருக்கிறேன்.

எப்பொழுது தேட?
எங்கே தேட?
காலையிலா ?
ஆண்ட்ராய்டு யுகத்திலும்
அறிவியல் வளர்ச்சியிலும்  
என்றுமே இந்த அடுப்படியில்
எடுக்கவேண்டிய அவதாரங்களில் மாற்றில்லை.

முற்பகல் வேளையில்
என்னுடைய பணிகளில் தலையை கொடுக்க,
இந்த பாடத்தை முடிக்க உன் உதவி வேண்டும் என்கிறாள் மகள்.

வாட்டர் கலரை இப்பொழுதே
தேடி தர வேண்டி நிற்கிறான் மகன்.
அலைபேசியில் அம்மாவிடம்
பேசவேண்டிய நேரத்தை இருவரும் மாறி மாறி மாற்றி மாற்றி கொண்டே இருக்கிறோம்.

இதற்கிடையில் அத்தை வந்து
‘மதியம் நான் சமைத்துவிடுகிறேன்’
என்பதே இப்போது
எனக்குப் பிடித்த மூன்று வார்தைகளாகிவிட்டது.

விமர்சனங்களை மட்டும்
படித்துவிட்டு வாங்கி வைத்திருக்கும்
புத்தகங்கள் எல்லாம் என்னை பார்
என்னை பார் என்று அலமாரியிலிருந்து அம்பு விடுகின்றன.

சில சிறுகதைகள் மனதிற்குள்ளே
வடிவம் பெற்று மின்னி மறைந்துவிடுகின்றன.

தட்டச்சு செய்யும் பொழுதுகளை
தேடுவதே சுவாரஸ்யமான கதையாகிவிட்டது.

பிடித்தமான முகநூல் பதிவுகளை எல்லாம்
பிறிதொரு நாள் வாசிக்க சேமித்துவைத்து கடக்கிறேன்.
என்னுடைய பொழுதுகளுடன்
நான் பழகி வெகு காலமாகிவிட்டது.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை
ஆட்சியே மாறுகிறதே
இந்த வீட்டு நிர்வாகத்தை
நீயும் கொஞ்ச நாள்
பார்க்க கூடாதா என்று
நள்ளிரவு வரை பனி சுமையில்
மூழ்கியிருக்கும் கணவரை
பார்த்து மனசாட்சியில்லாமல்
கேட்கமுடியவில்லை என் மனசாட்சியால்.

ஆமாம் “மனசாட்சியை எப்படி காணாமல்
போக செய்வது?”
ஏதேனும் வழி இருக்கிறதா?

அமைதியாக எங்கோ எனக்காய்
அமர்ந்திருக்கும்
என்னுடைய பொழுதை
எப்போது தேட? காலையிலா?
மதியம்? இரவில்?
இல்லை…..

அட நான்
இன்னும் என்னுடைய பொழுதை  
எங்கே தேடுவது என்று தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு பிரச்சனைகளுக்கு
மத்தியிலும் ஒரு
பூ பூக்க தானே செய்கிறது
என்ற பிரபஞ்சனின் வரிகள் ஒரு புன்னகையை தவழ விட்டுச் செல்கிறது.

நாளையாவது எனக்கான பொழுதை
கண்டுபிடிப்பேனா ?
எத்தனையோ ‘நாளைக்கு’ சென்று விட்டது,
ஆனாலும் நாளை மட்டும் மாறாமல்
வந்து கொண்டிருக்கிறது.

– இரா. நித்யா ஹரி