
மணி நள்ளிரவு 12.40.
அருணனின் அலைப்பேசி அலறியது. மறுமுனையில் E2 காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன்.
” அருணன் சார், இந்த நேரத்துல உங்கள தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கனும்.. அவசரம் அதனால தான். உடனே நம்ம ஊருக்கு வெளியில் இருக்குற சவுக்குத் தோப்புக்கு வர முடியுமா? …
விஷயம் கொஞ்சம் சீரியஸ் அதனாலதான்.” என்றார்.
உடனே வருவதாகக் கூறிவிட்டு தன் வண்டியில் கிளம்பிய அருணன் அரை மணி நேரத்தில் அந்த சவுக்குத் தோப்பை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்த தலைமைக் காவலர் கருப்பசாமி , அருணனை அந்த சவுக்குத் தோப்புக்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஆய்வாளர் சந்திரனுடன், மேலும் இரண்டு காவலர்கள் நின்றிருந்தனர். அந்த இடத்தில் தலையில்லா சடலம் ஒன்று இருந்தது. தடயங்கள் அழிந்து விடக் கூடாது என்பதால் தான் அவரசமாக அழைத்து வர வேண்டியதாக ஆகிவிட்டதாகத் தெரிவித்தார் ஆய்வாளர்.
டார்ச் வெளிச்சத்தில் அந்த உடலைச் சற்று நேரம் உற்று நோக்கிய அருணன் அங்கிருந்து வடகிழக்கு திசையில் நூல் பிடித்து நடப்பது போல் நடக்கத் தொடங்கினான். சந்திரனும் மற்றும் ஒரு காவலரும் பின் தொடர அந்த சவுக்குத் தோப்பை விட்டு வெளியேறி அருகில் இருந்த பலாத் தோப்புக்குள் நுழைந்து கிழக்குப் பக்கமாகத் திரும்பி நடந்த அருணன், சட்டென்று ஒரு பலா மரத்தின் முன்பு நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு வேகவேகமாக அந்தப் பலா மரத்தின் மீதேறி உச்சிக் கிளையில் கட்டப்பட்டிருந்த சாக்குப் பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து ஆய்வாளரிடம் கொடுத்து திறக்கச் சொன்னார்.
அதைத் திறந்து பார்த்த சந்திரன் அதிர்ந்து போனார்.. அதில் ஒரு ஆணின் தலை இருந்தது. எல்லோரும் துப்பறிவாளர் அருணனை வெகுவாகப் பாராட்டினர். ஆர்வம் தாங்க முடியாமல் ஆய்வாளர், “எப்படி?”, என்று அருணனைக் கேட்டார்.
அருணன் கையில் இருந்த டார்ச் ஒளியில் அங்கு சாரை சாரையாகச் சென்று கொண்டிருந்த எறும்புகளைக் காட்டி, “இந்த எறும்புகளைப் பின் தொடர்ந்து வந்து தான் கண்டுபிடித்தேன்”, என்றார்.
இயற்கை நமக்கு எப்போதும் உதவக் காத்திருக்கிறது. நமக்கு தான் அதை உணரும் கண்களும், காதுகளும், மனதும் இருப்பதில்லை என்று கூறி தன் கதையை முடித்தான் சுதாகர்.
இப்படியாக அகல விரிந்த கண்களுடன் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்த ஆறு வயது அக்கா மகளிடம் கதையளந்து விட்டுக் கொண்டிருந்தான், காவல் பணித் தேர்வுக்கு தயார் ஆகிக் கொண்டிருந்த வேலை இல்லா பட்டதாரியான மாமன் சுதாகர்.
மாமனின் கதையைக் கேட்டு விட்டு, “போ, மாமா… இந்தக் கதை எனக்குப் புடிக்கல. நீ இந்த தடவையும் எக்ஸாம்ல ஃபெயில் ஆகத்தான் போற” என்று கூறி விட்டு ஓடிவிட்டாள் அவனின் அக்கா மகள் .
“இன்னும் பயிற்சி வேண்டுமோ?” என்று வடிவேலு குரலில் பேசி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான் சுதாகர்.
கதையாசிரியர் : சர்மிளா தேவி
புகைப்படம் : Poranimm Athithawatthee
நன்றி : Pexels