நாம் மனிதர்களாயிருப்போம்

உங்கள் வானம்
திறந்தே கிடக்கிறது


இலக்கு ஒன்றே
உங்களின் தேவையாய் இருக்கிறது


உங்களின் தெருக்களில் வண்ணவிளக்குகள் பகலை கக்கிக்கிடக்கிறது
உங்கள் பாதைகள்
செப்பனிடப்பட்டு
உங்கள் கால்களுக்கு பாதுகைகள் பொருத்தப்பட்டுள்ளன


உங்களின் உணவு உங்களுக்காய் காத்துகிடக்கிறது
மகிழ்ந்திருங்கள்…

நானே ஆன என்

வானம் இருண்டுகிடக்கிறது
விளக்கு ஒன்று எங்களின் அத்தியாவசியமாய் இருக்கிறது
எங்கள் தெருக்களில் வெற்று லாந்தர்களே தொங்குகின்றன
எங்களின் முட்களும் கற்களுமான பாதையை இப்போதுதான் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்
எங்களின் உணவுக்காய் நாங்கள் காத்து கிடக்கிறோம்


உங்களோடு இட்டுச்செல்லவேண்டாம்
தயவு செய்து எங்களை விட்டுச்செல்லுங்கள்
கூன் நிமிர்த்தி நடந்து பழகிக்கொள்கிறோம்


எங்கள் துண்டுகளும் கொஞ்சம் தோளேறட்டும்…
நீங்கள் நீங்களாயிருங்கள்
நாங்கள் நாங்களாயிருக்கிறோம்


நாம் மனிதர்களாயிருக்கலாம்…

எபிநேசர் ஈசாக்