
உலகின் கருவை சுமந்து
உதிரத்தில் உயிரை உருவாக்கி
தான் வித்திட்ட உயிரை விருட்சமாய்
மாற்றி ஏற்றம் தந்து மாற்றத்துக்கு
வித்தானவளே வீரமங்கையே
பால் சுரக்கும் மார்பு வற்றிய
பின்பும் குழந்தை அழுகுரல் கேட்டால்
கண்ணீராய் பால் வார்க்கும் மாதரசியே
காட்டு வேலையோ வீட்டு வேலையோ
உடலை வருத்திச் செய்தாலும்
ஒற்றைச் சிரிப்பில் ஒன்றும் இல்லை
என்று கடந்து செல்லும் கலையரசியே
ஒன்றோ இரண்டா இருப்பதை
வைத்து சமைத்தாலும் உப்பு சப்பு
பார்க்கவே முதல் கை எடுப்பாள்
மிச்சம் மீதி இருந்தால் தான்
தன் பசி உணர்வாள்
அவள் அன்னபூரணியே
கோபத்தில் முகம் சுளித்தாலும்
சோகத்தில் மடி தந்து
அலையும் மனதிற்கு
மருந்தாகும் மருத்துவச்சியே
பலரின் வாழ்க்கைக்கு வண்ணமடிக்க
இருண்ட அறையில் இருந்தே
வெளிச்சம் தந்த கலங்கரை விளக்கே
எங்கிருந்தோ வந்து
என் அப்பன் வீட்டில்
புகுந்த சொந்தக் கடலைத்
திரும்பாத வந்த கரையை
தனதாக்கிக் கொண்ட
அலை அவள் பெண்ணவள்
என் தாயும் அவளே..!!
– தமிழ்செல்வன் இரத்தினம்