மழை – சிறுகதை

மாடிப்படியில் துள்ளலாய் இறங்கி வந்தவளை பார்த்து மனம் கனிந்தது. இவள் என் வீட்டிற்குள் நுழைந்த அந்த நாள் இன்றும் என் மனக்கண்ணில் அப்படியே. கொட்டும் கோடை மழையில் இடி மின்னல் என தாரைத் தப்பட்டையோடும், ஒளி வெள்ளத்தோடும், பின்னணி இசை ஆரவாரமாய் இருந்தபோதும், அமெரிக்கையாய் அட்டகாசமான குடையின் கீழ் சூரியனாய் (என்ன ஒரு முரண் மழைக்காலம், கையில் குடை, நனையாத சூரியன்) அவளைப்பற்றி இப்படி நினைக்க வைத்தது எது?? அவள் தோற்றமா? அவள் சிரிப்பா? வந்து வாடகைக்கு விடப்பட்டிருக்கும் மேல்மாடி பார்க்க வந்திருக்கிறேன் என்று சொன்ன நாள் இன்றும் பசுமையாய் என்னுள். பெயர் மேகா என்றாள்.

வாடகைக்கு வந்தவள் மேல் படியில் நிற்காமல் இறங்கி வந்து எங்களுடன் கலந்தாள். கோடை மழையில் நுழைந்தவள் ஆயினும் காலம் தப்பா பருவ மழையாய், இந்த வறண்ட மனதை ஈரமாக்கினாள். சிரிப்பு தொலைந்துபோன எங்கள் இதழின் வறட்சியை போக்கி புன்சிரிப்பைத் தந்தாள் யார் இவள்? எங்கிருந்து வந்தாள்?

எங்களை  வேண்டாம் என்று உதறித்தள்ளி, குடும்ப கௌரவத்தை கப்பல் ஏற்றி ஓடிப்போன மகளால் சிறகொடிந்த பறவைகளாய் வெளி உலகத் தொடர்பே இன்றி எந்த உறவும் வேண்டாம் என தவிர்த்து ஒதுங்கி ஒடுங்கி வாழ்ந்த எங்களை இன்று கைபிடித்து எங்கே அழைத்துச் செல்கிறாள்? சட்டென்று கார் குலுக்கி நின்றதில் இடம் வந்து விட்டதை உணர்ந்தோம். இறங்கிய பொழுது நான் மட்டும் இறங்கியதாக தெரியவில்லை. ஒரு பெரும் இடி என் தலையில் விழுந்ததாக நினைத்தேன். வந்த இடம் அப்படி உள்ளே வர மாட்டேன் என்று முரண்டு பிடித்தேன். கெஞ்சி கொஞ்சி அழைத்துச் சென்றாள். பட்டுப்புடவைக் கட்டி தலை நிறைய பூ வைத்து சரஸ்வதியாய் அவள் கெஞ்சிய பொழுது மறுக்க முடியவில்லை. வேண்டா வெறுப்பாய் உள் சென்று அமர்ந்தோம். என்னைக் கண்டவர்கள் ஓடிவந்து என்னை பவ்யமாய் வணங்கியது என்னைப் பலமாய் தாக்கியது.

திரை விலகியது. கண்ணில் தெரிந்த காட்சி என் கற்பனைக்கு எட்டாத காட்சியாக ஒளிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் என் காதில் விழுந்த போது நான் நானாக இல்லை. என்னை சுற்றி ஒரு உலகமே இல்லை மூன்று மணி நேரம் மயக்கத்தில் இருந்தேன் நான். என்ன நடக்கிறது??அறுபட்ட தந்தியாய் என் மயக்கம் படாரென முறிந்து நிகழ்காலத்தில் நுழைந்தேன் அவள் எங்கள் கரம்பிடித்து அழைத்துச் சென்றாள். மேலே ஏற்றினாள். ஒன்றுமே புரியவில்லை, பேச்சு, நடை தடுமாறியது ஏன்? எதற்கு? யார் இவள்?

இதோ விடைகள் என் காதில் விழுகிறது. சங்கீத வித்வான் கலைமாமணி சேஷாத்ரியின் பேத்தி மேக ரஞ்சனியின் அருமையான இசை கச்சேரியைக் கேட்டோம். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று மேடையில் நின்றவர் சொல்லிக்கொண்டு ஒரு பூமாலையை என் கழுத்திலும் இன்னொரு பூமாலையை அவள் கையிலும் தந்த பொழுதுதான் புரிந்தது. அப்பாவின் கனவை தான்  ஏமாற்றி சுட்டுப் பொசுக்கியதற்கு தன் மகள் மேக ரஞ்சனியை இசைத்து எங்கள் மனதில் மழை பெய்ய செய்தவள் எங்கள் மகள் அமிர்தவர்ஷினி என்று. கோடை நிரந்தரமல்ல, பருவம் வந்தால் மழையும் வரும், வறட்சியும் தீரும் என்பது புரிந்தது. மழை ராகம் அமிர்தவர்ஷினி மட்டுமல்ல மேகரஞ்சனியும்  தான். எங்கள் கண்ணில் சாரல் மழை மேடையில் மேகா பொழிந்தது. இசை மழை, எங்களுக்கு புரிந்தது இதுவும் கடந்து போகும் வசந்தம் வருமென்று இருபது வருட கோபத்தை சுமந்தது வீணோ?? இதோ கார் கண்ணாடியை இறக்கிவிட்டேன் சாரல் கொஞ்சம் என்னை நனைக்கட்டுமே அன்பால் உடைந்த உள்ளம், பேத்தியால் நனைந்த உள்ளம், உடலும் கொஞ்சம் நனையட்டுமே ஆனந்தத்தால் மட்டுமல்ல மழையாலும் தான் கரைந்து விட மாட்டேன்.

கதையாசிரியர் : – செவியின்ப சங்கீதா