
கடந்த சனிக்கிழமையன்று (10.07.2021) உதகையில் கோத்தாஸ் இன பழங்குடி மக்கள், அதாவது ஆதிக்குடி மக்களுடனான சந்திப்பை, பறம்பு தமிழ்ச்சங்கத்திற்கு தூரிகை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
பறம்பு தமிழ்ச் சங்கம் சார்பாக ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை கொடுப்பதற்காக கடந்த காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கினால் அதைச் செயல்படுத்துவதில் காலதாமம் ஆனது. தற்போது அதைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் நம் பறம்பு தமிழ்ச் சங்கம் சார்பில் செயலாளர் தோழர் அங்கயற்கண்ணி அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நெகிழ்வான நிகழ்வின் நினைவு கூறல். இதோ அவர் குரல் மூலமாகவே.

“ஒட்டு மொத்த மக்களையும் குழந்தைகளையும் சந்தித்தது வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வாக, மகிழ்வாக ஆனது. அங்குள்ள மிகப்பெரிய மரம்தான் அவர்களின் அடையாளம்…அந்த மரத்தின் வேர்கள் 2 1/2 .கி.மீ.க்கு மேல் நீண்டு இருப்பதாக அம்மக்கள் மரத்தின் பிரம்மாண்டம் பற்றி பேசும்போது குறிப்பிட்டார்கள்.

பழங்குடியினர் என வகை படுத்தப்பட்ட மக்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட நாகரீகம், தொன்மையான கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என்று காலம் காலமாக பின்பற்றி, அதை சார்ந்து தங்களின் வாழ்க்கை தரத்தை அமைத்து வாழ்ந்து வருபவர்கள். மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் என வகைப்படுத்தப்பட்டு அறியப்படும் அவர்கள் தங்களுக்கு உரிய நிலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டு சவாலான இயற்கை சூழலில் வாழ பழகி கொண்டவர்கள்.
எத்தனை சலுகைகளை அரசு அறிவிப்பினும் அச்சலுகைகள் குறித்த விழிப்புணர்வின்றி வாழும் மலைவாழ் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் அறியாமையும், விழிப்புணர்வின்மையும்தான் கல்வியில் பின்தங்கி இருக்க முக்கிய காரணங்களாகும்.
இதனிடையே அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வும் மிக குறைந்தே காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பழங்குடியினரின் வாழ்வின் முன்னேற்றம் அவர்களின் அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியிலேயே அடங்கியுள்ளது. எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கைகளை அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதத்தில் சீராக அமைத்தல் தற்போதைய முக்கிய தேவையாகும்.

எல்லாத் தடைகளையும் மீறி சாதிக்கும் வெகு சில பழங்குடியினத்தவரை சமுதாயம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கடந்து வந்த கரடுமுரடான பாதையை மதியாமல் இன்றும் அவர்களை சாதி அடிப்படையில் ஒதுக்கும் சம்பவங்களும் நிகழாமல் இல்லை. இதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பெண் மருத்துவரின் தற்கொலை. இருபத்தியாறே வயதான இளம் மருத்துவர் “பாயல் தாத்வி” கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். காரணம் சாதியின் பெயரால் அவருக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்கள்.

இது போன்ற அவமானங்களும், வேதனைகளும் வெளியில் தெரியாமல் இன்னமும் பழங்குடியினத்தவருக்கு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதை களையெடுப்பது நமது கடமையாகும். சார்லஸ் டார்வினின் “தக்கன பிழைக்கும்” கொள்கையின் பெரும் உதாரணம் பழங்குடியினத்தவர்கள். அசாதாரண சூழலில் பிறந்து, வாழ்ந்து, கடும் சவால்களை சந்தித்தே பிறகே அவர்கள் சாதிக்கின்றனர். கல்வியின் அவசியத்தை மெதுமெதுவாக உணர தொடங்கியுள்ள அவர்கள் எல்லா துறையிலும் சிறப்பாக சாதிக்க அரசும், சமூகமும் துணை நிற்பது இன்றியமையாத கடமையாகும். இதுவே உள்ளடக்கிய வளர்ச்சியை சமுதாயம் அடைவதற்கான சிறந்த வழிமுறையாகும்.
இவர்களை கல்வியில் உயர்த்தினாலே எல்லாம் உயரும். இவர்கள் நம்
பறம்பின் குடிகளே என்ற ஆதங்கம் எனக்குள்ளே ஆழமாகிப்போனது.
ஏதோ ஒரு காரணத்துக்காகவே இந்தச் சந்திப்பு உருவாக்கப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.
அந்தக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியே நமது லட்சியம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டேன்… “

இதுதான் தோழர். அங்கயற்கண்ணி அவர்களின் நெகிழ்வான பதிவு. பெறுந்தொற்றுக்காலம் என்பதால் நம் வேள்பாரி வாசகர்களின் சார்பாகவும் கூட அவர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய சூழல்.
இந்த பெறுந்தொற்று காலத்திலும், நம் ஆசான் சு.வெ அவர்களின் வரிகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் பெருந்தொற்றுக் கால விதிகளுக்கேற்ப பறம்பு தமிழ்ச் சங்கம், பாணர்களின், பறம்புக் குடிகளின் துணையோடு தன் கடமைகளை விடாது நிறைவேற்றி வருகிறது.
நன்றி உறவுகளே…
பறம்பு தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துகள்!!!