சுட்ட நெருப்பு…

வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள்…

தப்பிய பருவமழையில் கதிரவன் கக்கிய சுட்ட நெருப்பில் கருகின.

சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள்…
சரளைக் கல்லையும் மெல்லுகின்றன…

இடையிடையே கானலையும் குடிக்கும் சகிக்கவியலா சத்தம்….

கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள்…
மண்வெட்டியைப் பிளந்து நிழல் தேடுகின்றன.

புலி பசித்தாலும், புல்லைத் தின்னாது
வைராக்கியம் பேசி, வாழ வழி இல்லை
எலிக்கறி சமைத்து, எப்படியோ நகருது
எழவெடுத்த வாழ்க்கை.

சதுரங்கக் கட்டங்களாகப் பிளந்த நிலத்தின் மீது
தாவித் தாவி தவணை வசூலிக்கும் வெடித்த நிலத்தில் லத்திகள்.

ஓவியம் : ரவி பேலட்
நன்றி : திரு ரவி பேலட்

மக்கும் குப்பைகளும்,
மக்காத குப்பைகளும்
கொட்டிப் பிளந்த
அக்குழி மேல் பொழிகிறது
சுட்ட நெருப்பினில் கரைந்த
செல்லாப் பணங்களின் மரக் கூழ்.

படைப்பாளர் : கவிஞர் ந. தங்கராஜ்

ஓவியம் : திரு ரவி பேலட்