உலகின் மிகப்பெரிய உயிர் வேலியின் வரலாற்று ஆவணம்
ராய் மாக்ஸம் – தமிழில் : சிறில் அலெக்ஸ் – புத்தக விமர்சனம்

உப்புவரியை வசூலிப்பதற்காக இந்தியாவிற்கு குறுக்கே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுங்கவேலி பற்றிய ராய் மாக்ஸம் அவர்களின் தேடலே உப்புவேலி புத்தகம். சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அறியப்படாத வரலாற்று உண்மையை தனது ஆண்டுக்கணக்கான பெருந் தேடலின் வழியே வெளிக்கொணர்ந்த ஆசிரியர், தனது தேடலின் பயணத்தை புத்தகமாக வெளியிட்டிருப்பது வரலாற்றை ஆவணப்படுத்தும் நல்ல முயற்சி.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கே இமயத்திலிருந்து தென்கிழக்கில் ஒரிசா வரை கிட்டத்தட்ட 2500 மைல் நீள சுங்க வேலி ஒன்றை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், அதனை 12,000 காவல் வீரர்களைக் கொண்டு பராமரித்த வரலாறு 1990 –களின் இறுதியில் ராய் மாக்ஸமின் ஆய்வுத் தேடல் வழியாகவே வெளிவந்துள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நமக்குச் சொல்லவே ஒரு வெளிநாட்டவர் தான் வர வேண்டியுள்ளது. ராய்க்கு இந்த ஆய்வில் நாட்டம் ஏற்பட்டிராவிட்டால் நம் வரலாறு நமக்குத் தெரியாமலே போயிருக்கும். வரலாற்றைப் பதிவு செய்வபர்கள் ஆட்சி செய்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப எழுதுவதால் உண்டாகும் சிக்கல் இது!
லண்டனின் ஒரு பழைய புத்தகக் கடையில் ராய் வாங்கிய மேஜர் ஜெனரல் ஸ்லீமனின் ‘ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும் நியாபகங்களும்’ என்னும் புத்தகமே உப்புவேலி குறித்த தேடலின் தொடக்கப்புள்ளி. அதிலிருந்த சிறிய குறிப்பின் வழியே சுங்கபுதர்வேலி பற்றி அறிந்த ராய், பல தகவல்களையும் வரைப்படங்களையும் தனது தனிப்பட்ட ஆர்வத்தால் தேடிச் சேகரித்து, அதன் மூலம் சுங்கவேலியின் எச்சத்தை 1998-ல் இந்தியாவில் கண்டறிந்ததோடு நிறைவடைகிறது புத்தகம். ஆனாலும் வெறுமனே இந்த புத்தகத்தை ஒரு பயண நூல் என்ற தலைப்பின் கீழ் அடக்கிவிட முடியாது. இது ஒரு மிகச்சிறந்த வரலாற்று நூல் என்று கூறினாலும் மிகையாகாது.

ஆங்கிலேய அரசின் கொடிய முகம் தெரிய வேண்டுமா ?
உப்பும் , உலக அரசியலும் அறிய வேண்டுமா?
காந்தியின் விடுதலைப்போர் ஏன் உப்பிலிருந்து தொடங்குகிறது?
உப்புச்சத்தியாகிரகமும் தண்டி யாத்திரையும் ஏன் நடத்தப்பட்டது?
இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த கருவி.
மலிவான, மிகவும் சாதாரணமாகக் கிடைக்கும் உப்பின் மீது ஆங்கிலேயர்கள் வரி விதித்ததற்கான காரணத்தையும் ராய் முன் வைக்கிறார். நிலத்தின் மீதோ சர்க்கரையின் மீதோ கூட அதிக வரி விதித்திருக்கலாம். ஆனால் அதிலிருந்து அதிக வருவாயை ஈட்ட முடிந்திருக்காது. ஏனென்றால் அதன் மூலம் அனைத்து மக்களிடமிருந்தும் வரியை வசூலிக்க முடியாது.உப்பு என்றால் அது ஏழை பணக்காரர் என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் உபயோகப்படுத்தும் ஒரு பொருள். அதன் மீது வரி விதித்தால் அதிக வருவாய் ஈட்ட முடியும் தானே !! எனவே கிழக்கிந்தியக் கம்பெனியின் எல்லைக்குட்பட்ட வங்கத்தில் மக்களிடமிருந்து உப்பு வரி வசூலிக்கப்பட்டது. இந்த உப்பு வரியால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மக்களே. அவர்களின் ஒரே சுவையூட்டியான உப்பிற்காக அவர்கள் அதிக தொகை செலவிட வேண்டியிருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கிழக்கிந்திய கம்பெனி வட கிழக்கு இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அதே சமயம் வடமேற்கு இந்திய நிலப்பரப்போ சிற்றரசுகளின் வசம் இருந்தது. கம்பெனி எல்லைக்கு அப்பால் இருந்த இந்திய நிலப்பரப்பில் உப்பின் விலை சாதாரணமாகவே இருந்தது. இதனால் சிற்றரசுகளின் எல்லையிலிருந்து கம்பெனி எல்லைக்குள் உப்பு கடத்துதல் அதிகரித்தது. இதைத் தடுக்கவே எல்லையில் ஆங்காங்கே சுங்கம் வசூலிக்கும் சௌக்கிகள் முதலில் நிறுவப்பட்டது.
1770 – இல் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தின் போது கூட கம்பெனி அரசு வரி வசூலிப்பதை நிறுத்தவில்லை. வங்கத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள், கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பஞ்சத்தில் மாண்டனர். இதற்கு மக்களின் உப்பு பற்றாக்குறை முக்கிய காரணியாக இருக்க வாய்ப்புள்ளதை ராய் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். உப்பு விலை சாதாரணமாக இருந்த பிற பகுதிகளில் ஒரு மனிதனுக்கு ஓராண்டுக்குத் தேவையான உப்பு 16 பவுண்டுகள். அதாவது ஒருவர் ஒரு நாளில் உட்கொள்ளும் உப்பு தோராயமாக 22 கிராம் ஆகும். ஆனால் வங்கத்திலோ அதன் அளவு 11 கிராம் அல்லது அதற்கும் குறைவாக இருந்துள்ளது. மேலும் அது கலப்பட உப்பு. இந்தக் குறைந்த அளவு உப்புக்கே வங்கமக்கள் தங்களுடைய ஆண்டு வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை, அதாவது இரண்டு மாத வருமானத்தைத் (சில நேரம் அதை விட அதிகமாகவும்) தர வேண்டியிருந்தது. உப்பு பற்றாக்குறையால் ஏற்பட்ட உடல் நலிவே கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதற்கு காரணம் என்கிறார் ராய்.
கம்பெனி அரசின் சுங்க ஆணையர்களால் யமுனை ஆற்றங்கரையில் சுங்கச் சாவடிகள் வரிசையாக நிறுவப்பட்டது. பின்னர் இவை இணைக்கப்பட்டு ஒரு தடுப்பு வேலி போல உருமாற்றப்பட்டது. இது நாளடைவில் மிகப்பெரிய சுங்க புதர் வேலியாக மாறியது. 1857- இல் சிப்பாய்க் கழகத்தால் கம்பெனி ஆட்சி முடிவுற்று, இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி தொடங்கினாலும் சுங்க வேலியோ, உப்பு வரியோ ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்ந்தது. ஏறக்குறைய நூறாண்டுகளாக வங்க மக்கள் உப்பு வரியை ஒரு தண்டனையைப் போல சுமந்து கொண்டிருந்தனர்.
1869 – இல் முழுமையான சுங்க வேலியாக உப்பு வேலி இயங்கத் தொடங்கியது. பத்து முதல் பன்னிரண்டு அடி உயரமும் நாற்பது அடி அகலமும் கொண்ட காய்ந்த வேலியாகவோ அல்லது உயிர் வேலியாகவோ அது பராமரிக்கப் பட்டது. அதில் 1727 காவல் மாடங்கள் இருந்தன. 1869 -70 இல் மட்டும் சுங்க வேலியால் உப்பு உற்பத்தி, இறக்குமதி மற்றும் சர்க்கரை ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ.4,35,00,000 இலாபமாகக் கிடைத்தது .1914 – ல் தங்கத்தின் விலை ஒரு கிராம் தோராயமாக எட்டு ரூபாயாக இருந்துள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இன்னும் குறைவாகவே இருந்திருக்கும்.) வேலி பராமரிப்பிற்கான செலவோ ஆண்டிற்கு வெறும் ரூ.16,20,000 மட்டுமே. வட இந்தியாவின் உப்பு உற்பத்திக்கு பெரும் ஆதாரமான சம்பர் ஏரியின் உற்பத்தி உரிமத்தை ராஜஸ்தான் சிற்றரசுகளிடம் இருந்து சுங்க ஆணையர் ஏ.ஓ.ஹியூம் 1878 இல் கைப்பற்றினார். ஆக ஒட்டு மொத்த இந்தியாவின் உப்பு உற்பத்தியும் ஆங்கிலேயர் வசம் வந்தது. சுங்க புதர் வேலியின் தேவையும் தீர்ந்து போனது. ஆகவே 1879 ல் சுங்க வேலி கைவிடப்பட்டது. இந்தியாவில் சுரண்டப்பட்ட செல்வம் அனைத்தும் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கோ 1876-78 இல் மீண்டும் ஒரு பஞ்சம் தலைவிரித்தாடியது. இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்திய உப்பு வேலி பற்றி நம் வரலாற்றில் எங்குமே சொல்லப்படவில்லை.
வரலாற்று ஆசிரியர்கள் மறந்து விட்டனரா? அல்லது மறைத்து விட்டனரா?
ஏழைகளின் மீது விதிக்கப்பட்ட உப்பு வரியை நீக்கக் கோரி காந்தியடிகள் விடுதலைப்போரை நடத்தியதும், உப்புச்சத்தியாகிரகம் செய்ததும், தண்டி யாத்திரை சென்றதும் ஏன் என்று இந்தப் புத்தகத்தை படித்த பின்பு தான் நன்கு புரிகிறது. ஏழை மக்களுக்காக களத்தில் நின்று போராடியதால் தான் இன்றளவும் மக்கள் மனதில் மகாத்மாவாக உயர்ந்து நிற்கிறார்.
உப்பு வேலி குறித்த ஆவணங்கள், வரைபடங்களின் தேடல் ஒரு புறம் ; நூறாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட சுங்க வேலியை இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள் வரை சென்று தேடும் பயணங்கள் மறுபுறம் …என்று வாசிக்க, வாசிக்க விறுவிறுப்பாகவும் ஆவலைத் தூண்டும் விதமாகவும் இந் நூலைப் படைத்துள்ளார் ராய் மாக்ஸம்.
பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையை உலகிற்கு மேலும் வெளிச்சம் போட்டு காட்டப்போகும் சுங்க வேலியின் எச்சத்தைத் தேடிச் செல்லும் ராய்க்கு , ‘பிரிட்டானியா’ என பொறித்திருக்கும் பிஸ்கட்டுகளை உண்ணக் கொடுக்கும் இந்தியர்கள், ராய் இந்தியா வந்திருந்த சமயத்தில் திடீரென ஏறும் உப்பின் விலை, உப்புத் தட்டுப்பாடு உண்டாகி விடுமோ என்ற அச்சத்தில் கூடுதலாக ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கி வைக்கும் அவரின் நண்பர்கள் என சுவாரஸ்யத்திற்கு சிறிதும் பஞ்சமில்லாத புத்தகம்.

எவராயினும் இப் புத்தகத்தைப் படித்த பின் உப்பின் மீதான அவரது பார்வை மாறப் போவது உறுதி. இதற்கு முன்பு அதிகம் கவனிக்காத உப்பை சற்றே உற்று நோக்கப் போவதும் நிச்சயம். உப்பு பாக்கெட்டை அவ்வாறு உற்று நோக்கிய போது எனது கண்ணில் சிக்கிய வாசகம் இதோ…

“Let there be work, bread, water and SALT for all” – Nelson Mandela
அனைவரும் படிக்கவேண்டிய அருமையான புத்தகம்.
படைப்பாளர் : திருமதி.மலர்விழி தமிழரசன்