தேயாத பௌர்ணமி

குரோமோசோம்களின்
குளறுபாட்டில்
பிறந்தவள் நான்

என்னை ‘அவள்’ என்று
அடையாளப்படுத்தும்
அந்த இன்னொரு எக்ஸ்
இல்லை என்னிடம்

ராணியாய் என்றுமே
மதிக்கப்பட்டதில்லை
எனினும்
மரபணுக்களின்
சதுரங்க ஆட்டத்தில்
தினம் தினம்
வெட்டப்படுபவள் நான்

எதிர்பார்க்காதீர்கள்
தோள் தொடும் உயரத்தை
சங்குக் கழுத்தை
இடைதாங்கா தனங்களை
காந்தளை ஒத்த விரல்களை
என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்

என் இதயம்
எப்போது வேண்டுமானாலும்
வில்லில் பூட்டப்படலாம்
பிறக்கும் போதே
லாடமிடப்பட்ட
சிறுநீரகங்கள் எனது
என்னுயிரைக் காப்பதே
எனக்குப் பெரும்பாடாக
இருக்கையில்
என்னிடமிருந்து
இன்னொரு உயிரை
எதிர்பார்க்காதீர்கள்

குமிழ்ந்து உடையும்
குட்டி பலூன்களை
என் சினைப்பையிடம்
எதிர்பார்க்காதீர்கள்

திரண்டு அழியும்
நிலவின் சுழற்சியை
என் கருவறையிடம்
எதிர்பார்க்காதீர்கள்
நீங்கள் ஒத்துக்
கொள்ளத் தான் வேண்டும்
தேயாத பௌர்ணமி
நான் என்பதை.

-கோகிலாராணி

1 Trackback / Pingback

  1. வரையாத கோலங்கள் – பறம்பு தமிழ்ச் சங்கம்

Comments are closed.