ஆயிஷா- நூல் விமர்சனம்

நூல்: ஆயிஷா

ஆசிரியர்: ஆயிஷா நடராசன் 

ஆயிஷா- பள்ளிக் கூடச் சிறுமியின் துயரக்கதை. இக்கதை ஓர் அறிவியல் ஆசிரியையின் பார்வையில் சொல்லப்படுவது போல் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவியான ஆயிஷா தன் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அதாவது அவள் படிக்கும் வகுப்புப் பாடங்களைக் கடந்து பலவிதமான கேள்விகளை, அதன் காரணங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். காரணம், பாடங்களைக் கடந்த வாசிப்பு ஆர்வம் அவளிடம் உண்டு. எல்லையில்லாத அவளின் அறிந்து கொள்ளும் ஆர்வமும் இதற்குக் காரணம்.

ஆயிஷா என்ற இக்கதையை நாம் மூன்று கோணங்களில் பார்வையிடலாம்.

கேள்விகளின் நாயகி ஆயிஷா:

ஆயிஷா 15 வயதுப் பெண். பத்தாம் வகுப்பு பி பிரிவில் 56 மாணவிகளில் ஒருத்தி. முன் நீட்டிய பல்வரிசையும், ஒல்லியான தேகமும் உடையவள். ஆசிரியர்களைக் கவரும் முகபாவனை அற்றவள். ஆனால், அறிவியல் ஆர்வம் மிகுந்தவள். அவள் வகுப்பறையில் கேட்ட கேள்விகளை இப்பொழுது வரிசைப்படுத்தலாம்.

  • செவ்வக வடிவ காந்தத்தை இரண்டாக வெட்டினால் என்ன ஆகும்? காந்தத்தைத் துண்டு துண்டாக வெட்டி அனைத்தும் முடிவுறா எண் என்று வைத்துக் கொண்டால் என்ன கிடைக்கும்? முடிவுறாக் காந்தங்களை  நேர்கோட்டில் வைத்தால் அதன் எதிர் துருவம் கவரும் தன்மை என்ன ஆகும்? எல்லாக் காந்தங்களின் கவர் திறனும் ஒன்று எனக் கொண்டால் அது ஒட்டிக்கொள்ள இழுத்துக் கொள்ள வாய்ப்பே இல்லையே.. நகரவும் முடியாது, இழுக்கும் விலக்கும் விசை சமமாக இருந்தால் இயக்கமே இல்லை, அப்படியே தான் இருக்கும். அதன்படி, இந்தப் பிரபஞ்சமே முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்தது போல் நினைத்து, அந்தக் கோணத்தில் பூமியை ஒரு காந்தமாக ஆராயலாம் இல்லையா?
  • ஒரு எரியும் மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் இருக்கிறது. ஆனால், எரியும் அடுப்பில் வெப்பம் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் இருக்கிறதே, ஏன்?
  • துணி சோப்பு அழுக்கை அகற்றுவதற்கும், குளியல் சோப்பு அழுக்கை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
  • அசோகரை புத்த மதத்திற்கு மாற்றியது யார்?

இதுபோன்று ஒரு விஞ்ஞானியின் தேர்ந்த குணத்தோடு கேள்விகள் விழுந்துகொண்டே இருக்கும். சிறிய நோட்டில் நூற்றுக்கணக்கில் கேள்விகளை எழுதி வைத்திருந்தாள்.

மேலே உள்ள கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் தெரிந்தவர்களும் உண்டு. தெரியாதவர்களும் உண்டு. ஆனால், இந்நூலாசிரியர் இக்கதையில் கேள்விகளை மட்டுமே வைத்துள்ளார். அதற்கான பதில்களை நாம் இக்கதையில் வரும் ஆயிஷாவைப் போல் தேடலுடன் தேடிப் பெற வேண்டும் என்பது நூலாசிரியரின் எண்ணமாகவும்  இருந்திருக்கலாம்.

  1. பள்ளிக்கூடமா? பலிக்கூடமா?

ஆயிஷா படிக்கும் பள்ளியின் ஆசிரியைகள் மாணவர்களின் மீது அக்கறை அற்றவர்களாகவும், அவர்களின் அறிவை வளர்க்கும் எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு நோட்ஸில் உள்ள பதில்களை எழுத வைப்பவர்களாகவும், அவர்கள் எந்தவிதக் கேள்விகளும் கேட்காமல் தங்களது கட்டளைகளுக்குக் கட்டுப்படும்படியும் வைத்திருந்தனர். ஆசிரியர்கள் ஓய்வு அறைகளில் அரட்டை அடிப்பதிலும், புதுப் புடவைகளின் டிசைனைப் பற்றிப் பேசுவதிலும், மாணவிகளுக்குப் பட்டப்பெயர் வைத்து சிரித்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்.

ஆயிஷா ஒரு முறை பதினொன்றாம் வகுப்பு லாஜிக் கணக்கை மாணவிகளுக்குப் போட்டுத் தந்ததற்காக, கணக்கு ஆசிரியரிடம் அதிக அடி வாங்கினாள். அசோகரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் யார் என்று கேட்டு வரலாற்று ஆசிரியையிடம்  அடி வாங்கினாள். நோட்ஸ் இல்லாமல் சுயமாக சிந்தித்து பதில் எழுதியதற்காக வேதியியல் ஆசிரியையிடமும் அடி வாங்கினாள்.

தனக்கு விருப்பமான அறிவியல் ஆசிரியையிடம் அவள் ஒருநாள் அழுதுகொண்டே,“டீச்சர் அடிச்சா வலிக்காமல் இருக்க ஏதாவது மருந்து இருக்கா?”- என்று கேட்டாள். ஒருநாள் அறிவியல் ஆசிரியை ஹம்ப்ரி டேவி என்னும் அறுவை சிகிச்சை நிபுணர், அறுவை சிகிச்சை செய்யும்போது மரத்துப் போக வைக்க நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைக் கண்டுபிடித்து பயன்படுத்தினார் என்று பாடம் நடத்தினார். ஆயிஷாவும் நைட்ரஸ் ஆக்சைடு தண்ணீரில் கரையுமா? என்றாள். அதற்கு அறிவியல் ஆசிரியை தண்ணீர், எத்தனால், சல்பியூரிக் அமிலத்தில் கரையும் என்றார். அதுவே ஆயிஷாவின் முடிவுக்குக் காரணமான பதில் என்று அப்போது அறிவியல் ஆசிரியை அறியவில்லை.

ஒரு நாள் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் அனைவரும் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில் அறிவியல் ஆசிரியையை ஆயிஷா அறிவியல் கூடத்திற்கு அழைப்பதாக ஒரு மாணவி வந்து சொன்னாள். அறிவியல் கூடத்திற்குச் சென்ற ஆசிரியையிடம், ஆயிஷா மிகவும் சந்தோஷமான குரலில்,”எக்ஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்… சக்ஸஸ்…” என்று கத்தினாள். என்ன எக்ஸ்பிரிமெண்ட் செய்தாள் என்று ஆயிஷா கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

3.நூலாசிரியரின் பார்வையில்:

வயதுக்கு வந்த பின்னர் பள்ளி வராமல் நின்ற ஆயிஷாக்கள்..

சிறுவயதில் திருமணம், குடும்பம் என்றான ஆயிஷாக்கள்..

குறைந்த ஊதியத்தில் வீட்டு வேலைகள், கட்டிடத் தொழிலாளி, விவசாயக் கூலிகளாக உள்ள ஆயிஷாக்கள்..

விஞ்ஞானக் கனவுகளை அடுப்பு நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கி விடும் ஆயிஷாக்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

என்று முடித்திருக்கிறார் “ஆயிஷா” இரா.நடராஜன்.

கதையின் நாயகி ஆயிஷா இறுதியாகக் கேட்ட கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன்…

மிஸ்.. கரோலின் ஹெர்ஷல், மேரி க்யூரி போல இந்தியாவில் பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் விஞ்ஞானி கூட வர முடியவில்லையே ஏன்?”

கட்டுரையாளர் : அருணா குமாரி, ஆசிரியை