கருப்பு தங்கம் காமராஜர்

____________________________________________

சிறுவயது சுவாரசியமான சம்பவங்கள் …

____________________________________________

நற்பண்புகள் கொண்டவராக…

____________________________________________

காமராஜரின் தாத்தா சுலோச்சனா நாடார் தான் அப்போது விருதுபட்டியில் நாட்டாமைக்காரர். பல சமயங்களில் தாத்தா பஞ்சாயத்து கூட்டங்களுக்கு தன் பெயரன் காமராஜரையும் அழைத்துச் செல்வார். அங்கு செல்லும் காமராஜ், தான் நாட்டாமைக்காரரின் பெயரன் என்ற உரிமையில் எந்த குறும்புகளையும் செய்ததில்லை. ஒரு ஓரமாக அமர்ந்தபடி தாத்தா கூறும் தீர்ப்புகளை கவனித்து வருவார்.

காமராஜின் இந்த பண்பை அப்போதே பலர் பாராட்டினார்கள். தன் தாத்தாவாக இருந்தாலும் சுலோச்சனா நாடார், அப் பகுதி மக்களுக்கு தலைவர். அவரிடம் தான் அதிக உரிமை எடுத்து விளையாடினால் அது அங்கு கூடியுள்ள மக்களுக்கு தொல்லையாக இருக்கும் என்ற நற்பண்பு காமராஜுக்கு சிறுவயதிலேயே குடி கொண்டிருந்தது.பண்புள்ள பள்ளி மாணவனாக…. காமராஜுக்கு 5 வயது ஆன போது அவரை பள்ளிக்கு அமர்த்தினார்கள்.

“பள்ளிக்கு அமர்த்துதல்” என்பது விஜயதசமி அன்று நடைபெறும். காமராஜரை பள்ளிக்கு அமர்த்தும் நிகழ்ச்சியை ஒரு சிறு விழா போலவே அவரது தாயும் தந்தையும் கொண்டாடினார்கள்.

காமராஜ் படித்த பள்ளியில் ஆண்டு தோறும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவார்கள். ஒவ்வொரு மாணவனிடமும் காசு பெற்று பூஜை நடத்தி பிரசாதம் தருவார்கள். அதன்படி, அந்த ஆண்டு எல்லா மாணவர்களிடமும் ஓரணா வசூலிக்கப்பட்டது. காமராஜ் ஓரணா தந்தார். பூஜை முடிந்தது ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பிரசாதம் தந்தார். பிரசாதம் பெற்றுக் கொள்ள மாணவர்கள் முண்டியடித்து சென்றனர். காமராஜ் அவ்வாறு செல்லவில்லை. அவர் பின்னாலேயே நின்றுவிட்டார். இறுதியாக காமராஜூக்கு குறைவான பிரசாதம் கிடைத்தது. அதை பெற்றுக்கொண்ட அவர் வீட்டிற்கு வந்தார்.

காமராஜ் கையில் பிரசாதம் மிகக் குறைவாக இருந்ததை கண்ட அவரது பாட்டி பார்வதி அம்மாள் ,”எல்லாப் பிள்ளைகளையும் போல நீயும் ஓரணா தானே கொடுத்தாய், மற்ற பிள்ளைகள் எல்லாம் கை நிறைய பிரசாதம் வாங்கி வந்திருக்கும்போது, நீ மட்டும் ஏன் குறைவாக வாங்கி வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு காமராஜ், “எல்லா மாணவர்களிடமும் ஒரே மாதிரி காசு வாங்கினோம். அதனால் எல்லோருக்கும் சமமாக பிரசாதம் தர வேண்டும்” என்ற பொறுப்பு ஆசிரியருக்கு இருக்க வேண்டும். அவர் மாணவர்களை வரிசையில் நிறுத்தி பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.” என்று கூறினார்.

இதன் மூலம் காமராஜர் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பவர் என உணர்ந்து கொள்ளலாம். அறிவார்ந்த பண்பு கொண்டவராக…

விருதுபட்டியில் உள்ள கோயிலில் யானை ஒன்று இருந்தது. யானைப்பாகனின் நண்பர்களில் காமராஜரும் ஒருவர். பல நேரங்களில் அந்த யானைப்பாகனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். யானைக்கு அடிக்கடி பழங்கள் வாங்கித் தருவார். அதனால் யானை காமராசரை நன்றாக அறிந்து வைத்திருந்தது. வழக்கமாக யானையை வெளியே அழைத்து வரும்போது பாகன் யானையின் கழுத்தில் ஒரு சங்கிலியைக் கட்டி அழைத்து வருவான். ஆனால், அன்று சங்கிலியை கட்ட மறந்து விட்டான்.

எனவே, யானை பாகனுக்கு கட்டுப்படாமல் தெருவில் ஓடத் தொடங்கியது. தெருவில் சென்றவர்கள் பயந்து போய் சிதறி ஓடினர்கள். ஆனால், காமராசர் மட்டும் ஓடவில்லை. ஏன்? இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? என்று யோசித்தார். யானையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை அவர் அறிந்தார். எனவே காமராசர் நேராக கோயிலுக்கு ஓடினார். யானையின் கழுத்துச் சங்கிலியை எடுத்துக் கொண்டு யானை இருந்த வீதிக்கு வந்தார். அந்த சங்கிலியை யானையின் முன்னால் எறிந்தார். சங்கிலியை கண்டதும் யானை அப்படியே நின்றுவிட்டது.

பாகனும் தான் யானையின் கழுத்தில் சங்கிலியை கட்ட மறந்ததை உணர்ந்து காமராசருக்கு நன்றி சொன்னார். தெருவில் இருந்தவர்களும் காமராசரின் சமயோஜித புத்தியை கண்டு அவரைப் பாராட்டினார்கள்.

பிற்காலத்தில் அரசியலில் நுழைந்த பின் காமராசர் பல இக்கட்டான நேரங்களில் சமயோசிதமாக நடந்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தார். இந்த சமயோஜித புத்தி என்பது காமராசருக்கு சிறுவயதிலேயே அமைந்திருந்தது என்பதை நாம் இந்த சம்பவத்தின் மூலம் அறியலாம்.

நாம் இன்றும் கருப்பு தங்கம் காமராஜர் பற்றி பேசவும், எழுதவும் அவரின் நற்பண்புகளால் நியாயமான முறையில் ஆட்சி செய்த விதமும், பல்வேறு திட்டங்களை அறிவார்ந்த திறனுடன் செயல்படுத்திய முறையுமே காரணமாகும்.

கட்டுரையாளர் : அருணாகுமாரி சாமிதுரை

புகைப்படம் : Silai.Com