
பிழைபொறுத்தல்
———————————–
கவிதை சமைக்கையிலே
சிந்தை கலைப்பதற்கும்..
நாள்காட்டி ஓரங்களில்
நாய்க்குட்டி வரைவதற்கும்..
கூட்டாஞ்சோறாக்க
தீப்பெட்டி கேட்பதற்கும்..
காகிதப் பைகளிலே
காற்றூதி வெடிப்பதற்கும்..
அழிப்பான் தேடப்போய்
அலமாரி கலைப்பதற்கும்..
கடிந்து கொள்ளப்படும்
குழந்தைகள் எவரும்
காகிதக் கப்பல்கள்
கவிழும் வேளைகளில்
மறந்தும் பழிப்பதில்லை
மழையை.
********
எதுகை தேடுங்கள்
————————————-
கருவுற்றிருக்கும் மயிலிறகு..
கசங்கியதோர் காகிதக்கப்பல்..
கடற்கரையில் கண்டெடுத்த
நட்சத்திர மீன்கூடு..
அழிப்பானின் மூலப்பொருளாய்
அறியப்படும் பென்சில்சீவல்..
மணலில் புரண்டெழுந்து
பேய்முடியீனும் காந்தத்துண்டு..
செந்நிறக் கிளிஞ்சலென
குல்மொஹர் இதழொன்று..
காணும் பொங்கலன்று
தாத்தா தந்த பத்துரூபாய்..
விழுகையில் உடைந்ததும்
உடையாது விழுந்ததுமாய்
முன்வரிசைப் பற்களிரண்டு..
மேசைக்கரண்டியினின்று
இடம்பெயராத எலுமிச்சைக்கு
பள்ளியில் தந்த பதக்கமொன்று..
யாவுமிருக்கும் பென்சில் பெட்டியைப்
பற்கள் கொண்டு நான்
பாங்காய்த் திறப்பதைப்
பரவசமாய்ச் சிலாகித்து
எழுதித் தீர்க்கும் நீங்கள்..
விலையுயர்ந்த மிட்டாயின்
வண்ணம் மங்கிய காகிதத்தை
மறவாமல் எழுதுங்கள்- அத்துடன்..
தனித்தென்னைத்
தின்னச் செய்கையில்
தாயின் கால்கள் பின்நின்று
வேலைக்காரியின் பிள்ளை
விழிமுனையில் சிந்திய
ஏக்கப் பார்வைக்கும்
எதுகை தேடுங்கள்..
வளர்ந்துவிட்ட உங்களுக்கு
வார்த்தை கிடைக்காமலா
போய்விடும்??
*********
கண்
———-
கைப்பேசி வரைபடத்தில்
பச்சையும் நீலமுமாய்
சுழன்றது பெரும்புயலின் நகர்வு.
“மயில் தோகை மாதிரி
இருக்குதும்மா” என்றாள்
ஆறு வயது தங்கம்மா.
புயலின் கண்ணில் நின்றபடி
சற்றுநேரம்
மயிலின் கண்
கண்டிருந்தோம்.
பொதுமைய வட்டங்கள்
———————————————-
மெதுமெதுவாய்
மிக உன்னிப்பாய்
ஒன்றினுள் மற்றொன்றாய்
உடைந்த வட்டங்களுக்குள்
சின்னஞ்சிறு பந்துகளைச்
செலுத்தி விளையாடும்
அற்புதத் தருணங்களில்
எவர் அழைத்தாலும்
எளிதில் கலைவதில்லை அவள்…..
திடுமெனத் தெருநோக்கி
விரைபவளைத் தொடர்கிறேன்..
சில ஆயிரம் பந்துகளைத்
தேங்கிய நீரிலெறிந்து
அதிவிரைவாய்
மிக எளிதாய்
ஒன்றைச் சுற்றி மற்றொன்றாய்
சில லட்சம் வட்டங்கள் வரைந்து
இம்முறை அவளை
அழைத்திருப்பது மழை.
********
இடமாற்றம்
————————
உணவு இடைவேளையில்
ஒன்றாய்ச் சாப்பிடுகையில்
மஞ்சளாடைச் சிறுமியின் கிண்ணத்து
மாதுளை முத்துக்களும்
சிவப்பு ஆடை அணிந்தவளின்
சோளக்கதிர் முத்துக்களும்
உருவம் ஒத்திருப்பதாய்த்
தமக்குள் பேசிக்கொண்டனர்..
அருகிலிருக்கும் அம்மாக்களின்
அனுமதி பெற்று
இடம் மாற்றிக் கொண்டனர் கிண்ணங்களை.
எவரையும் கேட்காமல்
இடம் மாறிக் கொண்டன
அம்மாக்களின் புன்னகைகள்.
******
கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை…
கண்ணெதிரே காட்சிகளை நிறுத்தும் வல்லமை வார்த்தைகளுக்கும் உண்டு என்பதை உணர வைத்த தருணம்…
சிறப்பு…
மிகச் சிறப்பான கவிதைகள்…