ஆட்டனத்தி – ஆதிமந்தி

பளபளவென மின்னும் தன் பொற்கிரணங்களைப் பரிதியவன் மெது மெதுவாகக் காரெழிலினில் மறைத்துக் கொண்டிருக்கும் மங்குல் சூழும் அந்திமாலை நேரம். பொன்னை உருக்கி வார்த்தது போல் சல சலவென்று இருகரைகளையும் அணைத்தவாறு ஓடிக் கொண்டிருந்த காவிரி ஆற்றங்கரையில், மஞ்ஞை தன் தூவி விரித்தாடுவதைப்போல் மெல்லிடை வளைத்து நடம்புரிந்து கொண்டிருந்தாள் நன்மங்கை ஒருத்தி. அவள் அருகில் அவ்வணங்கின் ஆட்டத்தை மெய் மறந்து ரசித்துக் கண்ணுற்றுக் கொண்டிருந்தான் கட்டிளங்காளையொருவன்.

காரிகையவளின் கயல் போன்ற இரு நயனங்களும், காந்தளையொத்த பூவிரல்கள் பிடிக்கும் அபிநயத்திற்கேற்ப, மலரினைச் சுற்றும் கரு ஞிமிறு போல அங்கும் இங்கும் சுழன்ற வண்ணமிருந்தன. பருத்துத் தடித்திருக்கும் பவழ நிற அதரங்களில் குறுநகை தவழ, தேனில் குழைத்தெடுத்த மதுர மொழியினில் கீதமிசைத்துக் கொண்டு, அதற்கேற்ப பாவனைகளைத் தன் பளிங்கினும் மேலான வதனத்தில் படரவிட்டு, அபிநயம் பிடித்துக் கொண்டிருக்க, மயிற்பீலியையொத்த காரிகையின் கார்குழலானது மெல்லினலாளின் கொடியிடையோடு போட்டி போட்டுக் கொண்டு தானும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தது.

நங்கையவளின் நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஏகக் கலா ரசிகனானவன், திணவேறிய தன் இரு புயங்களையும் சேர்த்து, பூங்கொடியாளின் இடைவளைத்து, தன் வயிரமேறிய இரும்பு மார்போடு சேர்த்தணைத்து, தன் காந்தப் பார்வையினால் தத்தையவள் விழிகளுக்கு விலங்கிட்டு, தன் செவ்விதழால் ஏந்திழையவள் மென்னிதழைச் சிறையெடுத்திருந்தான்.

நங்கையவளின் தேகத்தை நாணமானது தத்தெடுக்க, காதலன் கைப்பிடியிலிருந்து, தன்னை விடுவித்துக்கொண்டவள், தன்னவனை நோக்கி, “என் உளம் கவர் மன்னவனே! நும் காந்தப் பார்வை கொண்டே இப்பேதையவளின் இதயத்தைக் களவாடிச் சென்றுவிட்டீர். அது போதாது என்று இந்த ஆடுகள மகளை, ஆடுகளக் கூட்டத்தின் குரிசிலாகிய (தலைவன்) தாம், தமது அற்புத நீச்சல் நடனத்தினால் எம்மை மொத்தமாகத் தம் வயப்படுத்திவிட்டீர்கள். தேனொழுகும் தம் திருவாய் மொழிகளால் இப்பேதைப் பெண்ணைத் தம் மீது மையல் கொள்ள வைத்து எம்மை ஏமாற்றப் பார்க்கிறீரல்லவா? இன்று அவ்வாறு யான் ஏமாறப்போவதில்லை. யான் தற்சமயம் தம் மீது ஊடல் கொண்டுள்ளேன் ஆட்டனத்தி” என்றாள்.

“என் கண்ணே, அன்பும் காதலும் ததும்பும் உன்னிரு நயனங்களில் இன்று ஏனடி இத்தனை கலக்கம்? நின்னைக் காண ஓடோடி வந்த எம்மைப் பாராமுகம் காட்டி வதைப்பதும் ஏனடி பெண்ணே? என்பால் ஊடல் கொண்டதன் காரணம்தான் என்ன? மொழிவாய் ஆதிமந்தி” என்றான் ஆட்டனத்தி.
 
“செய்வதையும் செய்துவிட்டு காரணத்தையா வினவுகிறீர்? கேளுமின் ஆட்டனத்தியாரே, தாம் கடந்த பத்து தினங்களாக எம்மைச் சந்திக்க வரவில்லை. பேதையவளைப் பசலை கொள்ளச் செய்து அதில் ஆனந்தம் காண எண்ணம் கொண்டீரோ?” – ஆதிமந்தி.
 
இதற்கடையோரம் குறுநகை உதிர்த்தவன், “அடி பேதைப் பெண்ணே, இதுதானா உன் மனம் கொண்ட ஊடலுக்குக் காரணம்? உன் ஊடலை இக்கணமே போக்கிக் காட்டுகிறேன். உரைக்கிறேன் கேளடி என் கண்ணே, நின்னைப் பசலை கொள்ளச் செய்துவிட்டு யான் மட்டும் எவ்வாறடி ஆனந்தமாக இருப்பேன்? என்னவளின் அருகாமையே யான் விரும்பும் பேரானந்தமல்லவா. நின்னைக் காணாத இந்தப் பத்து தினங்களும் எமக்கு நரகத்தினும் கொடிதாக இருந்ததடி என் கண்மணி. இனியும் அத்துனியைத் தாங்க இயலாதென்றே எனது நடனப் பயிற்சியையும் விட்டுவிட்டு இன்று ஓடோடிவந்தேன் என்னவளின் பூமுகம் காண” என மொழிந்தான் ஆட்டனத்தி.

“மீண்டும் எம்மிடம் பசப்பு வார்த்தை கொண்டு மொழியாடி எம்மை ஏமாற்ற வேண்டாம், தங்களுக்கு இதுவே வழமையாகிவிட்டதல்லவா? பத்து தினங்களாக எம்மைக் காணாது கூட அப்படியென்ன அவசியம் நேர்ந்தது நடனப் பயிற்சிக்கு?” – ஆதிமந்தி.

“அடிப்பெண்ணே, உண்மையில் நீ ஏதுமறியா பேதைப்பெண்தானடி” என்று நகைத்தவன், “இன்னும் இரு தினங்களில் காவிரித்துறையில் நீச்சல் நடனப்போட்டி நடைபெறவிருக்கிறது. அதற்குத் தலைமை வகிக்கப் போகின்றவர் நின் தந்தையும் சோழத்தின் மாமன்னருமான கரிகால் பெருவளத்தார் ஆவார். அதில் யான் வெற்றிக்கனியைக் கொய்து, என் இதயக்கனியைக் கொய்தவளைக் கரம் பற்ற எண்ணியே தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். இப்போது சொல்லடி என் செல்வமே, யான் இழைத்த செயலில் ஏதும் குற்றம் உளதோ?” – ஆட்டனத்தி.
 
அன்றலர்ந்த தாமரை மலரைப்போல வதனம் மலர்ந்தவள் முத்துநகை புரிந்தவாறே, “தாம் உரைப்பது மெய்தானா அத்தி? நீச்சல் நடனப் போட்டியில் தாம் பங்குபெறப்போகிறீர்களா? அப்படியெனில் தாம் நிச்சயம் வெற்றிவாகை சூடுவீர்கள் என்பதில் ஐயமில்லை. அதன்பின் இப்பேதையின் கழுத்தில் தாம் நிச்சயம் பூமாலை சூடுவீர்கள் அல்லவா?” – ஆதிமந்தி.
 
இதழ் விரித்து மென்னகை பூத்தவன், “என் மீதான ஐயம் இன்னும் உனக்குத் தீரவில்லையா ஆதி? இதோ நம் முன் சல சலத்து ஓடும் சோழத்தின் தாயாகிய காவிரித்தாயின் மீது அறுதியிட்டுக் கூறுகிறேன், போட்டியில் வெற்றிவாகை சூடிய கரத்தோடு, நின் கழுத்தினில் பூமாலை சூடி நின் மென்கரம் பற்றுவேன். இது சேரர் வழி வந்த ஆட்டனத்தி நான் உனக்களிக்கும் வாக்கு” – ஆட்டனத்தி.
 
அகமும் முகமும் மலர, விழியிரண்டும் ஆனந்தத்தில் உவர் நீர் உகுக்க, தன்னவன் மார்போடு தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டாள் ஆடலணங்கான ஆதிமந்தியவள்.

இருதினங்களும் துணைமலர்கள் காதல் மொழி பேசிக் களித்திருக்க, போட்டித் தினமும் வந்திருந்தது.

பல பலவென்று பொழுது புலர்ந்திருக்க, ஆதவன் தன் பொன்மேனியுடன் மேகமென்னும் பஞ்சுப் பொதிக்குள் தவழ்ந்தவாறே தன் இளங்கதிர்க் கரங்களால் தன் காதலியான பூமிதேவியினை அணைத்துக் கொண்டிருந்தவேளை, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பசுஞ்சோலைகளின் கொஞ்சும் எழிலுக்கு மத்தியில், கழாரின் காவிரித் துறையினில், காவிரி நதியின் பிரவாகத்திற்குப் போட்டியாக இருகரையிலும் மக்கள் பிரவாகம் கரைபுரண்டு காட்சியளித்தது.

மக்களின் ஆரவாரத்திற்கு இடையில், “அமைதியாக இருங்கோள், மாமன்னர் காவிரித் துறை நோக்கி வருகைப் புரிந்து கொண்டுள்ளார்” என்ற காவல் வீரனின் குரல் கேட்டு ஆர்பரித்துக் கொண்டிருந்த மக்கள் அமைதியைத் தத்தெடுத்திருந்தனர். சிறிது நேரத்தில், “மாமன்னர் கரிகால் பெருவளத்தான் வாழிய வாழியவே! வெண்ணிப்போர் கொண்ட மாவளத்தான் வாழிய நீ வாழியவே! இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய இயல்தேர் வளவா வாழிய நின் புகழ்! காவிரித்தாய் மீது கல்லணை எடுப்பித்த திருமா வளவா, வாழிய வாழியவே! நீ வாழியவே!” என்னும் மக்களின் வாழ்த்தொலிகள் விண்ணைப் பிளக்க, அரியாசனம் அமைக்கப்பட்ட பீடத்தினை நோக்கி வீறு நடையிட்டு, வேங்கையென வந்தமர்ந்தான் சோழத்தின் திருச்செல்வனவன் கரிகாலன். 
மத்தகஜமே அஞ்சி அடிபணியும் அப்படியொரு கம்பீரத் தோற்றம், பகலவனின் பொன்னொளியை ஒத்திருக்கும் கண்களில், காண்போரை வசீகரிக்கும் காந்த சக்தியோடு கலந்திருந்த தீட்சண்யம், முறுக்கேறிய வீர முகத்திற்கு மேலும் வீரத்தையூட்டும் முறுக்கிவிடப்பட்ட அடர்ந்த மீசை, கொவ்வைச்செவ்வாயில் தவழும் குறுநகை, காற்றோடு ஜதிபேசும் குண்டலங்களோடு இணைந்தாடிக் கதை பேசும் கார் சுரியல். களிற்றின் துதிக்கையையொத்த வயிரமேறிய இரு புயங்கள், அப்புயங்களுக்கு மெருகூட்டும் வகையில் பளபளவென மின்னும் வீரக் கேயூரங்கள். வச்சிரம் பாய்ந்த கடம்பத்தையொத்த மார்பில் தவழும் நன் வெண்முத்து வடமும், பவழ மாலைகளும், நவமணி மாலைகளும் ஜொலித்தன. இரும்பினையொத்துப் பரந்து விரிந்த தோள்கள், அவற்றிற்கு நேரெதிராய்க் குறுகிய இருப்பினும் உறுதியான இடையில் வீரவாள் தரித்துக் கம்பீரத்திற்கே இலக்கணமாய் வீற்றிருந்தான் மாவீரன் இளஞ்சேட்சென்னியின் மைந்தனவன்.

ஆதிமந்தியும் தன் காதலனின் நடனம் காண சீவி, சிங்காரித்துப் பொன்மகளென தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள். இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே.போட்டியானது துவங்கட்டும் என்றுத் தன் ஒற்றைக் கையசைப்பில் போட்டியைத் துவக்கி வைத்தான் மன்னாதி மன்னனவன்.

கோமகனையும், காவிரித் தாயினையும் வணங்கி, பொங்கி வரும் காவிரியின் பிரவாகத்தில் இறங்கி நின்றார்கள் ஆட்டக்காரர்களாகிய ஆட்டனத்தியும் அவன் இணைப் போட்டியாளாகிய காவிரி என்பவளும். 

சங்கம், மேளம், பறை, கொம்பு போன்ற வாத்தியங்களினால் இன்னிசை முழங்கிற்று. ஆட்டம் துவங்கியது.
ஆட்டனத்தி பலப் பல புதுவிதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தித் தன் திறன் முழுமையும் பறைசாற்றிக் கொண்டிருந்தான். தன் காலில் அணிந்திருந்த கழல் நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டி ஆடிக் காட்டினான். தன் வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டிக் காட்டினான்.


ஆதிமந்தி வைத்தக் கண் எடுக்காது தன்னவனின் ஆட்டத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல, ஆட்டனத்தியோடு இணை நடம் புரிந்த காவிரி அவன் அழகிலும் ஆட்டத்திலும் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள். அப்போதுக் காவிரியின் பிரவாகம் காவிரியை இழுத்துச் செல்ல முயல, நடமாடியவாறே ஆட்டனத்தியைத் தன் நீண்ட கருங்கூந்தலால் வளைத்து மறைத்து, காவிரி நதியின் பிரவாகத்தோடு அவனை இழுத்துச் செல்லத் துவங்கினாள். அந்நேரம் காவிரியின் பிரவாகமானது பொங்கிப் பெருகி அந்தக் காவிரி என்னும் பெண்ணையும் ஆட்டனத்தியையும் அடித்துச் செல்லத் தொடங்கியது.
கப்பற்படையில் சிறந்து விளங்கிய சேரர் வழி வந்த ஆட்டனத்தியைக் கடலன்னை அரவணைத்துக் காவிரி தன்னோடு சங்கமிக்குமிடத்தில் அவனைக் கரை சேர்த்திருந்தாள்.

நதிப் பிரவாகத்தினால் அடித்துச் செல்லப்பட்டு மூர்க்கமானப் பாறைகளில் மோதிப் படுகாயமுற்றுக் கிடந்தான் ஆட்டனத்தி. அவ்வழி வந்த பரதவக் கோமான் பல்வேல் மத்தியின் புதல்வி  மருதி என்பவள் ஆட்டனத்தியின் நிலைக் கண்டு அவனைத் தன் வசிப்பிடம் இட்டுச்சென்று அவனுக்கு வைத்தியச் சேவை புரிந்துவந்தாள். நாளிடைவில் ஆட்டனத்தியின் மீது காதல் வயப்பட்டு அவனையே தன் மனம் கவர் மணாளனாக வரித்து வாழ்ந்து வந்தாள்.ஆட்டனத்தியோ ஏந்திழையான தன்னவளை எண்ணி எண்ணி மருகியபடியிருந்ததால் உடல் நிலை தேறாது கிடந்தான்.

இந்நிலையில், நதி கொண்ட தன்னவனை எண்ணி, மருகித் தவித்து, தன் மனம் கொண்ட மன்னவன் நிச்சயம் பிழைத்திருக்கக் கூடும் என்று ஆற்றின் கரையோரமாக ஓடிச் சென்று, “என் காதலனைக் கண்டீரோ?”என்று மக்களிடம் ஆட்டனத்தியின் அங்க அடையாளங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆதிமந்தி.
இப்படியே புலம்பிக்கொண்டே நதியின் கரை நெடுகிலும் சென்றவள் மருதியின் வசிப்பிடம் இருக்கும் பகுதியை வந்தடைந்தாள். அங்கே மீண்டும், “அவனை மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கையாடும் இடங்களிலும் தேடினேன், எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன், என்னை மணக்கும் தகுதியுள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள், அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பீடு மிக்கவன். ஆடுகளக் கூட்டத்திற்குத் தலைவனவன். அவனை எண்ணி என் கைச் சங்கு வளையானது நழுவுகிறது” என்று கூறித் தன் காதலனைக் கண்டீரோ என்று அழுது புலம்பினாள்.

அப்போது அங்கே நீராடிக் கொண்டிருந்த மருதி ஆதிமந்தியின் புலம்பலைக் கேட்டாள். அவள் மனமானது ஆதிமந்தியின் மேல் இரக்கம் கொண்டது. ஆதிமந்தியை ஆட்டனத்தி இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். தன்னவளைக் கண்ட ஆட்டனத்தியின் முகம் பிரகாசமடைந்தது. ஆதிமந்தி பெரு மகிழ்ச்சியடைந்தவளாகத் தன்னவனைக் கரம் பற்றி அவன் மார்போடு தன் முகம் புதைத்து விம்மினாள்.

 “உனக்கு நான் எவ்வகையில் கைம்மாறு செய்யப்போகிறேன் என்றறியேன் பெண்ணே! என் வாழ்வை மீட்டெடுத்து என் உயிருக்கு உயிரளித்த மாதரசியே, நீ வாழி!நின் குலம் வாழி!” என்று மருதியை வாழ்த்தினாள் ஆதி மந்தி.

 “தாம் பெரும் பாக்கியசாலியம்மா. தமக்குத் தமது வாழ்வானது கிட்டிவிட்டது. ஆனால் இவரையே மனதிற்கினிய மணாளனாக வரித்த இந்தப் பேதைக்கு இனி போக்கிடமேது? இனி இந்தக் கூடு வாழ்ந்து என்ன பயன்?” என்று கேட்டுக் கொண்டே கடலை நோக்கி ஓடினாள் மருதி. இதைக் கேட்டு அதிர்ந்த ஆதிமந்தி மருதியின் பின்னே ஓடினாள், அதற்குள்  கடலில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டுவிட்டாள் அந்தக் கற்புக்கரசி.

விழிகளில் நீர் வழிய தன்னவனிடம் சென்றவள், மருதியின் தியாகத்தைச் சொல்லிச் சொல்லிப் புலம்பினாள். ஆட்டனத்தியின் விழிகளிலும் நீர் வழிந்தோடியது. தங்களுக்கு மறுவாழ்வளித்த மாதரசியின் தியாகச் செயலைத் தம் உயிருள்ளவரை போற்றிப் பாடிக்கொண்டிருந்தன இணைப் பறவைகள் இரண்டும்.


(குறிப்பு : இக்கதையானது, சங்க இலக்கியமாகிய குறுந்தொகையின் முப்பத்தி ஒன்றாவது பாடலையும் அது கூறும் செய்தியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)


#குறுந்தொகை 
பாடல் எண் : 31
திணை : மருதம்
பாடியவர் : ஆதிமந்தியார்

காதலனைக் காணாது தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.


“மள்ளர் குழீஇய விழவினானும்மகளிர் தழீஇய துணங்கையானும்யாண்டும் காணேன் மாண்தக்கோனையானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்தபீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே”.

  • கதையாசிரியர் : ரஞ்சனி, அருள்மொழிவர்மன் காதலி