காதல் மேகம்

பருவப் பெண்ணின் முகப்பரு போல குண்டும் குழியுமான சாலையில் வேகமாக வந்தாள் ஹாமினி. இன்று சம்பள நாள். ‘லேட்டா போனா ஆபிஸ்ல  மேனேஜர் திட்டுவார்’ என நினைத்தபடி பேருந்து நிறுத்தம் அருகில் வரும் போது பேருந்து போய்விட்டது. தீபா போன் பண்ணி, “ஏன் பஸ் மிஸ் பண்ணுன? நீ வர்றதப் பாத்தேன். சிடுமூஞ்சி பஸ் ஓட்டுது. நிப்பாட்டச் சொன்னா என்னத்  திட்டுவான்”

“சரி  எப்படியாவது வந்துடுறேன்”  என்று சொன்னபடி திரும்பிப் பார்த்தாள்.

 கார்த்திக்  இவளைப் பார்க்க நீண்ட நேரமாக நின்றது போல இருந்தது. சரி இவனிடம் உதவி கேப்போம்.  அதை வைத்து  இவன்  காதலுக்கு சரி எனச் சொல்லி விட்டோம் என நினைத்துக் கொண்டால்? என கேள்வியுடன்  நகத்தைக் கடித்தபடி போன் எடுத்து யோசித்து கொண்டு நின்றாள்.

கார்த்திக் ஏதோ பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான். காலை, மாலை பேருந்து நிறுத்தத்தில் இவள் அவனைப் பார்த்திருக்கிறாள். ஒரு முறை தீபா போன் பஸ்ஸில் தொலைந்து போன போது அதை இவன் தந்த போது பார்த்த நினைவு. அதில் இருந்து அவன் நம்மைப்  பார்த்து கொண்டு இருக்கிறான்.

புதிதாகக் கட்டிக் கொண்டு இருக்கும் பேருந்து நிறுத்தம் நகர்ப்பகுதிக்கும் கிராம பகுதிக்கும் இடைப்பட்ட ஊர். பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருக்காது.  கட்டிடப்பணி நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் பேருந்து அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக நிற்கிறது.

‘இவனிடம் உதவி கேட்போம். அப்படியே இனி என் பின் வர வேண்டாம் எனவும் சொல்லிவிடலாம்’ என நினைத்து அவனிடம் பேசப் போனாள். 

அங்கு ஆதரவற்று ரோட்டில் இருக்கும் முதியோர்க்கு உணவு வாங்கித் தந்தவன் திரும்பிப் பார்த்தான். ஹாமினி இவனிடம் பேச நிற்பதைப் பார்த்ததும் சற்றுப் பதட்டமானான்.

“பஸ் போச்சு என்ன என் ஆபிஸ்ல விட முடியுமா?” 

“ம் சரி வாங்க” 

பைக் பறக்க ஆரம்பித்தது. மெதுவா௧ச் சொன்னாள், ‘வேகத்தடையில் கவனம்’ என. முன்பக்கம் ஒட்டியபடி நகர்ந்து கொண்டான் கார்த்திக்.


ஹாமினி பேச ஆரம்பித்தாள்.

“என் பின்னாடி ஏன் சுத்துற? உன்னைப் பாத்தா வேலை வெட்டி இல்லாதது போலத் தெரியலை. இருக்கும் வேலையில் என்னைப் பார்ப்பது ஒரு வேலை போல பார்ப்ப போல. எனக்கு இது போல என் பின்னாடி சுற்றுவது பிடிக்கலை. உன் வேலைய மட்டும் பாரு. இப்போ கூட ஒரு உதவியா தான் கேட்டேன், உன் மீது உள்ள நம்பிக்கையில். இதைக் காதலின் அடுத்த கட்டம் எனக் கற்பனை பண்ணிட்டு லூசு மாதிரி பின்னாடி வராத” எனச் சொல்லி விட்டு இறங்கிப்  போனாள். 

” காதல் அன்பு கலந்த நம்பிக்கை மட்டுமே” என்றான் அவன்.

திரும்பிப் பார்த்தவள் சிரித்தபடி, “தைரியம் இருந்தா என் கண்ணப் பாத்து உன் காதல சொல்லு” என்று  சொல்லிய படி அலுவலகம் உள்ளே சென்றாள்.

*****

அலுவலகத்தில் மாலை நேரம்.தேநீர் அருந்திய படி, “தீபா அக்கா.. ஒரு விசயம்”

“என்ன.. அக்கானு சொல்லுற? ஏதும் முக்கியமான விசயம் போல”

“ஆமா. காலையில் கார்த்திக்கிடம் வண்டியில் வரும் போது..” என பேசியதைச் சொன்னாள் ஹாமினி.

சிரித்தபடி  தீபா கேட்டாள்,” உன்னைப் பார்க்க அவன் பேருந்து நிலையத்துக்கு வரல. அவன் அங்கு பிச்சை எடுக்கும் வயதானவர்க்கு காலை, இரவு உணவு வாங்கித் தருவான். ஒரு ஐயா இவன் மீது ரொம்பப் பாசமாக இருப்பார். பார்த்து இருப்ப. நம்ம பஸ்க்கு நிற்கும் போது ஓரமாக படுத்து இருப்பார்” என அவர் அடையாளத்தைச் சொன்னபடி எழுந்து போகப் போன தீபாவின் கையைப் பிடித்து, “அக்கா.. அவன் என்னைக் காதல் செய்றான் போல. ‘தைரியம் இருந்தா என் கண்ணப் பார்த்து சொல்லு’ னு சொல்லிட்டேன். ஏன் அவனிடம் அப்படி சொன்னேன்னு தெரியலை அக்கா” என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.  

“அவன் நல்ல பையன் தான். உனக்கே தெரியாமல் அவனைப் பிடிச்சுப் போச்சு. சில நாள் முன் அவனைப் பற்றி நீ பேசுன.  நினைவு இருக்கா? ஏதோ படத்தில் ஹீரோ ராமன் வேசம் போட்டு வந்தது நினைவு வருது. ராமன் மாதிரி கணவன் வேணும்னு சொன்ன. அதன் பிறகு நீ அவனை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்த. அத அவனும் பார்த்தான். இதை நான் கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன். நல்லவனா, கெட்டவனானு யோசித்து ஒன்றும் இல்லை. அவன் அன்புதான் முக்கியம். ராமன், சீதை மீது அதிகமா அன்பா இருக்கலாம். சந்தேகம் அவன் காதலை அழித்து விட்டது. ராவணன் கெட்டவன்னு சொல்லுறாங்க. சீதை மீது அதிகமாக அன்பு செய்தான், அவள் அன்பு பெற. அது சரியா தவறானு சொல்லல.  ஆனால் பெண்மையை மதித்தான். இங்கு உருவத்தை வைத்து நல்லவன், கெட்டவன் இல்லை. அன்பு செலுத்துவது தான். சரி முடிவு நீயே எடு. என் நிலை நீ அறிந்தது தான். காதல் செய்த பையன வீட்டில் திருமணம் செய்ய விடல. அவரசமாக வீட்டில் ஏற்பாடு செய்த கல்யாணம்.  இப்போ இலங்கை போன பிறகு ராமன் உடன் சேர்ந்து வாழும் சீதை மாதிரி தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்” எனக் கண்ணீர் துடைத்துக் கொண்டு தனது இருக்கை நோக்கி நடந்தாள் தீபா.

இரண்டு நாள் பிறகு பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தாள் தீபா.
எதிரில் இருந்த முதியவர்க்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு ஹாமினி  தீபாவிடம் உட்கார்ந்தாள்.

“என்ன ஆச்சு உனக்கு? ஏன் இந்த மாற்றம்? கார்த்திக் காதல சொல்லிட்டானா? அவன் வரலயா?உன்னை சாப்பாடு வாங்கித் தரச் சொன்னானா அந்த ஐயாக்கு?” எனக் கேட்டாள் தீபா.

“இல்லை அக்கா. அவனப் பார்த்து ரெண்டு நாள் ஆச்சு. எங்க போனான், என்ன ஆச்சுனே தெரியலை.  ஐயாவிடம் நேற்று கேட்டேன். ஏதும் பதில் சொல்லவில்லை. எனக்கே ஏன்னு தெரியலை, அவனைப் பிடிச்சுப் போச்சு. மனசு தேடுது அவன் முகத்தை. நான் ஏன் என் முகம் பார்த்து உன் காதல் சொல்னு சொன்னேன்னு  தெரியலை. அவனைப் பிடித்துதான் அப்படி சொன்னேன் போல. ஆனால் அப்பா, அம்மாவ நினைத்தால் பயமா இருக்கு,” ஹாமினி கண் கலங்கிய படி தீபா கையைப் பற்றிக்கொண்டு சொன்னாள்.

தீபா சற்று நேரத்திற்குப் பிறகு, “எனக்கும் இப்படித்தான். இதே பேருந்து நிலையத்தில் தோன்றிய காதல். இருவரும் வேற வேற கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம். இருவரும் சந்திக்குமிடம் இந்தப் பேருந்து நிலையம் தான். அதிகமான நேரம் இருவரும் பேச, பார்க்க வாய்ப்பு இருக்காது. ஆனால் எங்களுக்கு அன்பு அதிகமாக இருந்தது. ஒரு நாள் கல்லூரி போகாமல் அவனுடன் படம் பார்க்கப் போனேன். அது எப்படியோ வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிந்து திரையரங்கில் வந்து அடித்து இழுத்து வந்தார்கள். இரண்டு நாள் கழித்து ஒரு தோழி மூலம் இந்தப் பேருந்து நிலையத்திற்கு இரவு வந்து விடு, இருவரும் ஊரை விட்டு ஓடிப்போகலாம் எனத் தகவல் அனுப்பி இருந்தான். நானும் வீட்டுக்குத் தெரியாமல் வரப் போகும் போது  மாட்டிக் கொண்டேன்.  மண்ணெண்ணெய் கேன் உடன் அம்மா அப்பா இருவரும் மிரட்டினார்கள்  கொளுத்திக் கொள்வோம் என. அவர்களுக்கா௧ என் காதலைக் கொளுத்திக் கொண்டுவிட்டேன்.

மனதில் இன்றும் அது என் மனதில் காயமடைந்துதான் இருக்கு. காலம் அதற்கு மருந்து தரல. மேலும் காயம்தான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கு. கணவரின் சந்தேக புத்தியால் இன்னும் என் பழைய காதலன் உடன் பேசிக்கொண்டு இருக்கேன் என சண்டைதான். திரையரங்கில் பார்த்ததுதான் கடைசி. அவனை இது வரை நான் பார்க்கல. அவன் கூடப் போயிருந்தா சந்தோசமா வாழ்க்கை இருந்து இருக்கும். இவங்க பெருமை, கௌரவம் எல்லாம் நிலம் மீதும் பெண்கள் மீதும்தான். யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அப்படி என்னதான் இருக்கோ? பெண்கள் மனதில் என்ன இருக்கும்னு  பார்க்க மாட்டாங்க. என் இஷ்டப்படி நான் வாழவே இல்லை. இப்படிப்பட்ட பெண் பிறப்பு தேவையா என நிறைய யோசித்தது உண்டு. தற்கொலை வரை யோசித்தேன். குழந்தை இருக்கே என அமைதியாக இருப்பேன். இவ்வளவு பிரச்சனை சொல்லுற, எப்படி குழந்தைனு நினைக்கிற. எந்தப் பெண் சம்மதத்தோட எல்லாம் நடக்குது? அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற  ஒரு பொருள். அவ்வளவுதான். இதில் கொடுமை, குழந்தை அவனுக்குப் பிறந்ததானு சண்டை கூட வந்தது உண்டு” என கண்ணீரைத் துடைத்தபடி தீபா பேசினாள்.

“எனக்கு இதுதான் வாழ்க்கை. என் பயணம் இப்படி தான். உன் வாழ்க்கைய நீ முடிவு பண்ணு. மனசுல ஒருத்தன நினைச்சுட்டு வேற ஒரு ஆண் உடன் வாழும் வாழ்க்கை  வேண்டாம். பிடிச்ச ஆணுடன் வாழு. எது தப்பு எது  சரினு வாழ்ந்தாதான் தெரியும். பசங்க தேடிப் போய் காதல் சொல்லும் போதே நல்லா பாத்துக்கும் போது, தேடிப் போய் காதல் சொல்லும் பெண்களை தேவதை மாதிரி பாத்துக்குவாங்க. சரியா? எத்தனை நாள் பசங்க காதல சொல்லுவாங்க? நீ சொல்லு. உன் மனசுல இருக்கறத சொல்லு. எனக்கு பஸ் வந்துருச்சு. நான் போறேன். நீ உன் பஸ்ல போ,” பேசியபடி நடந்தாள் தீபா.

ஹாமினி தீபா முகம் பார்த்தபடி இவ்வளவு சோகத்தையும் இந்தச் சிரிப்பில் எப்படி அடைத்து வைத்து இருந்தாள் என ஆச்சரியத்துடன்  பார்த்து சிரித்தபடி கை அசைத்தாள்.

கார்த்திக் பற்றி யாரிடம் கேக்கலாம் என யோசித்தபடி நடந்தாள். முதியவரைப் பார்த்த படி, “நாளை வரேன்” என்று சொன்னாள். அவர் சிறு புன்னகையுடன்  மறைவான இடத்தில் நிற்கச் சொன்னார். புரியாமல் மறைவான இடத்தில் நின்றாள். 

கார்த்திக் முதியவர்க்கு சாப்பாடு கொடுத்த போது ,”அட இன்று வேற யாரோ வாங்கித்  தந்தாங்களா? சரி.இதை அப்புறம் சாப்பிடுங்க. மனசு சரியில்லை ஐயா. அவ கண்ணப் பார்த்து காதல சொல்லுனு சொன்னா. அவளைப் பார்த்தா மனசு துடிக்குது. மனசில் காதல் வந்ததும் எதிர்காலக் கனவு வருது. அவள நல்லா ராணி மாதிரி பார்த்துக்கணும். அவ வீட்டில் அவள எப்படி பார்த்து இருப்பாங்களோ அதை விட  ஒரு படி நல்லா பார்த்துக்கணும்னு தோணுது. எப்படியும்  3 நாள்ல மேனேஜர் பதவி உயர்வு வரும்.  அப்போ அவளிடம் கெத்தா சொல்லணும் என் காதல” என சொல்லியபடி திரும்பிப் பார்த்தான்.

எதிரில் ஹாமினி  கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். முதியவர் சிரித்தபடி ,”காதல் சொல்ல எந்தத் தகுதியும் வேண்டாம். நல்ல மனசு இருந்தாப் போதும். இந்தப் பெண்ண விட உனக்கு வேற யாரும் நல்ல பொருத்தம் இல்லை” என்று சிரிப்புடன் முடித்தார்.


கார்த்திக்கை இறுக்க அணைத்தபடி ஹாமினி சிரித்தாள். கடைசி வரை என் கண் பார்த்து காதலை சொல்லலடா நீ..

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்                    
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

திருக்குறள் சொல்லிச் சிரித்தான் கார்த்திக்.

கதையாசிரியர் : பிரபாகரன் மாரிமுத்து