
கனக சுப்புரத்தினம் பாரதிதாசன் ஆனார் – ஏன்?
ஆசிரியர் தே.லட்சுமணன்
பாரதி புத்தகாலயம்
80 பக்கங்கள் / விலை ரூ.70
பாவேந்தர் பாரதிதாசன் எப்படி இந்தப் பெயரை வைத்துக் கொண்டார்? இவர் திராவிடர் கழகத்தில் – சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பிறகும், இதே பெயரில்தான் கடைசி வரையிலும் வாழ்ந்துள்ளாரே அது எப்படி? கனகசுப்புரத்தினம், பாரதியார் மீது அவ்வளவு ஆழமான பற்றை வைத்திருந்தாரா? பாரதியார் இறந்த பிறகு நாட்டில் அரசியல் மாற்றங்கள், சமூக சூழல்கள் எவ்வளவோ ஏற்பட்டன. அந்த மாற்றங்களுக்கு இடையில் இவர் பெயரை மட்டும் மாற்றாமல் பாரதிதாசன் என்ற பெயரிலேயே வாழ்ந்து மறைந்தாரே இது ஒரு வியப்பான விஷயம் அல்லவா?
சுயமரியாதை இயக்கம், பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவுப்பாதை தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு, இனப் பற்று, இந்துமத மறுப்பு, தமிழ் மொழி மீது தீராத்தாகம்- வேகம்- வெறி- இவ்வளவு பேரலைகளிலும் மூழ்கி எழுந்தவர். அவர் பேரனுக்கும் ‘பாரதி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அப்படி பாரதியாரிடம் கனக சுப்புரத்தினம் என்னதான் பெருமை கண்டார் என அறிந்து கொள்ள – அந்த சரித்திரத்தைப் புரிந்து கொள்ள வேட்கை உருவாயிற்று. விவரங்களை அறிந்து கொள்ள முயன்ற போது தான் “பாரதியோடு பத்தாண்டுகள் பாரதிதாசன்” என்ற நூல் டாக்டர் ச. சு. இளங்கோ தொகுத்துள்ள சிறிய நூலில் இருந்து தான் ஏராளமான தகவல்கள் கிடைத்தன என்று ஆசிரியர் தே. இலட்சுமணன் கூறியுள்ளார்.
பாரதியாரைப் பற்றி பலர் கவிதைகள் படைத்துள்ளனர். பல சிறப்பான கவிதைகளும் உண்டு. ஆனாலும் பாரதிதாசன் தீட்டிய “தமிழரின் உயிர்நிகர்” – எனத் தொடங்கும் கவிதைக்கு ஈடாக எந்தக் கவிதையும் நிற்க இயலா.
“தமிழரின் உயிர்நிகர் தமிழ் நிலை தாழ்ந்து
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தரும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்தமிழ் தேர்ப்பாகன்,
அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்கு தந்தை,
குவிக்கும் கவிதைக் குயில், இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு,
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா,
காடு கமழும் கற்பூரச் சொற்கோ,
கற்பனை ஊற்றாம், கவிதையின் புதையல்,
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து,
மண்டும்மதங்கள் அண்டா நெருப்பவன்,
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்,
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்”.
பாரதியார் தான் படைக்கும் பாடல்களுக்கு ராகம் அமைத்து அவரே பாடுவார். இப்படி இசைப்பாடல்கள் எனக் குறிப்பிட்டு எழுதிய பாடல்கள் 76. இசைத் தமிழுக்கே உரிய பாடல்களை பண்ணிசை தழுவிய இயல். தமிழ் பாடலாக படைத்தார். உதாரணமாக:
“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு” என்று துவங்கும் பாடலே “இந்துஸ்தானி தோடி” ராகத்தில் படைத்தார். அதே ராகத்தில் பாடிக்காட்டுவார்.
“உனையே மயல் கொண்டேன் – வள்ளி உவமையி லரியாய் உயிரினு மீனியாய்” எனும் பாடல் “கரகரப் பிரியா” இராகத்தில் தொடுத்துள்ளார். அதே ராகத்தில் பாடி ஆனந்தம் கொள்ளுவார்.
‘கண்ணம்மா என் காதலி’ என்ற தலைப்பிட்ட பாடலில்,
“சுட்டும்விழிச் சுடர்தான் – கண்ணம்மா சூரிய சந்திர ரோ? ” என்று துவங்கும் பாடல் வரிகளை செஞ்சுருட்டி ராகத்தில் அமைத்து, எழுதும்போதே பாடிக்கொண்டே எழுதுவார்.

“ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி?” என்ற பாடலுக்கு “பிலஹரி ராகம்” படைத்தார். பாரதிதாசனிடம் அந்த ராகத்தில் பாடிக்காட்டச் சொல்லுவார். தான் எழுதி அதை பிறர் பாடக் கேட்டு மகிழ்வதுண்டு. தானே எழதி தானே பாடி மகிழ்வதும் உண்டு.
கவிஞர்களுக்கு சமூக அவல நிலைக்கண்டு சினம் வருகிறபோது சில நேரங்களில் அம்பு, வில், வாள் என்று கூட கவிதை வடிக்கிறார்கள்.
“வில்லினை எடடா – கையில்
வில்லினை எடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா”
என்று பாரதியார் ஆவேசப்பட்டார்.
பாரதிதாசனோ,
“கொலைவாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா” எனக் கோபக் கனல் வீசுகிறார்.
பாரதி இளைஞனாக இருந்தபோது காசிக்கு படிக்கச் சென்றார். கிருஷ்ணசிவம் (பாரதியின் மாமா) பாரதியாரை அந்த ஊர் பிரமுகர் ஈஸ்வரலாலுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். “இவன் பிஞ்சு அல்ல, கவிப்பழம்” என்கிறார். ஈஸ்வரலால் “எதில் கவிப்பழம்” என்று கேட்கிறார். அதற்கு கிருஷ்ணசிவம் “தமிழில் கவிப்பழம்” என்கிறார். ஈஸ்வரலாலுக்கு முகம் சுருங்கிப்போகிறது, ஈஸ்வரலால் கேட்கிறார், “தமிழ் என்று ஒரு மொழி உண்டா?”, சமஸ்கிருதம் ஒன்று உண்டு. அதுதான் மொழி. சமஸ்கிருதம் பெற்ற பிள்ளையை (தமிழை) சமஸ்கிருதம் என்று சொன்னால் என்ன நியாயம் என்று கேட்கிறார். அதற்கு பாரதி மறு கேள்வி தொடுக்கிறார். ” சமஸ்கிருதம் ஒரு மொழி என்று சொல்லும் தகுதி அதற்கு என்ன இருக்கிறது? தமிழ் பேசும் வட்டாரத்தில் கோயிலில் குறிப்பிட்ட நேரங்களில் சிலர் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். திருமணங்களில், திருவிழா நாட்களில் வேதபாராயணம் நடக்கிறது, பிறகு வாழ்க்கையில் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள்.
ஆரியர் தாய்மொழி சமஸ்கிருதம் என்றால் அவர்கள் அதில் அல்லவா பேசியிருக்க வேண்டும்? ஏன் அவர்கள் தாய்மொழியில் பேசவில்லை? சமஸ்கிருதம் என்பது பல மொழி சொற்களைக் கொண்டு திருத்தி அமைந்தது என்று சொல்ல வேண்டும். ஆனால் கல்தோன்றா காலத்தே ஒரு மொழி வந்தது என்றால் அது தமிழ்மொழிதான்.
தனி மொழி என்பதான ஒன்றைக் (தமிழ்) கண்டால் அதைக் கொல்ல வேண்டும் என்பதில் காட்டப்படும் ஊக்கம் சமஸ்கிருதத்தை உயிர்ப்பிப்பதில் ஏன் காட்டப்படவில்லை என்று கேட்கிறார் பாரதி. இது ஈஸ்வரலாலுக்கு பிடிக்கவில்லை. உடனே அவர் கேட்டது,
ஈஸ்வரலால்: தமிழில் நூற்கள் உண்டா? உண்டு என்றால் தனித் தமிழா?
பாரதி: ஆம். தமிழில் ஏராளமான நூற்கள் இருக்கின்றன. அவை தனித் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளன.
ஈஸ்வரலால்: அப்படி நான் ஒன்றும் கேள்விப்படவில்லை. தமிழ் நூற்களில் சில தமிழ் சொற்கள் இருந்தால் அவை சமஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான்.
ஆயினும் நீங்கள் தனித் தமிழில் பத்து வரிகள் எழுதி வையுங்கள், நான் வந்து பார்க்கிறேன் என்றார்.
பாரதி: ஏன் நாளை எழுதவேண்டும்? இப்பொழுதே எழுதித்தருகிறேன் என்றார். விரைந்து 40 வரிகள் எழுதுகிறார். அதில் பதினைந்து (15) வரிகள் இவை:
காற்றென்று சொல்வதோ ராற்றல் மற்றுக்

கனலென்று சொல்வதோ ராற்றல்
மாற்றமி லாதோர் விண்ணும் இம்
மண்ணும் புனலுமோர் ஆற்றல்
போற்றுமிவ் வாற்றல்கள் எல்லாம் இங்கு
தோன்றிடச் செய்தது யாதோ
ஆற்றலுக் காற்றலும் ஆகிஅதற்
கப்பாலும் உள்ளபே ராற்றல்
ஒன்றெனக் கண்டவர் மேலோர், அதில்
ஒன்பது சொல்பவர் மூடர்
என்றும் எங்கிமிருந் தாலும் அதில்
முன்னதால் என்பதோர் ஆழி
முத்துக் குளித்திடும் போதில்
தன்திறம் எனுமொரு மேட்டில் நன்கு
தட்டுப் படும்பே ராற்றல்.
இந்த விவரத்தை பாரதியின் மனைவியோடு (பாரதி இறந்துவிட்ட பிறகு) பேசிக்கொண்டிருந்தபோது, தன்னிடம் சொன்னதாக பாரதிதாசன் பதிவு செய்துள்ளார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்தியவர் பாண்டிதுரை என்பவர். இவர் தமிழ்நாட்டைப் பற்றி எல்லோரும் பாடக்கூடிய மெட்டில் பாடல் எழுதினால் பரிசு தருவதாக விளம்பரம் செய்திருந்தார்.
பாரதியாரை இதற்காக பாட்டு எழுத வேண்டி நானும், வாத்தியார் சுப்பிரமணியனும் கேட்டோம். ஆனால் பாரதி எழுத மறுத்தார்.
நாம் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு எதிரிகள். பாண்டித்துரை போன்றவர்களுக்கு நாம் எழுதும் கவிதைகள் பிடிக்காது, இந்நிலையில் நம் பாடலை அவர் ஏற்பது என்பது ஐயம். நாம் அறிந்தே எழுதி அவமதிப்பை பெறுவதில் என்ன பயன்? என்று கேட்டார்.
நீங்கள் அவருக்கு அனுப்பாவிட்டாலும் எங்களிடம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டோம். எழுதினார். அப்போது பிறந்ததுதான் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்று தொடங்கும் பாட்டு!
அந்தப் பாட்டைப் படித்துவிட்டு நான் அவரிடம் கேட்டேன்.
‘நாவலந்தீவு ஆரியர் நாடு என்கிறீர். பதில் கேட்டால் விடையில்லை. இப்போது தமிழ்நாட்டை எங்கள் தந்தை நாடு என்கிறீர். தமிழ்நாட்டில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் மட்டும் இருந்ததாகச் சொல்லுகிறீர். ஆனால் இப்போது சிலப்பதிகாரம் என்றும், வள்ளுவர் என்றும் சொல்லுகிறீர், என்ன பரிசுக்காக எழுதினீரா? இப்படி கேட்டது பாரதிதாசன்.
அதற்கு பாரதியார் “ஆம்” என்று சொல்லி உண்மையை ஒப்பினார்.
நாம் இங்கே பார்க்கவேண்டியது “செந்தமிழ் நாடு” என்று தலைப்புக் கொடுத்து, பாரதியார் பாடிய இந்தப் பாட்டுத்தான் தமிழ் மக்களால் அதிகமானமுறை பாடிய பாட்டு, தமிழர்கள் அனைவரையும் கவர்ந்த பாட்டு.
“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட நாடுதான் தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
என்றோர் மணி ஆரம்படைத்த நாடுதான் தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த நாடுதான்”
இது நூற்றுக்கு நூறு உண்மை. பாரதியாரின் வேட்கை இந்திய மக்கள், தமிழ் மக்கள் சுதந்திரத்துக்காக எந்தத் தியாகமும் செய்யக்கூடிய, அச்சமின்றி வாழக்கூடிய மேலும் உடல் ரீதியாக பலமாகவும், வீரர்களாகவும் வாழ வேண்டும் என்பது அவர் அவா என்று கூறுகிறார் பாரதிதாசன்.
ஒருமுறை பாரதியின் மனைவி செல்லம்மா, ஊர் போயிருந்தபோது, இரவில் பாரதிதாசன் பாரதி வீட்டில் பாரதியுடன் அவருக்கு உதவியாகவும், துணையாகவும் தங்கினார்.
பாரதி, அன்றைய கனக சுப்புரத்தினத்தை பால் காய்ச்சித் தரும்படி கூறினார். சுப்புரத்தினமும் அடுப்பருகே சென்று, சற்று நேரம் நிதானித்த பிறகு அடுப்பை பற்றவைத்தார். அடுப்பை பற்றவைக்கத் தெரியவில்லை, நேரம் கழிந்தது, பாரதியே எழுந்து வந்து சுப்புரத்தினத்தின் சங்கடத்தைப் பார்த்துவிட்டு, அவருக்கு உதவிட முயன்றார். பாரதிக்கும் அடுப்பை எரிக்கத் தெரியவில்லை. இருவரும் பெரு முயற்சி செய்து எப்படியோ அடுப்பை எரித்து பாலைக் காய்ச்சினார்கள்.
அடுப்பை எரிக்கத் தெரியாத தங்களின் திறமைக் குறைவை எண்ணி பாரதி சொன்னார்.
“பெண்கள் வேலைகளை நம்மால் செய்ய இயலாது”. காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்கள். இதற்கிடையில் நாம் அவர்களை அடிக்கிறோம். நானும் செல்லம்மாவை அடித்திருக்கிறேன், அதட்டியிருக்கிறேன். அதெல்லாம் கூடாது. நாமும் உழைக்கிறோம் , அவர்களும் உழைக்கிறார்கள், குடும்பம் நடக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது? நாம் இவற்றை எண்ணிப்பார்ப்பதில்லை. பெண்களுக்கு ஏன் என்று கேட்கக்கூட வாய் இல்லை. அவர்கள் நிலை அப்படி ” என்று பாரதி பேசுகிறார். அவரின் மனதில் தோன்றிய கவிதை;
“கண்கள் இரண்டிருந்தும் காணும்
திறமையற்ற பெண்களின் கூட்டமடி கிளியே”
“பெண்கள் வாழ்கென்று கூத்திடுவோம்
பெண்கள் வெல்கென்று கூத்திடுவோம்”
“தன்மை, இன்பநற் புண்ணியம் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும்
அன்பு வாழ்கென் றமைதிலி லாடுவோம்
ஆசைக் காதலை கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாமென்று போற்றிடுவோம்
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா.
மானஞ் சேர்க்கு மனைவியின் வார்த்தைகள்
கலியழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோர்த்து களித்துநின் றாடுவோம்”.
இந்தக் கவிதையின் விரிவான விளக்கம் அடங்கிய இந்தத் தொகுப்பு, ஏராளமான தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
இந்த நூலில் கனக சுப்புரத்தினம் பாரதிதாசனாக பெயர் வைத்துக் கொள்ள வேண்டிய ஆதார காரணங்கள் இவைகள் தான்.
கட்டுரையாளர் : பாரதியின் கண்ணம்மா சரண்யா