சுட்ட நெருப்பு

மாலை வானில் மகிழ்ந்தெங்கும்

பாடித் திரியும் பறவைகாள்!!

பேராசை வெறி பிடித்து பேயாட்டம் போட்ட

பெருங்கூட்டம் ஒன்றின்று

வான்பார்த்து வாய் பிளந்து

பெருமூச்செடுத்து விடவும் இயலாது

வெதும்பி நிற்குதிங்கே, காணீரோ!!!

கருணை தேவதையின்

கருக்கொண்ட உருவில் எல்லாம்

உயர்வு தாழ்வு உரத்துப் பேசினோம்.

உயர்திணை என்றோம்;

ஆறறிவு உண்டென்று

அகம்பாவம் கொண்டோம்

பிண்டத்தைப் பேணாது

அண்டத்தை ஆய்ந்திருந்தோம்.

மருத்துவத்தை வணிகத்திற்கு

விற்று விட்டு

மரணக்கருவிகளை வாங்கிக்

குவித்தோம்.

தொற்றுநோயெல்லாம் எம் அறிவிடம்

தோற்றோடிவிட்டதாய் திமிறித்

திரிந்தோம்.

எம் அழிவைக் கூட

ஆடம்பரமாய்க் கற்பனை செய்தோம்.

எரிமலை வெடித்து

ஆழிப்பேரலை சூழ்ந்து

நிலம் பிளந்து தான் எம் அழிவு

என்பதெமது ஏகோபித்த எண்ணம்.

விந்தணுவுக்கு வேட்டு வைக்கும்

வெற்றுத் துகள் போதும்

வம்சத்தை வேரறுத்து

மானுட இனத்தை

மண்ணிலிருந்து துடைத்தெறிய என்று

சினம் கொண்ட தேவதை

சீற்றம் கொண்டெறிந்தாள் .

சின்னஞ்சிறு தீப்பொறியொன்றை…

சுட்டுக் கொண்டோம்

சுட்ட நெருப்பிலிருந்து …

பாடம் கற்றால் பிழைத்திருப்போம்.

படைப்பாளர் : கவிஞர்.மருத்துவர் சர்மிளா தேவி

Photo by Yaroslav Danylchenko from Pexels