
அயர்வதற்காக, ஆதவன் அணைத்து வைக்கப்பட்ட மாலை நேரம்.
கசடுகள் காற்றில் மிதந்து வந்து, முகத்தில் ஒட்டிக் கொண்ட முகத்தோடு, கழுத்துப்பகுதியிலும், கம்புக்கூடு பகுதியிலும், வியர்வைகள் குவிந்து நிற்கும் ஆடையோடு, கரைகள் ஆக்கிரமித்திருக்கும் பாதணியோடு, அளவுக்கு மீறிய சுமையை பையில் நிரப்பிக் கொண்டு, வெகு நாட்களுக்கு பின்பு, தன் சொந்த ஊருக்குள் நுழைந்து, தேநீரகத்தில் ஒதுங்கினான் ஈயன்.

ஈரம் வற்றிய உதட்டுடன் நடந்து வந்தவன் “ண்ணா, ரெண்டு வடை சட்னி வச்சி” என்று சப்தமாக கேட்டபடி, இரண்டு விரல்களை நிமிர்த்தி, மீதி மூன்றையும் அமர்த்தி சைகை காட்டினான். முன்பு, தன் நண்பர்களுடன் இணைந்து வந்து அமர்ந்து, வடை உண்டு கொண்டே, கதை பேசிய நாட்கள், கண் முன்னே கணப்பொழுது காட்சியளித்து கடந்தன.
வடையை பற்களால் அரைத்தபடி, நினைவை செரித்துக் கொண்டிருந்தான். சட்டை பைக்குள் அமர்ந்திருக்கும், ஒவ்வொரு அணாவையும் அள்ளி குமித்து, தின்ற வடைக்கு சரிகட்டிய தினங்கள் அனுமதி பெறாமலே ஈயனின் உதட்டினை விரியச் செய்தன.
நண்பர்களிலே மிக வளர்ந்தவனாக இருந்த சதரனிடம், பை வழித்து பணத்தை அனைவரும் இணைந்து அள்ளிக் கொடுத்து மதுபானம் வாங்கி வர சொன்னது, அவன் தன் வலக்கரம் முழுவதையும் கயிறுகளால் சுற்றி, இடக்கரத்தில் காப்பு அணிந்து கொண்டு போய், மதுபானம் வாங்கி வந்தது, முள்ளு புதருக்குள் புகுந்து, அருந்தியது, ஐந்து மணிநேரம் கழித்து, ஐந்து பூமர்களை வாயில் மென்று விட்டு வீடு திரும்பியது, வீட்டிற்குள் நுழைந்ததும், கழிவறைக்குள் புகுந்து, டூத் பேஸ்ட் தேடி பிடித்து, உபயோகித்தது, துண்டு எடுத்து வராமலே குளித்தது, துண்டு கேட்டு, அன்னையிடம், “குளிக்க போறவேன், துண்டுவேட்டி எடுத்துட்டு போ முடியாத லே, உனக்கு தொண்டி வேலைக்கு ஆளொருத்தி வேணுமோ?” என்று வசவு வாங்கியது, இவையாவும் கணப்பொழுதில் கண் முன்னே காட்சி அளித்து இதயத்தை இன்பமழையால் நனைத்தது.
இன்று ஆசை அணையும் வரை, வடைகளை வாங்கிட பணம் கைவசம் இருக்கிறது. அன்று அருகில் இருந்த நண்பர்களை, இன்று எப்படி கூட்டிச் சேர்ப்பது.
மதுபானக் குப்பிகள் திகட்ட திகட்ட பருகிட பணப்பலன் இருக்கிறது. உடற்பலம் இருக்கிறது. வட்டமாய் அமர்ந்து, விருப்பப்பட்டவர்களையெலாலாம் வசைபாடி தீர்த்து, ஒருவர் தோளையொருவர் பற்றி நடந்து, மனம் மகிழ்ந்து நடனமாடிய நாட்கள் எண்ணத்தில் நுழைகிறது. அதைத்தாண்டி தனியறையில் அருந்த மன பலம் தான் போதாது என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
‘கையில பேட் இருக்கு, பாலு இல்லையே’ என்ற பாடல் வரிகளை அங்கு வீற்றிருந்த ஒலிப்பெருக்கி துப்பியது.
கதாசிரியர் : M Anbu