கோகிலாராணி கவிதைகள்

காணொளிக் காதல்

உன் பெயர் அழைக்கிறது
என் முகம் தெரிகிறது.

உன் முத்தம் வேண்டியே
என் பேட்டரி
குறைவதாகப்
பொய் சொல்கிறது
தொடுதிரை


கள்ளத்தனமாய்
என்னை ரசிப்பதாய்
நினைக்கிறாய்
கடமை தவறாத
கேமரா உன்
கண்கள் தாழ்வதைக்
காட்டிக் கொடுத்து
விடுகிறது


சிவப்புப் பொத்தானை
தடை செய்து விடலாமா?
அவ்வப்போது
எழுந்து நின்று உன்
அழகு முகத்தை
மறைக்கிறது
மற்றும்
அது நமக்குத்
தேவைப்படுவதும்
இல்லை


வாகன இரைச்சலினின்று
என் செவிகளைக் காக்க
ம்யூட் செய்யும்
உன் பேரன்பை
என்னென்று சொல்வது?


இறுதியாய் அந்த
சிவப்புப் பொத்தான் மேல்
தவறி விழுந்த முத்தம்
நம் உரையாடலை
முடித்து வைக்கிறது


-கோகிலாராணி