இந்திர விழா

பரிதியவன் தன் பணியை செவ்வனே முடித்துக்கொண்டு தன் இருப்பிடமான கீழ் வானத்தில் சென்று பதுங்கிவிட்ட இனிய மாலைப் பொழுது. இன்னும் சில நாழிகையில் மாலை கவிழ்ந்து இரவு நேரத்து மங்குல் சூழ்ந்துவிடும், சில்லென்று வீசிய இளந்தென்றலில் பளிச்சென்று வெண்மை நிறத்தில் பூத்துக் குலுங்கிய இருள்நாறி மலர்களின் சுகந்த நாற்றம் நாசியை மிதமாக வருடிச் சென்றது. அப்பூக்களின் மணமானது பல ஞிமிறுகளை தன்பால் ஈர்க்க, அவை அந்த மாலை நேர மங்குலில் அம்மலர்களின் மணத்தையே வழிகாட்டியாகக் கொண்டு அவை பொழியும் மதுவினை உண்ண திரள் திரளாக அந்த மலர்ச்சோலையில் ரீங்காரமிட்டபடி மொய்த்துக்கொண்டிருந்தன. அச்சோலையின் ஒரு மருங்கில் அமைந்திருந்த சிறு குளத்தில் செந்நிற ஆம்பல் மலர்கள் மலர்ந்து சிரித்த வண்ணமிருந்தன. குளத்தின் அருகாமையில் அவ்வாம்பல் மலர்களில் ஒரு மலரைக் கையில் ஏந்திய வண்ணம் ஒரு பூங்கொடியிடையாள் அமர்ந்து அந்த இனிமையான தென்றலையும் மாலை நேரத்து சுகந்தத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவள் வதனத்தில் மகிழ்ச்சியும் கவலையும் ஒருங்கே காட்சியளித்தமை காண்போருக்கு சற்று வியப்பாக இருக்கிறது.

தன் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளின் இனிமையான தருணங்களை எண்ணி ஒரு கணம் மகிழ்ந்த அந்நங்கையவள் முகத்தில் மறுகணமே சொல்லவொன்னா துயரத்தின் சாயல் வந்து அப்பிக்கொண்டது.

சோலையெங்கிலும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க
மது உண்ண ஞிமிறுகள் வந்து முற்றுகையிட
பேதையிவள் அன்றலர்ந்த மலராய் மணம் பரப்பி
மன்னவனின் மாயக்கரம் தொட்டுப் பறிக்கக் காத்திருந்து
காலம் போனதோ டி…..
என்னவன் வருகை நோக்கி
விழி இரண்டும் பூத்துப்போனதோ டி…..
கட்டழகு மேனியும் வாடி வதங்கியும் போனதோ டி…..
பசலை கொண்டு கொடி இடையும் மெலிந்தே போனதோ டி…..
தீராக் காதல் பிணிக்கு அருமருந்தாய் மன்னனவன் வந்து சேரும் நாளும் வருமோ டி…..

என்று அப்பேதைப் பெண் இசைத்த சோக கானம் காற்றில் கலந்து கேட்போர் நெஞ்சை உருக்கியது. தன்னவனின் பிரிவை ஆற்றாது தவிக்கிறாள் போலும் இவ்விள நங்கை. ஆதலால் தான் இங்கு தனிமையில் அமர்ந்து தன் தலைவனோடு கூடியிருந்த நாட்களை எண்ணிப்பார்த்துக்கொண்டு மகிழ்ந்தும் கவலையுற்றும் காணப்படுகிறாள் போலும்.

மன்னவனின் நினைவுகளில் மூழ்கியிருந்தவளின் சிந்தையை,

“தேவி தாம் இங்குதான் இருக்கிறீர்களா, நான் வெகுநேரமாக எங்கெல்லாமோ தம்மைத் தேடி அலைந்தேன். தம்மிடம் ஒரு முக்கிய விடயத்தை உரைக்கவே ஓடோடி வந்தேன்” என்ற தோழிப்பெண் பொன்னியின் குரல் கலைத்தது.

“அப்படி என்ன முக்கிய விடயம் பொன்னி? விரைந்து சொல்வாயாக, என் மனமானது ஒருநிலையில் இல்லை. நீ பகர்வதை இப்பொழுது செவிமடுத்தால்தான் உண்டு. நாழி கடந்தால் என் மனம் என்னவனின் நினைவுகளில் மூழ்கி மீண்டும் மாயமாகிவிடும்”.

பொன்னி “அதுசரி தேவி, சில தினங்களாகவே தாம் சரியில்லை. தம் மணாளரின் பிரிவாற்றாது பசலை கொண்டுள்ளீர்கள் என்பது விளங்குகிறது. தாங்கள் எப்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பப்போகிறீர்களோ தெரியவில்லை. பேசாமல் தங்களின் மனோரஞ்சனி என்னும் திருப்பெயரை மாற்றி காதல் பிச்சி என்று வைத்துவிடலாமா என்று இருக்கிறேன்”

கலகலவென்று நகைத்த மனோரஞ்சனி “உனது கூற்று நூறு சதம் உண்மை பொன்னி. உண்மையில் யான் பிச்சிதான் ஆகிவிட்டேன். அது போகட்டும் நீ ஏதோ முக்கிய விடயம் உரைக்க வேண்டுமென்றாயே,  அதை மொழிவாயாக”.

“தேவி,  இன்னும் இரு தினங்களில் இளவேனிற் காலம் துவங்க   உள்ளதல்லவா”?

“அட ஆம் பொன்னி,  இதை யான் எங்ஙனம் மறந்து போனேன்?  மேலே சொல்”.

“வரும் மாசி திங்களின் சித்திரைத் திருநாளில் இந்திர விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுக்கும் வைபவம் நடைபெற உள்ளதாக முரசு கொட்டி அறிவித்திருக்கிறார்கள். வழமைபோல் நம் மாமன்னரே கொடிநாட்டி விழாவினை தொடங்கி வைக்கப்போகிறார்.  தமக்கு உகந்த செய்திதானே தேவி இது?  ஆதலாலே இதனை உரைக்க தம்மைத் தேடி ஓடி வந்தேன்”.

“என் செவிகளும் மனமும் குளிர்ந்துவிட்டது பொன்னி. என் வேதனை கண்டு பொறுக்காது இளவேனிலும் விரைந்து வந்துவிட்டது போலும். எம் மனதை ஆற்றுப்படுத்தும் பொருட்டு இப்பெரும் விழாவினை இறைவனே ஆயத்தம் செய்திருக்கிறான் போலும். என்னைப் போன்றே இன்னும் எத்தனை மங்கைகள் தங்கள் காதல் கணவன்களையும் மனம் கவர்ந்த மன்னவர்களையும் பிரிந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வாடி மெலிந்து நலிந்து போயிருப்பர்?   அவர்களுக்கெல்லாம் இவ்விழா புத்துயிர் அளிக்குமல்லவா?”

“உண்மைதான் தேவி. என் செய்வது? ஆடவர்கள் பணி நிமித்தமாக தங்கள் காதலுக்குரிய கிழத்திகளைப் பிரிந்து வெகு தொலைவு செல்ல நேரிடுகிறது. தங்களின் தலைவரான ஆதன் வளவர் கருமமே கண்ணெனப் போர்த்தொழில் பயில தென் திசை நோக்கித் தம் படையுடன் சென்றிருக்கிறார். வெற்றி வாகை சூடி வேங்கையென திரும்புவார் தேவி, நாம் விழாவிற்குத் தேவையான ஆயத்தங்களை துவங்குவோம். விழாவின் இறுதி தினமான இருபத்தெட்டாம் நாள் தம்மவருடன் தாம் ஆனந்தமாய் புனலாடிக் களிக்கத்தான் போகிறீர்கள் பாருங்கள்”

“நின் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் பொன்னி. விடிந்ததும் விழாவிற்கான பணிகளை துவங்குவோம். தற்போது உறங்கச் செல்வோம் வா”.

இருவரும் உறங்கச் சென்ற வேளை தென் திசை போர்க்களத்தில்,  எண்ணற்ற கூடாரங்களடித்துச் சோழப் படைவீரர்கள் தண்டூன்றியிருந்தனர்.

இரவின் குளிருக்கு இதமாக தீமூட்டி, அதனைச் சுற்றி வட்டமாக அமர்ந்த வண்ணம் பல வீரர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். ஏனைய கூடாரங்களின் அருகில் பலர் ஒன்று கூடி இருக்க, ஒரு கூடாரத்தின் வெளியில் மட்டும் நெருப்பின் அருகில்  ஒரே ஒரு வீரன் தனித்து அமர்ந்திருந்தான். தீப்பிழம்பு பொழிந்த மஞ்சள் வண்ண ஒளியில் அம்மாவீரனின் முகமானது எத்தனை பொலிவாக ஒளிபொருந்தியதாகப் பிரகாசிக்கிறது? அந்த முகத்தில்தான் எத்தனை கம்பீரம்?  கூடவே ஒரு ஓரத்தில் ஏதோ ஏக்கம் போலத் தெரிகிறதே? நெற்றியில் படிந்திருக்கும் வரிகளை பார்க்கையில் ஏதோ நினைவுகளில் மூழ்கி சிந்தனைவயப்பட்டவன் போலத் தெரிகிறதே….

“வளவா….வளவா யான் அழைப்பது கூட கேளாமல் அப்படி என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? ஏன் தனிமையில் அமர்ந்திருக்கிறாய்?”…..தோழனின் குரல் கேட்டு சிந்தனை கலைந்தவன்,

“யாரைப் பற்றிய சிந்தனை என் மனதை நிறைக்கும் என்று நீ அறிய மாட்டாயா செழியா?” என்றான் கவலையோடு.

“அறிவேன் அறிவேன், எல்லாம் என் தங்கை ரஞ்சனியின் நினைவுதானே?”

வளவனின் முகத்தில் ஆமோதிப்பாய் ஒரு புன்முறுவல் விரிந்தது.

“விடிந்ததும் போர் துவங்கிவிடும். என்னவளை மீண்டும் சந்திப்பேனா என்பது நிச்சயம் இல்லை. அவளின் நினைவுகள் என்னை உறங்கவிடாது இம்சிக்கின்றன செழியா”.

“இதற்குத்தான் யான் புறப்படும்போதே கூறினேன். அரசரும் கூட வேண்டாம் என்று தடுத்தார். புதிதாக மணமானவன் நீ.   மணமான மறுநாளே மனையாளை பிரிந்து போர்க்களம் புக வேண்டாமென்றார். படையை வழி நடத்தத்தான் யானிருக்கிறேனே என்று கூறினேன். நீயோ என் தாய் மண்ணைக் காக்கும் கடமையே எனக்கு முக்கியம் மற்றவையெல்லாம் பிறகுதான் என்று முடிவெடுத்து புறப்பட்டு வந்துவிட்டாய்.  இன்னும் இரு தினங்களில் இளவேனிற் காலம் தொடங்கிவிடும். வரும் மாசி திங்களில் ஆண்டு தோறும் நம் கோநகரான புகார் நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்திர விழா தொடங்கிவிடும். தம்மிருவருக்கும் மணமான பின் வரும் முதல் இந்திர விழா இது, ஆனால் விதி வலியது. காதல் பறவைகள் இரண்டும் பிரிந்து வாடுகின்றன. போரில் நாம் வெற்றி வாகை சூடி விழாவின் இறுதி நாளன்று உன்னவளுடன் ஆனந்தமாய் களித்திருக்கத்தான் போகிறாய் பார் வளவா”.

இதனைக்கேட்ட வளவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

இருவரும் சிறிது நேரத்தில் உறங்கிப்போனார்கள். விடிந்தால் போர்க்களத்தில் பகைநாட்டு வீரர்களை எதிர்கொள்ள வேண்டுமல்லவா…….

ஆதவன் அவனும் அன்று சற்று கவலை தோய்ந்த முகத்தோடு தான் வெளி வந்தான் போலும்… எத்தனை உயிர்கள் போக இருக்கிறதோ என்ற கவலை அவனுக்குள் இருக்க தான் செய்தது.

ஆதவன் உதிக்கும் முன்னரே நம் வீரர்கள் தயாராகினர்.. கைகளில் வாள்களும்,  கேடயமும், முகக்கவசங்களும், போர் உடைகளும் அவர்களிடம் புத்துயிர் பெற்றன.

‘களிறெறிந்து பெயர்தல் காளைக்கு கடனே’ என்று சும்மாவா சொன்னார்கள்?

அப்பப்பா. அலை கடலையே மிஞ்சி விடும் அளவிற்கு அல்லவா எமது சோழப்படை நிற்கிறது..’

சற்று நாட்கள் முன் வரை வெறிச்சோடி கிடந்த இடமா இது?

கார்மேகம் போல திரண்டெழும் பரிசை படையும்,   கரும் மலையென விளங்கும் யானை படையும், கடலென பொரும் காலாட் படையும் இருபுறமும் அணிவகுத்து நிற்க,  இடியென முழங்கியது முரசு…

இத்தனை நாள் காத்து கிடந்த வாள்களும்  வேல்களும் குருதியால் தம் பசி தீர்க்க முனைந்தன…

கடல் நடுவே நீர்க் கிழித்துச் செல்லும் கலம்போல, பகைவர் படை நடுவே களிறுகள் ஊடறுத்துப் பிளந்து சென்றன. வீரர்கள் அவ்வூடுவழியே வேலேந்தி பகைவரை தாக்கினர்.

இருப்புப்பூண் பூட்டிய மருப்பினையுடைய யானைகள் மேகமாகவும்,  மறவர்கள் ஓங்கிய வாள் மின்னலாகவும், முரசுகள் இடிமுழக்கமாகவும்,  விரைந்து செல்லும் குதிரைகள் காற்றாகவும், வில்லிலிருந்து பாய்ந்து வரும் கணைகள் மழைத்துளிகளாகவும் பொழிந்தன, அந்த போர்க்களத்திலே.

சிறந்த வாள் வலிமையை பெற்றவனாகிய வளவன் விடுத்த அம்புகளோ, அச்சத்தால் மலையிடத்தே காற்றைக் கிழித்து வேகமாக செல்லும் பறவையினம் போன்று களிறுகளின் கைகளை துளைத்தன.  துளைத்த கைகளோடு வாயினையும் வெட்டி வீழ்த்தினான். எதிரிநாட்டு சேனாதிபதியை நோக்கி முன்னேறினான்.

நாட்கள் கடந்தன.

சோழ வீரர்களோ பகைவர்களை கொன்று குவித்தனர்… வீல் என்ற அலறல் சத்தமும், வாட்களின் ‘டங் டங்’ என்ற ஒலியும் களிறுகளின் பிளிறலும் வானையே அதிர செய்யும் அளவிற்கு இருந்தது.

களிறுகள் எல்லாம் குன்று போல அம்புபட்டு இறந்து கிடந்தன… தேர்கள் எல்லாம் குதிரைகள் இறக்க சிதைந்து மண்ணிலே கிடந்தன. குதிரைகளோ வாளால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்தன.  குருதி புனலாய் பொழிந்தாலும் பெண் பிள்ளையை கூட முடி அறுத்து ஆணாய் வேடமிட்டு போருக்கு அனுப்ப, இன்னும் குருதி கேட்டது வாள்களும் வேல்களும்.

வளவனின் அம்பானது எதிரி சேனாதிபதியின் குதிரையை வீழ்த்தி தேரினை கவிழ்த்தது.  பின்னிருந்து படைகளை எல்லாம் துவம்சம் செய்து வந்தவன் தனது அம்பு மழையை பொழிய அது சோராமல், இரக்கம் பாராமல் சேனாதிபதியையும் தாக்க,  மார்பு கவசம் அவனுக்கு பாதுகாப்பாக அமைய,  தன் கேடயத்தை கொண்டு தாடையை தகர்த்தான் வளவன்.

சிங்கத்தின் முன்னே சிக்கிய ஓநாயாக சேனாதிபதி மாட்டிக்கொள்ள வாள்கள் கதை பேசின. வளவனின் வாள் எதிரியின் கழுத்தில் மாலையாய் இறங்க, செங்குருதி பெருக்கெடுத்து ஓட தரையிலே வீழ்ந்தான்.

இதோ பதினைந்து நாட்கள் முடிந்துவிட்டது… வெற்றி வாகை அதை சூடி பகைவர்களின் முரசினை கவர்ந்து மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினர்.

மழைநீர் மட்டும் பார்த்த நிலம் குருதி ஆற்றினை பார்த்தது. நிலமெங்கும் இரத்தமாய் ஓட இத்தனை நாள் கேட்ட வாட்களின் ஒலி மறைந்து வல்லூறுகளின் ஒலி கேட்டது.

வளவன் மனம் வெற்றியை ரசித்தாலும் தன்னவளைக் காண ஏங்கியது.

இதே சமயத்தில் அங்கே…

விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலே தலைவனின் பிரிவுத் துயர் தலைவியை வாட்ட,  தங்களின் காதலின் அழகிய பொழுதுகளை நெஞ்சமதில் கொண்டு வருகிறாள்…

வனமதில் கானமிசைத்துக் கொண்டிருந்த அரிவையின் இன்னிசையில் மயங்கி வந்த வழி மறந்து,  போகும் வழி தொலைத்து வந்தவனின் வீரம் பொருந்திய தேகமும்,  ஒளியான கண்களும் கவர கன்னியவளும் மெய் மறந்தாள்..

தன்னிலை மறந்து பார்த்த மாத்திரத்தில் காதல் எனும் கொடிய நோய் அவர்களை இறுக்கமாக பற்றிக் கொண்டது… வளவனின் மனோரஞ்சனியாய் மனம் முழுவதும் அவள் நிறைந்தாள்…

“நீர் ஒன்றும் எம்மிடம் உரைக்க வேண்டாம்… யான் பெரும்பிழை புரிந்தோம் நும்மை கலவு செய்து”….

” தேவியாருக்கு ஏனிந்த சினமோ இன்று”?

“நும் மார்பு பலர் கண்ணால் நுகர்ந்த மார்பு.. ஆகையால் நீர் பரந்தன்… யான் உன்னை அணுக மாட்டோம் “

“கன்னியர்கள் என்னை கண்டு வியந்தால் யான் என்ன செய்ய இயலும்… யான் யாரையும் நோக்கவில்லையே பெண்ணே” கூறிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு தும்மல் வர,

“எவரோ நும்மை நினைக்கின்றனர்.. தும்மல் வருகிறதே… யார் அவரோ?”

மீண்டும் அவனுக்கு தும்மல் வர, அதை அவன் அடக்குகிறான்..

“தம்மை நினைப்பது யார் என எனக்கு தெரியக்கூடாது என மறைக்கின்றீர்”..

அந்தோ! வளவனின் நிலையோ பாவம்…
ஆனால் அவர்களின் ஊடலும் கூடலை இன்னும் அதிகம் தான் படுத்தியதே தவிர குறைக்கவில்லை.

காலங்கள் கடக்க, அனைவரின் விருப்பத்தோடும் வளவன் முழுமையாக அவளை தன்னவளாக்கிக் கொண்டான்.

காதல் நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது; நீரினும் ஆரளவில்லது அல்லவா..

ரஞ்சனி, இம்மை மாறி மறுமை  யாயினும்
நீயா கியரென் கணவனை
யானாகியர் நின்   
நெஞ்சுநேர்பவளே”

மறுபிறப்பிலும் நீயே என் கணவனாய் வர வேண்டும்) என தன்னவனிடம் வேண்டுகிறாள்.

இவர்களின் காதல் இப்படியே போய் கொண்டிருக்கும் வேளையிலே தான் வளவன் தன்னவளை பிரிந்து போருக்குச் செல்கிறான்.

தலைவனையே மனதில் நினைத்துக் கொண்டிருந்தவள் மனதாலேயே தூது விடுத்தாள்…

சாதல் அஞ்சேன் அஞ்சுவென் சாதல்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவென் கொல்லென் காதலன் எனவே”

(வேறு பிறப்பில் பிரிந்து விடுவோமோ என்றே சாகுவதற்கும் நான் அஞ்சுகிறேன்)

உயிரில் கலந்த உறவாய் அமைந்ததால் அவளின் தூதும் அவனை அடைந்தது. போரிடும் வேளையிலும் தன்னவளின் வதனமே சித்திரமாய் அவன் நயன விழிகளில் பதிந்திருந்தது.

விழாவும் தொடங்கி விட்டது. எங்கே அவன் என கயல்விழிகள் தேடின…

காலங்களும் கடக்கிறதே தவிர,  காளைமகனோ வரவில்லை. பிரிவுத் துயர் தலைவியை வாட்ட புலம்புகிறாள் பொன்னியிடம்…

“மாலையின் வரவால், தாய் வந்தன என்று கருதி மன்றத்திற்கு சென்ற கன்றுகள்,  அவ்வெற்றிடங்கண்டு வருந்தின தோழி.. தாயாரின் வரவை தன் தலை தூக்கி பார்த்து வருத்தமுறும்… அவ்வாறே அவர் வரும்வழி நோக்கி வாயிலிடத்தே நின்று வருந்துபவள் யான்… “

பொன்னியோ, ” தாங்கள் இவ்வாறு வருந்தலாகுமோ?  வளவர் வேறு எங்கோ செல்லவில்லையே. நாட்டிற்காக போரிட அல்லவா சென்றுள்ளார்.. பெருமைபட வேண்டிய காரியம் அன்றோ?”

“உண்மை தான் பொன்னி.. ஆயினும் என்னவரின் பரந்த மார்பின்றி  என் தேகமோ, நெஞ்சமோ துயில் கொள்ளுதில்லையே… “

“இதோ பார் பொன்னி. என் சங்கு வளையல்கள் எல்லாம் நெகிழா நிற்கின்றன. அவரின் பிரிவால் நான் மெலிவுற்றேன். அவரை கணநொடியும் என்னால் பிரிய இயலாது”.

காதலின் வேதனை வார்த்தையாய் தோழியிடம் பொழிந்தது.

“வளவர் போரில் வெற்றி பெற வேண்டும் தானே ரஞ்சனி. வாருங்கள் நாம் சென்று கொற்றவை தேவியை வணங்குவோம், தம்மவர் விரைவில் வெற்றி பெற்று தம்மிடம் வந்து சேர வேண்டுவோம்” என அழைத்துச் செல்கிறாள்.

இங்கோ வளவனின் நிலையோ பெரும்பாடு. காலையில் வீரத்தோடு போர் புரிந்தாலும் இரவில் தன்னவளின் மடியைத் தான் தேடியது. தூக்கம் தொலைத்தவன் இரவில் தன் அன்பு எல்லாம் நிலா வழியாக தூது விட்டும், குதிரை,  யானைகளை தட்டிக் கொடுத்தும் மனபாரம் சற்று இறக்குகிறான்.

உறங்க முற்பட்டு இமைகளை மூடுகிறான், ஆனால் உறக்கமும் வருமோ? தன்னவளை பிரிந்து வந்த கணம் மனக்கண்ணில் தோன்றுகிறது.

படைகள் புறப்பட்ட அன்றைய தினம்,

“போய் வருகிறேன் என் கண்ணே” என்றான் வளவன்.

அவளால் பதில் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களில் நீர் பெருகிற்று.

“கண்ணே! வருந்தாதே” என்றான். கட்டியணைத்துக் கண்ணீரைத் துடைத்தான். கூந்தலைக் கோதினான்.

“விரைவில் வருவேன், விடைகொடு” என்றான்.

“போய் வாருங்கள்”என்றாள். நா தழு தழுத்தது. நெஞ்சு விம்மிற்று.

தன்னவளின் பிறைநுதலில் அரும்பிதழ் பதித்தவன் விடை பெற்று படை நடத்திச் செல்கிறான்.

தலைவனின் உருவம் விழிகளிலிருந்து மறையும் வரை அவ்விடமே இமைகொட்டாது கண்ணுற்று நிற்கிறாள் ரஞ்சனி.

சிறு தொலைவு சென்று சிரம் திருப்பித் தன்னவளைக் காண்கிறான். கலங்கிய பூவையின் முகம் விழிகளில் நிரப்பிக்கொள்கிறான். கரங்களை அசைத்தவன் மீண்டும் திரும்பிப்பாராது சென்றுவிட்டான்.

இதோ தன்னவளைப் பிரிந்து வந்து மூவேழு தினங்கள் கழிந்துவிட்டன. போரிலும் வெற்றிவாகை சூடியாயிற்று. படைகள் தாயகம் திரும்பும் வேளையும் நெருங்கியது.

“இன்னும் ஏழு தினங்கள், வந்துவிடுவேன் என் கண்ணே,  நின் பூமுகம் காண விரைந்து வருகிறேன்” தன் நெஞ்சிலிருக்கும் தன்னவளிடம் மொழிந்தவன் உறங்கியும் போனான் அவளது நினைவுகளோடு.

அங்கு விழா தொடங்கிய தினம் முதல் தன்னவனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள் காரிகையவள்.

விழாவிற்கான கால் கோலி கொடி நாட்டிய அன்றைய தினம்,  தன்னவன் வெற்றி வீரனாக தாய்நாடு திரும்புதல் வேண்டி கொற்றவையவளுக்கு நோன்பு நோற்றாள் பெண்ணவள்.

மறுநாள் விழாவிற்கான ஆயத்தங்கள் கோலாகலமாகத் துவங்கப்பட்டன.

Indian traditional mala garland mango leaves and orange flowers. Isolated on white vector cartoon illustration

விழாவிற்கான ஏற்பாடுகளாக, “காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள்,  அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று மன்னன் செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்.

மன்னனின் ஆணைக்கிணங்க அத்தனை ஆயத்தங்களும் துரிதமாய் நடந்தேறுகின்றன.

இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் அமையப்பெற்றிருந்த காமன் கோட்டமாகிய மன்மதன் கோயில் சர்வ அலங்காரங்களுடன் திகழ்ந்தது. அச்சோலையிலேயே விழாவிற்கு வருகை தரும் காதலர்கள் கூடியிருப்பதற்காக “மூதூர்ப் பொழில்” என்னும் தங்குமிடம் “இளவந்திகை” என்னும் சிறப்புப் பெயரால் அமைக்கப்பட்டிருந்தது.

காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது. அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, அவற்றின் ரம்மியமான காட்சிகளிலும் மனோகரமான மணத்தினாலும் அங்கு கூடியிருக்கும் காதல் கிளிகள் மேலும் காதல் போதைக்கு ஆட்பட்டு இன்பத்தில் திளைத்தனர்.

விழா தொடங்கிய தினம் முதல் ஒவ்வொரு மாலைப் பொழுதிலும் பல்வேறு நாட்டியங்கள், நாடகங்கள் நடைபெற்ற வண்ணமிருந்தன. அவற்றுள் மிகப் பிரசித்தி பெற்றவையாக சோழ மன்னர்களின் பழம்பெரும் வீரக்கதைகளும், இந்திர விழா தொடங்கப்பட்ட வரலாறும் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

விழாவின் மூன்றாம் நாள் அன்று விழா தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாடகமாக அரங்கேறவிருந்தது.

தலைவனின் பிரிவாற்றாது வாடிய தன் தோழியை ஆற்றுப்படுத்தும் பொருட்டு நாடகம் நிகழுமிடம் அழைத்துச் சென்றாள் பொன்னி.

காட்சிகளுக்கேற்ப கூத்தாடிகள் மிகச் சிறப்பாக ஒப்பனை செய்து கூடியிருந்த மக்கள் முன்பு தோன்றினர். நாடகம் இனிதே தொடங்கியது.

நாடகத்தின் முதல் காட்சியாக, தமிழ் முனிவர் அகத்தியர் காவிரிபூம்பட்டினத்தை வளமுடைய நகராக மாற்ற எண்ணுகிறார். இந்திரனின் மனம் குளிரும் விதமாக இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்குமாறு, சோழ நாட்டு அரசனாகிய  தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்படி விழவு எடுத்தால் இந்திரன்,  இந்த நகருக்கு வேண்டிய மழையைத் தருவான் என்கிறார்.

பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்ற தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன், தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேவனாகவும் கருதப்படுவதால் இந்திர விழாவினை காதல் பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததையும், புகார் நகரில் விழாவின் கொண்டாட்டங்கள் தொடங்கிய வரலாற்றையும் விளக்கும் வண்ணமாய் அமையப்பெற்ற,

ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக”

என்ற பாடல் காட்சியும்,

மன்னனும் மக்களும் தம் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வணங்குவதாக,

இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்”

என்ற பாடல் காட்சியும் அமையப்பெற்றன.

அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டு அவர்தம் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உரைத்து மறைகிறான்.

இந்திரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,  ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்படும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றுகிறான் தொடித்தோட் செம்பியன். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில், வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவானது காதல் திங்கள் விழாவாக காம தேவனுக்கு உகந்த இளவேனிற் காலத்தின் மாசி திங்கள் சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில் கால்கொண்டு கொடிநாட்டி தொடங்கப்பட்டு பங்குனி திங்கள் சித்திரை விண்மீன் கூடிய தினத்தில் நிறைவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், இவ்விழாவானது சோழ மண்டலத்தில் மட்டுமல்லாது கூடல் நகரமாகிய மதுரையம்பதியிலும் நடைபெற்று வருவதும் அடுத்தடுத்த காட்சிகளாக அமைந்தன.

நாடகத்தின் இறுதி காட்சியாக, வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, “காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான யானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக்கொள்ளும் காட்சியும், இணைந்திருந்த காதலர்கள் தங்கள் காதலியர்களுடன் விழாவின் போது புனலாடி களித்திருக்கும் காட்சிகளும் அமையப்பெற்று நிறைவு செய்யப்பட்டது.

நாட்களும் பல கடந்தன. இதோ விழா முடிய இரு தினங்களே மீதம் இருக்கும் நிலையில் மனோ ரஞ்சனியின் மன வேதனை கூடுகிறது. தன்னவன் விழாவின் இறுதி தினத்தன்று தன்னோடு புனலாடி களித்திருக்க வருவானா என்று ஏக்கத்தோடு காத்திருந்தாள்.

ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ?”

என்று தன் காதல் கணவன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பதை தன் தோழியான பொன்னியிடம் பகர்கிறாள்.

மேலும் தன்னவனின் பிரிவைத் தாங்கமாட்டாது புலம்புகிறாள்.

தலைவன் பிரிவை தாங்க மாட்டாது தவிக்கிறாய், விழாவின் இறுதி தினத்தன்று உன்னவர் வரத்தான் போகிறார் பார் என்கிறாள் பொன்னி.

“அவன் பிரிவை உணர்த்துகிறான். யான் தாங்கிக்கொள்வேன். என்னவர்தான் எனது பிரிவைத் தாங்கமாட்டார். அவருக்காகத்தானடி என் நெஞ்சு நோகிறது. என் கண்ணீர் சுட்டு என் இமைகளே தீய்ந்துவிடும் போல் இருக்கிறது. அதற்காகவே என் கண்கள் அமைந்திருக்கின்றன. நம் காதலர் கண்கள் அதற்காக அமையவில்லை,  (அவர் கண்ணீர் வடியும் கண்கள் அமையப்பெறாதவர் என்றும், அமைவு என்னும் நிம்மதி இல்லாதவர் என்றும் இருபொருள்பட)

நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே

இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

என்று உரைத்தவளை ஆற்றுப்படுத்தி உறங்க அழைத்துச் செல்கிறாள் பொன்னி.

அடுத்த ஒரு தினம் ஒரு யுகமாய் கழிந்தது பெண்ணவளுக்கு. விழாவின் தொடக்கத்திலிருந்து காமக்கோட்டத்தின் காதல் தேவனை அனுதினமும் தான் வேண்டியது, தன்னவனை சேரும் அந்த இனிய தருணமானது விழைய இன்னும் ஒரே ஒரு பொழுது கடத்தல் வேண்டும். ஒரு திங்கள் பொறுத்திருந்தவளுக்கு ஒரு பொழுது பொறுத்திருக்க இயலவில்லை. விடியல் வரையிலும் உறக்கமே பிடிக்கவில்லை பேதையவளுக்கு. நாளை மன்னவனோடு இணையும் பொழுதினை மனதில் நிறுத்தியவளின் கன்னங்கள் இரண்டும் அந்திச் செவ்வானத்தின் செக்கர் வண்ணத்தை சுண்ணமாய் பூசிக்கொண்டன. வனிதையின் விழிகள் மறுநாளின் இன்ப விடியலுக்காக படபடப்புடன் விழித்துக் காத்துக்கொண்டிருந்தன.

இனிமேலும் காலம் தாழ்த்திக் கொடியிடையாளை நோகவிட வேண்டாமென்று எண்ணினான் போலும் பரிதியவன், மறுநாளினது விடியலைக் கட்டியம் கூறிக்கொண்டு விரைந்து வந்துவிட்டான்.

இந்த பொன்னான தினத்திற்காகவேக் காத்திருந்தவள்,  இத்தனை தினங்களாய் பிச்சி போலிருந்தவள், இன்று தன்னவனைக் காணும் பொழுதில் தேவமங்கையென எழில் பொலிய தோன்றும் பொருட்டு,  அதிகாலையிலேயே சந்தனமும், மஞ்சளும் பூசி,  ரோஜா இதழ்களும்,  பல வாசனை மலர்களிலிருந்து பெறப்பட்ட திரவியங்களும் கலந்த வெந்நீரில் நீராடினாள்.

கோதையின் கார்குழலை புகைப்போட்டு உலர்த்தி, மன்னவன் கண்ட மாத்திரத்தில் சொக்கிப்போகும் வண்ணம் அவளுக்கு ஒப்பனை செய்கிறாள் பொன்னி.

பட்டுப்போன்ற கன்னங்களில், தேர்ந்த மலர்களையும் மூலிகைகள் பல சேர்த்தும் கைப்பட இடித்த பொன்னிற சுண்ணம் பூசி, கயல் போன்ற நீண்ட நயனங்களில் கார்காலத்தின் கரிய மேகத்திரள்களைக் குழைத்துத் தயார் செய்தது போன்ற அஞ்சனம் தீட்டி, மாதுளம்பூவாய் சிவந்திருந்த அதரங்களின் சிவப்பு வண்ணத்தோடு போட்டியிட ரோஜா வண்ண உதட்டுச் சாயம் பூசி, பிறை நுதலில் திலகமிட்டு மங்கையவளின் வதனமதில் எழில் மிக்கப் பொலிந்தது.

நவரத்தினங்களிழைத்த சூடாமணியோடு,  நேர்த்தியாக பின்னிய குழலில் சடை நாகம் பதித்து, சூரியப் பிரபை சந்திரப் பிரபை சூட்டி,  வகிட்டில் சுட்டி அணிவித்து அல்லையில் சொருகுப் பூ சூட்டி, பின்னப்பட்ட குழலை குஞ்சம் கொண்டு முடிந்து, சுரும்புகள் பல மொய்க்கும் வண்ணம் வண்ண மலர்கள் சூடி தலையலங்காரம் பூர்த்தி செய்துவிட்டாள்.

மரகதத்தினாலான முருகு,  முத்துக்கள் பதித்த வல்லிகை செவிப்பூ காதணிகளாக பாவையவளின் செவி மடல்களுக்கு அழகு சேர்த்தன. வெண் சங்குக் கழுத்தில், பொன்னாலான காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மாதுளங்காய் மாலை அலங்கரித்தன.

புயத்தில் கொந்திக்காய் சூட்டி, கொடியிடையில் முத்துக்களாலான மேகலை தரித்து, கரங்களில் பொற்காப்புப் பூட்டி, மருதாணியிட்டு சிவந்திருந்த வெண்டைப்பிஞ்சு விரல்களில் சிவந்திப்பூவும், மோதிரமும், வட்டப்பூவுமணிந்து, பஞ்சுபொதி போன்று தாமரையின் செக்கர் வண்ணத்திலிருப்பினும் மேலும் அடர் வண்ணமாக்கிட மருதாணியிட்டு சிவந்திருந்த பாதங்களில் மாம்பிஞ்சுக் கொலுசுகள் தவழ,  பாதவிரல்களில் காலாழி,  மிஞ்சி சூடி மன்னவன் கண்ட மறு நொடியில் கிரங்கிப்போகும் வண்ணம், தேவலோக மங்கையென அழகே உருவாய் சித்திரப்பாவையவள் சிலையென வடிவாய் நின்றாள்.

மனோரஞ்சனியின் சொக்கும் அழகைக் கண்ட பொன்னி கைவிரல்களால் சொடுக்கெடுத்து திருஷ்டி கழித்தவள், “தம்மைக் கண்டதும் தம் மணாளர் தம்முடைய செறிந்த எழிலில் இப்புவியையே மறக்கப்போகிறார் தேவி” என்று கூறி மென்னகை புரிந்தாள்.

அதைக்கேட்ட ரஞ்சனியின் முகம் தாமரை மொக்கு குவிவது போல் நாணத்தால் சிவந்து குவிந்தது. “போதும் பொன்னி,  நாணத்தால் என்னை சிவக்க வைக்காதே, என்னவரின் வருகையைக் காணச் செல்ல வேண்டும். புறப்படுவோமா இருவரும் கோயிலுக்கு?”.

மனோரஞ்சனியும் பொன்னியும் இராசகிரியத்தில் அமைந்திருந்த காதல் தேவன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மூதூர்ப் பொழிலில் தன் மனம் கவர்ந்த மணாளனின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருந்தாள் நங்கையவள்.

நேரமும் கடந்தது, இன்னும் சில நாழிகைகளில் செங்கதிரோனும் செவ்வனே தன் பணி முடித்துத் தன் இருப்பிடம் நோக்கி விரையும் தருணமும் நெருங்கிவிடும். பாவையவளின் விழிகளோ இமைக்கவும் மறந்து தன்னவனின் வருகையை எதிர் நோக்கியே காத்திருக்க, காளையவன் இன்னமும் வந்தப் பாடில்லை.

ஆவல் ததும்பிய பேதையவளின் விழிகளில் இமைகள் அணைக்கட்ட கரையை உடைத்துக்கொண்டு உவர்நீர் பெருக்கெடுத்தது. பொழில் அமைந்திருக்கும் சோலையிலே அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் தத்தை மொழி பேசும் கிள்ளையிடம், “இறைவனளித்த வரமாக இரு அழகிய சிறகுகள் பெற்றிருக்கும் தத்தையே,   இப்பேதைக்கு ஒரு உதவி செய்வாயா?  நின் அழகிய வண்ணச் சிறகு விரித்து பறந்து சென்று எம்மைப் பிரிந்து போர்க்களம் புகுந்த எம் மணவாளன் வரும் வழி அறிந்து சொல்வாயா எமக்கு?  ம்ம் சொல்வாயா அஞ்சுகமே?” என்று தன் ஆற்றாமையை உரைத்துக்கொண்டிருக்க,  அக்கிள்ளையோ பெண்ணவளைக் கண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தது.

“என்ன விழிக்கிறாய்? எனக்காக யான் கேட்ட இந்த சிறு உதவியை செய்ய மாட்டாயா?  என் மன்னவர் வரும் வழியறிந்து சொல்ல மாட்டாயா?”

“வழியை யான் உரைக்கவா கண்ணே??”……

என்ற குரலைக் கேட்ட மாத்திரத்தில் மங்கையவளின் தேகத்தில் ரோமாஞ்சனம் உண்டாகியது. தனது திருமுகத்தை திருப்பிப் பார்த்தவள் ஆனந்தத்தில் ஒரு கணம் ஒரே ஒரு கணம் வாயடைத்து, மெய் விதிர்த்து நின்றாள். மறு கணமே தன்னவனின் திண்மையான மார்புக்கூட்டுக்குள் தஞ்சமடைந்திருந்தாள்.

தன்னவளின் தீண்டலில் திளைத்துத் திக்குமுக்காடியவன், “என் கண்ணே, இப்படியே என்னை இறுக்கி நின் பிடியில் வைத்துக்கொண்டிருந்தாயானால் எனக்கு மூச்சுமுட்டுகிறது, சற்றே என் நிலையை பார், சுவாசிக்க எத்தனை சிரமப்படுகிறேன் !!அப்பப்பா!!  நின் அங்கங்களைத் தாண்டி காற்றும் கூட என்னை நெருங்க மாட்டேன் என்கிறது” என்றவன் முகத்தில் குறும்புப் புன்னகை விரிந்தது.

வளவனின் இந்த மொழிகளைக் கேட்ட ரஞ்சனி படக்கென்று தன்னை தன்னவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள். பெண்மைக்கே உரிய நாணம் தோன்றி அவளை சிவக்கச் செய்ய, விழிகள் மூடி, தன் பூங்கரம் கொண்டு மென்முகம் மறைத்து, நிலம் நோக்கி நின்றாள்.

சிறு மென்னகையுடன் தன்னவளை நெருங்கியவன், தனது இரும்புக் கரங்களினால் மிக மென்மையாக பெண்ணவளின் காந்தள் விரல்களை முகத்தினின்று பிரித்து,  தன்னவளின் மோவாயை பிடித்து நிமிர்த்தினான்.

பெண்ணவளுக்கோ நாணம் மிதமிஞ்சி நிற்க, இன்னமும் விழிகளைத் திறந்த பாடில்லை.

அருகிலிருந்த தத்தையை நோக்கியவன், கிள்ளை மொழி பேசும் தத்தையே, “இப்போது எனக்கு ஒரு உதவி செய்வாயா நீ?, ஏந்திழையவளைக் காண போர்க்களத்தினின்று வெற்றிவாகை சூடி, காடு மலைகள் கடந்து ஓடோடி வந்தவனின் வதனம் நோக்காது,  தன்னுள் இருக்கும் நன்முத்தைப் பாதுகாக்கும் பொருட்டு சிப்பியானது இறுக மூடியிருப்பதைப் போல் தன் கருநாவல் கண்மணிகளில் தன்னவனாகிய எம்மை நிரப்பாது இமைகள் என்னும் சிப்பிக்கொண்டு மூடியபடி, எம் வதனம் நோக்காது நிலமகளின் முகம் நோக்கியிருக்கும் இப்பூங்குயிலை சற்றே இமை பிரித்து இந்தக் காதல் கள்வனை ஒரு கணம் அவள் நீண்ட கருவிழிகளால் காணச் சொல்வாயா?…..சொல்வாயா தத்தையே?”

மீண்டும் அதே பார்வைதான் அக்கிள்ளையிடமிருந்து வந்தது.

“நீயும் எனக்கு உதவ மாட்டாயா. நல்லது. நின் தோழி நிலமகளை நோக்கிக்கொண்டு நிலமகளுடனே உரையாடிக் களிக்கட்டும். யான் சென்று எனது பணியைக் கவனிக்கிறேன். ம்ம் அடுத்ததாக வடதிசை நோக்கிப் படை நடத்திச் செல்ல வேண்டும், அதற்குள் என்னவளுடன் சற்று களித்திருக்கலாமென்று எண்ணி வந்தேன், அவளோ என்னை விடுத்து நிலமகளின் மீது நாட்டம் கொண்டுவிட்டாள் போலும், பரவாயில்லை, யான் இக்கணமே மீண்டும் படைகளை நடத்திச் செல்ல ஆயத்தப் பணிகளை செய்யச் செல்கிறேன்” என்றவன் புன்முறுவலோடு சிறு தொலைவு  நடந்தான்.

கள்வனவன் மொழி கேட்டு நெஞ்சம் பதறியவள், “எம்மை விடுத்து தாம் இனி ஒரு கணமேனும் விலகினீர்களானால் அக்கணமே எனது இன்னுயிர் இப்பூவுடலை விட்டு நீங்கிவிடும் அய்யனே. தமது பிரிவை இன்னொருமுறை இப்பேதையால் தாங்கிக்கொள்ளவே இயலாது. தாம் போர்க்களம் சென்றாலும் சரி வேறெங்கு சென்றாலும் சரி, தம்மோடு யானும் பயணப்படுவேன், எம் வாழ்வும் தாழ்வும் அனைத்தும் உம்மோடுதான்” என்றவள் வளவனின் திண்தோள்களில் சாய்ந்து விழிநீர் உகுத்தாள்.

தன்னவளின் விழிகளில் வழியும் நீரைக் கண்டு பதறியவன் “என் கண்ணே, அழாதே. நின் வேல் விழிகள் திறந்து, பவள இதழ் பிரித்து எம்முடன் மொழியாட வைப்பதற்காகவே யான் அவ்வாறு பகன்றேன். ஒருவழியாய் நிலமகளை விடுத்து நின் மணமகனைக் கண்டு திருவாய் மொழிந்துவிட்டாய்,  எனது திட்டம் வெற்றியடைந்துவிட்டது” என்று முறுவலித்தவன் தன்னவளின் விழிநீர் துடைத்துத் தன் தோளோடு சேர்த்தணைத்து ஆற்றுப்படுத்தினான்.

“இனி விளையாட்டாகக் கூட எம்மைப் பிரிந்து செல்வேன் என்று மொழியாதீர்கள் வளவரே, எப்போதும் எதிலும் விளையாட்டு, பேதையிவளை பிச்சியாக்கிக் கண்டு களிப்பதில் தமக்கு அப்படி ஒரு ஆனந்தம்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கலகலவென்று நகைத்தவன், “சரியாய் போனது, மீண்டும் நிலமகள் நின்னை கவர்ந்து கொண்டாளா? அடிப் பெண்ணே! என் கண்ணுக்குக் கண்ணே…..என்னவளோடு யான் விளையாடாது வேறு எவருடன் யான் விளையாடுவேன்?” என்றவன் மெல்லியலாளின் மென்கரம் பற்றி இழுத்துத் தன் மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டான்.

அன்று பொன்னி உரைத்தது போல் விழாவின் இறுதி தினமாகிய இன்று, இணைப்பறவைகள் இரண்டும் ஏனைய காதல் கிளிகளுடன் பொங்கிப்பெருகும் காவிரித்தாயில் புனலாடி களித்திருந்தனர்.

வெகுநாட்கள் பிரிவினால் வாடிய இரு உள்ளங்கள் அன்றலர்ந்த புது மலராய் விரிந்து சிரிக்க, அன்றில் பறவைகளாய் இணைந்து சுகித்திருக்க நிலவு மகள் தன் குளிர் கரங்களால் இருவரையும் வாழ்த்திச் சென்றாள்.

சுபம்

(குறிப்பு :

*இந்திரவிழா கொண்டாடியதன் நோக்கமே மழையின் கடவுளான இந்திரனை வணங்கி உழவுத் தொழிலுக்குத் தேவையான மழையை வேண்டிப் பெறுவதற்கு ஆகும். மருத நிலத்தின் தெய்வமான வேந்தனை (இந்திரனை),  அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதான இளவேனில் பருவத்தில் மருத நிலத்தில் வாழும் உழுகுடி மக்களால் வழிபடுவதற்கு எடுக்கப்பட்ட விழா இந்திரவிழா ஆகும். மேலும் இந்திரனைக் காமுகனாக புராணக் கதைகள் சித்தரிக்கின்றன. கவுதம முனிவரின் மனைவியான அகலிகை மீது காமம் கொண்டதால் முனிவரின் சாபம் பெற்றவன். முனிவரின் சாபத்தால் இந்திரன் தன் உடல் முழுக்க ஆயிரம் கண்களை (பெண்குறிகளைப்) பெற்றான். தேவசர்மா முனிவரின் பத்தினியான ருசி என்பவள் மீது காமம்வயப்பட்டவன் இந்திரன் ஆவான் என்பதனால் அவனுக்கு எடுக்கப்பட்ட இவ்விழாவானது காதல் விழாவாக, வசந்த விழா, காமன் விழா, வில் விழா, இளவேனில் விழா என்று பல்வேறு பெயர்களைக்கொண்டு கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

*கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான்.

தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார் .நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குத் தனிக்கோயில்கள் இருந்து வந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இன்றும் பல இடங்களில் காம தேவனுக்குக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.

*இந்திரவிழா இன்று

நாகபட்டிணம் மாவட்டம் பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) கொற்றவை பந்தலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்திரவிழா தொடங்கி. ஒரு வாரம் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் இவ்விழா மூன்று நாட்களுக்குச் சுருங்கியது. இந்த மூன்று நாட்களுக்குப் பட்டிமன்றம், பாட்டுமன்றம், இலக்கியச் சொற்பொழிவு, சிலப்பதிகார நாடகம் ஆகியவை நடைபெறுவதுண்டு. சுற்றுலாத் துறையினர் இதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அன்று மருத நில உழவர்களால் எடுப்பிக்கப்பட்ட இந்திர விழாவே இன்றைய உழவர்த் திருநாளாகிய தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

*இன்றைய காதலர் தினம் :

பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் கே. உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், “உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று” என்று கூறலாம்.

யவனர்களால் (உரோமானியர்கள்) தொடங்கப்பட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. காரணம், உரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர் வீரர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அஃதோடல்லாமல், உரோமானிய வணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து சென்றனர் என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்! அதனால், அவர்களிடத்திலும் அப்பழக்கம் தோன்றியிருக்கலாம்.

யவனர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின் பொருட்டு வந்திருந்து தங்கியிருந்திருக்கின்றனர்.

யவனர்கள், வாளைக் கையில் ஏந்திக் கொண்டு மதுரை மாநகர் கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்துள்ளனர்.

யவனர்களில் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்துள்ளனர். புகார் நகரில் தங்கியவர்கள் மாடமாளிகைகளிலும் மதுரையில் தங்கியவர்கள் கோட்டையைக் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதால் தமிழகத்தின் தொன்மையான பழக்கவழக்கங்களில் பலவற்றை யவனர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவற்றுள் சில பழக்கவழக்கங்கள் யவனர்கள் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கவும் கூடும். அவ்வாறு கொண்டு சென்றவற்றுள் “காதலர் தின விழா”வும் ஒன்றாக இருந்திருக்கூடும் என்ற கருத்தும் உள்ளது)

கட்டுரையாளர் : ரஞ்சனி