ஆயுள் தண்டனை

மஞ்சள் வெயில் மறந்த நேரம். வயதான ஒருவர் நடந்து வந்தபடி, “இது முனியாண்டி வீடா?” எனக் கேட்டார்.

“ஆமா.. முனியாண்டி என் அப்பாதான்.. நீங்க?”

“அவர் கூட்டாளிதான்.. நீ அவர் பெண்ணா?” 

“ஆமா” 

“ஏத்தா.. ஏதும் படிச்சு இருக்கியா?”

“ஏன் கேக்குற ஐயா?  அப்பா உள்ள இருக்காங்க..  இருங்க கூப்புடுறேன் அப்பா…”

வெளியில் வந்த முனியாண்டி, “என்னத்தா சத்தம்? ஏய்.. மூக்கையா என்னையா இங்க இவ்வளவு தூரம்? ஏத்தா யாருனு தெரியுதா.. நான் அடிக்கடி சொல்லுவேன்ல.. என் நண்பன் என, நான் ஜெயில் இருக்கும் போது வக்கீல் வைச்சு வாதாடி கேஸ்ல இருந்து வெளியில் கூட்டி வந்து, உங்க அப்பன மனுசனா மாத்தின தெய்வம் இவன் தான். சரி உங்க அம்மா இருந்தா இது சொல்லிருப்பா..”

“எங்க உன் மனைவி செண்பகம்?” எனக் கேட்டான் மூக்கையா.

“அவ எங்கள விட்டுப் போய் பல வருசம் ஆச்சு. என் தங்கச்சி தான் இவள வளத்தா. சில நாள் பொழப்பு தேடி ஏதாச்சும் எட்டி ஊர்பக்கம் போவேன். சரி மூக்கையா.. வராத ஆளு வந்து இருக்க.. இருந்து சாப்பிட்டு போ, உனக்கு பிடித்த பன்னி கறியும் சாராயமும் வாங்கிட்டு வரேன் இரு..”

“இல்லை நான் வந்த சேதியக் கேட்டுட்டு அப்பறமா விருந்து வைக்கிறதா வேண்டாமானு முடிவு பண்ணு” என்றான்  முனியாண்டி.

“என்னத்தக் கேட்க போற? நீ எது கேட்டாலும் இல்லனு சொல்ல முடியுமா?” எனச் சொன்னான் முனியாண்டி.

மூக்கையா எழுந்து வெளியே நடக்க போனான்.

“ஏய் மூக்கையா என்ன சொல்லிட்டேன்னு வெளியே போற?” 

“இல்ல முனியாண்டி. மனசு கஷ்டமா இருக்கு. எவ்வளவு உயர்வா என்னை நினைச்சு இருக்க.. மனசு கஷ்டமா இருக்குடா” என அழுதான் மூக்கையா. 

சிறுது நேரம் கழித்து சாராயம் குடித்த படி இரவு நிலவு ஒளியில், பன்றிக் கறியைத் தின்றபடி பேச்சை ஆரம்பித்தான்  மூக்கையா. 

“என் பையனுக்கு உன் பெண்ண கேக்கதான் வந்தேன். உன் கல்யாணத்தப்ப நீ சொன்ன, ‘எனக்கு குழந்தை பிறந்தா உன் குழந்தைக்கு கல்யாணம் பண்ணித்தாறே’னு சொன்னியே… ஞாபகம் இருக்கா?”  

“இதைக் கேக்க என்ன சங்கடம் மூக்கையா?  தாரளாமாக பொண்ணுத் தாரேன். இதோ இப்போவே கூட்டிப் போ உன் மருமகள” என்றான் முனியாண்டி.

“நான் இன்னும் முழுவதும் சொல்லல. அவன் ஒரு கொலை கேஸ்ல ஆயுள் தண்டனை கைதி”  என்றான் மூக்கையா.

“ஏன் என்ன ஆச்சு, மாப்பிள்ளை ஏன் அப்படி பண்ணுனார்னு நான் கேக்க மாட்டேன், உன் வளர்ப்பு எனக்குத் தெரியாதா மூக்கையா? எப்படியோ ஜெயிலில் இருந்து நாசமாப் போக வேண்டியவன். ஏதோ ஒரே சிறையில் சில நாள் இருந்த உன்னுடன் பழகின காரணத்தால, நீ வெளிய வரும் போது என்னையும் வெளியே எடுத்து  இன்னைக்கு மனுசனா மாத்துன ஆள் நீ. உனக்கு என்ன வேணும்னாலும் செய்வேன், என் பெண் உன் வீட்டு மருமகள் அவ்வளவுதான். சரியா? நீ கல்யாணத்துக்கு என்ன வேலை செய்யணுமோ அதச் செய்யி. மாப்பிள்ளைக்கு பரோல் போடு. எப்போ வருவார்?”

“உன் பெண்ணிடம் கேளுயா. விசயம் சொல்லு. சரினா பேசுவோம். பரோல் எடுக்க வக்கீல் கிட்ட பேசிட்டேன். ஒரே பையன் ஜெயில்ல இருக்கான். சும்மா இருக்க முடியலைய்யா” என அழுதான் மூக்கையா.

காலை வெயில் கண்ணில் பட  எழுந்தான் முனியாண்டி . 

“ஆத்தா நாகம்மை.. தண்ணீர் கொண்டு வா” என தங்கையை அழைத்தான்.

தண்ணீர் கொடுத்தபடி கேட்டாள் நாகம்மை. “என்ன விசயமா ஐயா வந்துட்டு போறாக?” (இரவு பேசியது காத்து வாக்கில் சேதி வாங்கி கொண்டு அதை உறுதிப்படுத்தக் கேட்டாள்.)

“இல்லைத்தா  நம்ம புள்ளைய அவங்க பையனுக்கு கேட்டு வந்தாக..”

“பையன் என்ன பண்ணுறாக? ஏதும் பண்ணையில் வேலையா? இல்லை, ஆடு  மாடு மேய்க்க  ஏதும் போறாங்களா? இல்லை படிச்சுட்டு உத்தியோகம் பார்க்கிறாங்களா?” எனக் கேட்டாள்.

“இல்லை நாகம்மை. கொலை கேஸ்ல ஜெயில்ல இருக்கார். பரோல் போட்டுதான் வெளியே வராக”

“ஏதோ சீமையில் வேலை செஞ்சு வாரது மாதிரி சொல்லுற .. ஏன்ணே உம் புள்ளைய எப்படி வளத்த நீ.. வெயில் பட்டா வேக்கும்.  மழை பெஞ்சா நனையும்னு பொத்தி வளத்த புள்ளய இப்படி பண்ணனுமா?

ஜெயிலுக்குப் போனவன கட்டிதான் என் வாழ்க்கை நாசமாப் போச்சு. ஜெயிலுக்குப் போனவன் எப்போ செத்தான் ஏன் செத்தான் என தெரியாமல் போச்சு.. என் வாழ்க்கை நாசமாப் போன மாதிரி உன் புள்ள வாழ்க்கை ஆகணுமா? யோசிச்சு பாருண்ணே”

“ஏத்தா உன் புருசன் திருட்டு கேசு விசாரணையில் அடிச்ச அடியில் ஏதோ படாத இடத்தில் பட்டு உயிர் போனதா சொன்னாங்க. நீ ஆசைப்பட்டனுதானே உனக்கு கட்டி வைச்சேன். நானா பாத்து வைச்சா கட்டி வைச்சேன்? அந்தக் குடும்பம் பற்றி தெரியும்த்தா. நல்ல குடும்பம். காசு பணம் குறையில்லாத குடும்பம். வீம்புக்கு  ஏதும் செஞ்சு ஜெயிலுக்கு போய்ருப்பாக. மூக்கையா மீது நிறைய நம்பிக்கை இருக்கு. கடைசியா கூட உன் குடும்பத்தை கலந்து சொல்லு. எல்லோர் சம்மதத்துடன் திருமணம் செய்வோம்னு சொல்லிட்டு போனாரு”

“சரி. எப்போ எங்க பேச்ச இந்த ஆம்பள சனம் கேக்க போகுது. பொம்பள சாமி கும்புடும் நீங்க எந்தப் பொம்பள பேச்ச கேட்டு இருக்கீங்க.. புள்ளையப் பெத்தது நீங்களா இருக்கலாம். அவ என் பொண்ணு”

“ஏத்தா.. எல்லாம் சரித்தா.. எங்க போனா வசந்தா?” 

“நீ நாலு எழுத்து படிக்க வைச்சதும் போதும் ஊர்ல யாருக்கு லெட்டர் வந்தாலும் இவள கூப்புட்டு படிக்க சொல்லுறாங்க. வந்ததும் சொல்லுறேன். நீ போ அண்ணே மத்த வேலையப் பாரு.”

“என்ன அத்தை ஒரு மாதிரி சோகமா இருக்க?” எனக் கேட்டபடி  கட்டில் மீது உட்கார்ந்தாள் வசந்தா. 

“நேத்து ஒரு ஐயா வந்தாருல்ல. அவர் பையனுக்கு உன்னைக் கேட்டு வந்தாரு. உங்க அப்பாரு சரினு சொல்லிட்டாரு.  மாப்பிள்ளை ஜெயில் ஆயுள்தண்டனை  கைதியாம்.  ஒரே பையன் போல. அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பம்  போல. அதான் உன்னை பெண் கேட்டு போறாங்க.  உங்க அப்பா சரி கல்யாணம் பண்ணித் தாரேன்னு சொல்லிட்டார்.”

“ஏத்தை  கட்டிக்க எனக்கு விருப்பம் இருக்கா இல்லையானு கேக்க மாட்டாங்களா?”

“எந்த பொண்ணுகிட்டேயும் பெத்தவங்க கேக்க மாட்டாங்க ஆத்தா. பெத்தவுக மானம், மரியாதை, மயிரு, மட்டை எல்லாம் இந்த பெண்பிள்ளை மீதுதான்  வைப்பாங்க. அவளுக்கு என்ன பிடிக்கும் என இவர்களே முடிவு பண்ணிடுவாங்க. அப்படிதான் நடக்கணும் கல்யாணம் வரை அப்பா அம்மா பேச்சு கேக்கணும், அப்பறம் புருசன் பேச்சு கேக்கணும். சாவி குடுத்த பொம்மை. இதுதான் பெண் விதி .நீ என்ன சொன்னாலும் மாறாது. உன் அப்பா சொன்னதுதான் நடக்கும். நல்லதோ கெட்டதோ அதான் வாழ்க்கை.”

“கல்யாணத்துக்கு அப்புறம் ஜெயிலுக்கு  போயிடுவாரா?” 

“ஆமா”  

“அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணனும்?  திரும்ப எப்போ வருவார் எனத் தெரியாத  வாழ்க்கை..”

“என் வாழ்க்கையப் பாரு. திரும்ப வர மாட்டார்னு வாழுறேன். நீ திரும்ப எப்போ வருவார்னு தெரியாம வாழப் போற. பெண்கள் வாழ்க்கையே ஏன் வாழுறோம்னு தெரியாமலே வாழுவதுதான் போல” என கண்ணீர் கரைய வார்த்தை விட்டாள் நாகம்மை. 

முனியாண்டி வசந்தாவிடம் கேட்டான்.

“ஏத்தா.. உன்னய கேக்காம திருமணத்துக்கு சம்மதம் சொன்னது வருத்தமா?” 

“ஐயா..  உனக்கு அவரு சாமினா… எனக்கு நீ சாமி. உன் சாமி காப்பாத்தும்னு நீ நினைக்கிற. நான் என் சாமி காப்பாத்தும்னு நினைக்கிறேன். எனக்காக வாழும் ஆளு நீ. என் நல்லது என்னனு உனக்குத் தெரியும்.”

“ஏத்தா.. உங்க அப்பனும் கொலை கேஸ்ல  ஜெயில் போய் வெளியே வந்து செண்பகத்தை கல்யாணம் பண்ணி வாழலயா.. ஒரு ஆம்பள மனசு களிமண் மாதிரிதான். பொம்பளை கை பட்டுதான்  அது எதுவா இருக்கணும்னு முடிவு பண்ணுவான்”   

“ஏப்பா நீ சொன்ன எந்த வீட்டுக்கும் மருமகளா போறேன். சரியா?”

திருமண நாள் நெருங்கியது.  பரோல்  கிடைப்பது  கடினம் போல எனத் தகவல்.

மூக்கையாவிடம் கோவமா கேட்டான் முனியாண்டி, “என்ன நடக்குது? ஊரே கூப்புட்டு  சொல்லிட்டேன் இப்போ இப்படி சொல்லுற” என கோவமாக.

“சிறையில் பரோல் கிடைக்க ஒரு நாள் ஆகும் முனியாண்டி. பொறுமையா இரு” என்றார் வக்கீல்.

“சரி விடுங்க. சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க” என ஏதோ சொல்லிக் கொண்டு நகர்ந்த முனியாண்டியிடம், “இருடா” என மூக்கையா கையைப் பிடித்து  மகன் வெள்ளைச்சாமி சிறை போன விடயத்தைச் சொன்னான்.

“இங்க தான் நம்ம ஊர்ல புத்தி சரியில்லாத ஒரு புள்ள சுத்தி வரும். அந்தப் புள்ளைய ஒரு மனுசநாய் கடிச்சு நாசம் பண்ணிட்டான். அந்தப் புள்ளைக்கு தனக்கு என்ன கொடுமை நடந்துச்சுனே தெரியாமல் இருந்துச்சு. தொடர்ந்து இதுபோல கொடுமையில் இருப்பது தெரிஞ்சு என் மகன் அந்த புள்ளைய கேட்டா என்ன சொல்ல தெரியும்? எப்படியோ கண்டுபிடிச்சு அவனை விசாரிச்சு  அடிச்சான். எதிர்பாராமல் அடிபட்டு இறந்து போயிட்டான்.  அதை என் விரோதிகள் என்னை பழி வாங்குவதா என் மகனை ஜெயில்ல போட்டாங்க. நானும் எவ்வளவு  முயற்சி பண்ணுனேன் உண்மைய கொண்டுவர. பணம், அதிகாரம் என்னைப் பழி வாங்கிருச்சு. சரி காலம் கடந்து போச்சு. சில நாள்ல மகன் வந்துருவான். பத்து வருசத்துக்கு மேல ஜெயில்ல தான் இருக்கான். ஏதும் தலைவர் பிறந்தநாள் அன்னைக்கு விடுதலை செய்வாங்க என்ற நம்பிக்கையில்தான் இருக்கேன்” எனக் கண் கலங்கிச் சொன்னான் மூக்கையா.

திருமணப் பந்தல்.

பெண், மாப்பிள்ளை இருவரும் அமைதியாக அருகில் அமர்ந்து இருந்தனர்.  உறவினர் வரும்போது ஆசீர்வாதம் பெற்று  அவர்கள் தரும் பணம் வாங்கிக் கொண்டனர்.

நாகம்மை வசந்தா காதில் சொன்னாள்.

“ஏத்தா.. தம்பி அழகுதான் உனக்கு ஏத்த மனுசன். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருசம் சேர்ந்து வாழணும் ஆத்தா. அதான் என் ஆசை.  சரி தம்பிட்ட பேசுனியா?”

“ம்”

“சரி மத்த ஆளுக வாராக. நான் இங்க வரக்கூடாது. சாப்பாடு போடும் இடத்தில் இருக்கேன்”

வெள்ளைச்சாமி கேட்டான் வசந்தாவிடம், “என்னை பத்தி தெரிந்து தான் கல்யாணம் செய்ய  ஒத்துக்கிட்ட.  கடைசிவரை நீ நினைச்ச மாதிரி இருக்க முடியுமா எனத் தெரியலை.  உன்ன நல்லா பாத்துக்க முடியுமா என சொல்லத் தெரியலை. எந்த நம்பிக்கை வார்த்தையும் சொல்ல முடியாது. கட்டாயத்தில் நடக்கும் திருமணம்  கடைசி வரை வருமா தெரியலை.15 நாள்தான் இருக்க முடியும். இதுல என்ன புரிதல் ஏற்பட்டு வாழ முடியும் தெரியலை” என்று சொன்னான்.

வசந்தாவின் பார்வையில் அவனின் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்தது.

“பாட்டாளத்தில்  வேலை செய்யும் ஆம்பள பொண்டாட்டிய வீட்டில் விட்டுதானே போறான்? சீமையில் வேலை செய்ய போறவன் என்ன செய்வான்? என் புருசன் அது போல எங்கோ  கண்காணாத தேசத்தில் இருக்கான்னு நினைச்சுகிறேன். உன்ன விட நல்ல ஆம்பளயா எனக்கு கிடைக்க போறான்?  மனநிலை சரியில்லாத பெண்ணிடம் அன்ப காட்டாம அசிங்கம் பண்ண நாயதானே கொன்ன? இதில் என்ன வருத்தம்? ஆணோட வீரம்ங்குறது பெண்கள பாதுகாக்கும் வேலிதான். பெண்ணை சிதைக்கு ஆயுதம் இல்லை” எனச் சொன்னபடி அவன் கை பிடித்தாள் வசந்தா. 

சிறைக் கம்பி பிடித்துத் தெரிந்த கையால் முதல் முறை ஒரு பெண் கையைப் பிடித்தான். மழைக் காலத்தில் மண்ணில் இருந்து வரும் ஈசல் போல அவன் மனதில் ஒரு புது உணர்வு வெளிப்பட்டது.   

மகிழ்ச்சி தொடங்கிய நாளும் பொழுதும் கடந்தது  சிறை செல்லும் நாள் நெருங்கியது. வசந்தாவிடம் சொல்ல நினைத்த  வார்த்தைகளைக் கடிதமாக எழுத நினைத்தான். 

அன்பின் அரவணைப்பு அம்மாவிடம் கண்டிராத நான், முதல் முறை உன்னிடம் கண்டேன். தனிமையில் இதுவரை தவித்த நான் உன் நினைவுகளை இனி அசைபோடுவேன். உன் கை சீண்டல்  ஆயிரம் கதை பேசும். பெண் நினைவுக்கும்  இவ்வளவு போதை உண்டு என உணர்ந்தேன். சிறை சென்று மீண்டு வர ஆசை உன் நிழல் வாழ. இந்த௧் குறள் சொல்லும் என் வலி.

மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான் 
உற்றநாள் உள்ள உளேன்.
-1206

எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல்.
– 1202

கடிதம் எழுதியபடி குறிப்பு எழுதி இருந்தான். எனக்கு எழுதும் கடிதம்  சிறையில் அதிகாரிகள் படிக்க வாய்ப்பு உண்டு.  நீ சொல்ல நினைக்கும் வார்த்தைகளைத் திருக்குறள் கொண்டு நிரப்பு. கடிதம் படித்து முடித்தாள் வசந்தா.  ரேடியோவில் செய்தி.. ‘விரைவில் பல ஆண்டுகாலம் சிறையில் இருக்கும்  ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்’

வசந்தா எழுதிய கடிதம் வெள்ளைச்சாமி கையில்.

விடாஅது சென்றாரைக் எண்ணினால் காணப்
படாஅதி வாழி தி.
– 1210 

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
– 1211

பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனில்.
-1190

கடிதம் படித்தபடி விடுதலை எதிர்பார்த்தபடி இருந்தான் வெள்ளைச்சாமி.

  • கதையாசிரியர் பிரபாகரன் மாரிமுத்து

1 Comment

  1. அருமையான கதை தம்பி. நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள் 💐💐💐

Comments are closed.