நீர் எம் தலைவன்

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒரு மாமனிதரைப்பற்றி எழுதும் வாய்ப்பினை வரலாறு முதன்முறையாக எனக்கு வழங்கியுள்ளது. தோழர் என். சங்கரய்யா அவர்களைப்பற்றி எழுதுவதென்பது தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைய அச்சினை எழுதிப்பார்ப்பதற்கு நிகர். அவ்வளவு பெரிய செயலினை எளிதில் செய்துவிட முடியாது. ஆனாலும் கடலினைக் கரைநின்றும் பார்க்கலாம் அல்லவா!

குரோம்பேட்டையில் குடியிருக்கும் தோழர் சங்கரய்யாவிடம் இன்று நீங்கள் போய் இரு நிமிடங்கள் பேசினால்கூட உங்களின் உள்ளத்துக்குள் அக்கணத்தில் பற்றிய கனலொன்றினை உணரமுடியும். இந்தத் தலைமுறைக்கான கம்யூனிஸ்டாகவும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதும் இந்தக் கணம் வரை உணர்வும் நினைவும் பீறிடும் மனிதராக அவர் இயங்குவதும் தமிழ்ச்சமூகத்துக்குக் காலங்கொடுத்த கொடை.

தோழர் சங்கரய்யாவின் வாழ்வின் சாரத்தை மூன்று பகுதியாகப் பகுத்துக் கொள்கிறேன். 1. சுதந்திரப்போராட்டத்தின் வீரமரபு, 2. மார்க்சீயப் பேரறிவு, 3. சங்கத்தமிழின் சாரம்.

சுதந்திரப்போராட்டத்தின் வீரமரபு

1937ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குள் நுழைந்த சங்கரைய்யா அடுத்த 11 ஆண்டுகள் விடுதலைப்போரில் ஆற்றிய பங்களிப்பு தமிழக அரசியல் வரலாற்றில் முன்கண்டிராத ஒன்றாகும்.
மாணவப்பருவமும் கம்யூனிஸ்ட் உணர்வுநிலையும் ஒன்றாகக் கூர்மையடைந்து ஏகாதிபத்திய அடக்குமுறையை நேருக்கு நேர் எதிர்நோக்கிய நிலையில் விளைந்த செயல்கள் விடுதலைப்போராட்ட வரலாற்றின் என்றும் அழியாத சுடர்விடும் செயல்களாகும்

அந்தப் பத்தாண்டுகள்தான் விடுதலை இயக்கத்தில் அதிகக் கொந்தளிப்பு மிக்க ஆண்டுகளாக இருந்தவை. நவீன இந்தியக் கனவின் உருவாக்கம், ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்கும் போராட்ட உத்தியின் பல்வேறு நிலைப்பாடுகள், களத்தில் நிற்பவர்களுக்குக் காந்தியத்தின்பாலான போதாமை, புதிய அரசியல் தேவையை வெளிபடுத்திச் செயல்படுத்த எத்தனிக்கும் முயற்சி, கம்யூனிஸ்டுகளின் செயல் என்று உள்ளும் புறமுமாக மாற்றங்களும் மாறுதல்களுமாக இயங்கிய காலமென எவ்வளவோ நடந்தேறிய காலத்தின் பெருக்கெடுக்கும் சான்றுகளை தனது வயதுக்குள் பொதித்துவைத்திருக்கிறார் சங்கரய்யா.
அமெரிக்க மிஷினரிமார்களின் இறையியல் கோட்பாட்டுக்கும் இங்கிலாந்து அரசு நிர்வாகத்தின் ஆட்சிமுறைமைக்கும் இடையில் இருந்த விரிசல்களின் வழியே சுதந்திரப்பயிர்கள் முளைவிட்டு வளர்ந்தன. அந்தக் களத்தில் செழித்து வளர்ந்த பயிர்தான் சங்கரய்யா.

மதுரைக்கு வந்த அன்றைய சென்னை இராஜதானி பிரதமர் இராஜாஜியை தனது கல்லூரி நிர்வாகத்தின் ஒப்புதலைப்பெற்று கல்லூரிக்குள் பேசவைத்ததும் அடுத்த சில மாதங்களிலேயே அதே இராஜாஜி கொண்டுவந்த கட்டாய இந்திக்கல்விச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சிறைசென்றதும் சங்கரய்யா என்ற தனிமனிதனின் செயல் மட்டுமல்ல உருமாறி மேலெழுந்து கொண்டிருந்த தமிழக அரசியலின் புதிய பரிமாணங்களாகும்.

மதுரை, கோவை, கடலூர், வேலூர், கண்ணனூர் என்று அடுத்து வந்த ஆண்டுகள் சிறைச்சாலைகளால் நிரம்பின. இவை வரலாற்றுக்குறிப்புகள் மட்டுமல்ல, ஒரு மனிதன் எத்தனை பெரும் இன்னல்களை அரசியல் உறுதியின் பொருட்டு எதிர்கொண்டார் என்பதும் அவ்வரசியல் உறுதி போராட்ட வீரர்களுக்குள் புதிய பரிமாணத்தை உருவாக்கிக் கொண்டிருந்ததும் நடந்தேறியது.

வெளியில் இருந்தால் மக்களைப் போராட தூண்டுகிறார் என்று சிறையில் தள்ளிய பிரிட்டிஷார், சிறைக்குள் இருந்தால் சக காங்கிரஸ்காரர்களை எல்லாம் கம்யூனிஸ்டாக மாற்றுகிறார் என்று சொல்லி தனி அறையில் அடைந்தது. ஒரு வீரனின் கால்களால் அடக்குமுறைக்கருவிகள் எப்படி இடர்பட்டன என்பதைக் காண சங்கரய்யாவின் வாழ்வைப்போல சிறந்ததொரு கண்ணாடி வேறில்லை.

விடுதலை வேட்கைகொண்ட விஸ்வநாததாஸின் குரலை அருகிலிருந்து கேட்டுணர்ந்தவர், தூக்குமேடை ஏறிய கையூர் தியாகிகளின் வீரமுழக்கத்தை அடுத்த அறையில் இருந்தபடி எதிரொலித்தவர், சிறையில் சிந்திய செங்குருதிகொண்டு மக்கள் போராட்டத்துக்கு வடிவங்கொடுத்தவர்.

மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தோழர்கள் பி.இராமமூர்த்தியும், சங்கரய்யாவும்1947 ஆகஸ்ட் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்று வெளிவந்த காட்சி, தமிழக விடுதலை வரலாற்றில் ஈடுஇணையில்லாத காவியக் காட்சியாகும்.

மார்க்சீயப் பேரறிவு

1947ஆம் ஆண்டில் கிடைத்த விடுதலையோடு போராட்ட அலைகள் நிறுத்தப்பட்ட போது, அசமத்துவம் இருக்கும் வரை சமத்துவத்துக்கான போராட்ட அலை நிற்காது என சமூக இயக்கத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவரின் செயலை அவர் கற்றுணர்ந்த மார்க்சிய தத்துவம் வழிநடத்தியது.

அன்று தொட்டு இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி, மார்க்ஸிட் கட்சியின் உருவாக்கம் அவற்றின் பல அமைப்புகளின் தலைமை பொறுப்பேற்று செயல்படுத்தியது, மக்கள் பிரதிநிதியாக சட்ட மன்றத்தில் செயலாற்றியது, தொடர்ந்து போராட்டங்களை அமைத்தபடியே உழைக்கும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வினையாற்றியதென சங்கரய்யாவின் இடைவிடாத பயணத்துக்கு அவர் கற்ற மார்க்சிய தத்துவ ஞானமும் களத்தில் மக்கள் இயக்கத்தின் வழியே பெற்ற சமூக ஞானமுமே அடிப்படை.

1930களில் மாணவப்பருவத்தில் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1950களில் விடுதலைக்குப் பின் இந்திய நிலபிரபுத்துவத்தையும் பிறப்பெடுத்து மேலெழுந்து கொண்டிருந்த இந்திய முதலாளித்துவத்தையும் ஒருங்கே எதிர்க்க வேண்டியிருந்தது. 1990களில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற நவீன முகமூடி அணிந்து வந்த ஏகாதிபத்தியப் பெருமுதலாளித்துவத்தைக் கண்டுணர்ந்து அதனைத் தீவிரத்தோடு எதிர்க்க வேண்டியிருந்தது. 2000க்குப் பின் இந்திய அரசியலில் ஏற்பட்ட வலதுசாரி திருப்பத்தினைத் தொடர்ந்து வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வீரத்துடனும் விவேகத்துடனும் களம் காணவேண்டியிருந்தது.
இவ்வளவு நெடிய பயணத்தில் சங்கரய்யா என்ற மாமனிதர் எவ்விடத்திலும் தளராமல், சோர்வடையாமல், வேகம் குறையாமல் தமிழ்ச்சமூகத்தின் முன்களத் தளபதியாய் பீடுநடை போட்டு வந்துள்ளார்.

வரலாற்று இயக்கத்தின் முன்னகர்வில் காற்றின் போக்கில் போகாமல் ஒரு கம்யூனிஸ்டாக எதிர்காற்றில் நின்றாடும் வல்லமையை அவர் பெற்றிருந்தார்.

சங்கத்தமிழின் சாரம்

மலையாள இலக்கிய வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் தோழர் இ எம் எஸ். மார்ஸிய நோக்கில் இலக்கிய வரலாற்றை எழுதி ஒரு சமூகத்துக்கு அதன் உண்மையான வரலாற்று வரைபடத்தை முதன்முதலில் காண்பித்தல் எத்தனை பெரியசெயல். அதனை செய்து காட்டினார் தோழர் இ எம் எஸ். அதேபோல தமிழ் இலக்கிய வரலாற்றை மார்க்ஸிய நோக்கில் முதன்முதலில் எழுதிக் காட்டியிருக்க வேண்டியவர்கள் தமிழ் இலக்கியத்தை ஆழப்பயின்ற அறிவுமரபைச் சேர்ந்த தோழர் ஜீவாவும் தோழர் சங்கரய்யாவும்.
ஆனால் இடைவிடாத போராட்ட வாழ்க்கையும், இளைப்பாறுதல் இல்லாத இயக்க வாழ்க்கையும் இப்பணியின்பால் அவர்களைக் கவனம் செலுத்தவிட்டிருக்கவில்லை. அன்றாட முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனைக்குக் குரல்கொடுக்க வேண்டிய இடத்திலேயே வெகுகாலம் இயங்க இவர்கள் பணிக்கப்பட்டார்கள். அதனால் எமது இயக்கமும் எமது மொழியும் இழந்தவைகளும் உண்டு.

இலக்கிய மரபை விடுதலைப்போராட்ட மரபோடு பொருத்திய பணியினை மகாகவி பாரதி தொடங்கிவைத்தான். அதனை அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். பா. ஜீவானந்தமும் அவரின் தொடர்ச்சியாக தோழர் சங்கரய்யாவும் அப்பணியினை நிகழ்த்திக்காட்டினார்கள்.

இயக்கத்துக்குள் நிகழ்ந்த தத்துவார்த்தப் போராட்டமும் அமைப்புச் செயல்பாடுகளும் அவர்களை இலக்கியம் சார்ந்த பணிகளைச் செய்யும் இடவசதியை ஏற்படுத்தவில்லை. ஆனால் மார்க்ஸ்சிய செவ்வியல் இலக்கியங்களையும் சங்க இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களாக அவர்கள் இருந்ததால் மொழி, பண்பாடு போன்றவற்றில் வந்த சிக்கல்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு தனித்துவமிக்க தலைவர்களாக விளங்கினர்.

குறிப்பாக 1967ஆம் ஆண்டு ஆட்சி மொழிச்சட்ட பிரச்சனையின்பால் தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் தோழர் சங்கரய்யா எடுத்துவைத்த வாதமும் மொழிசார்ந்து செயல்படும் ஒவ்வொருவரும் அவசியம் படித்தறிய வேண்டிய பாடநூலாகும்.

தோழர் சங்கரய்யா கட்சியின் கருத்தினைத்தான் எடுத்துவைத்தார். எடுத்துவைக்கும் கருத்தினை எதிர்நிற்பவர்கள் வியந்து விலகும் ஆற்றலோடு எடுத்துவைப்பது அவரவர்களின் ஆளுமை சம்பந்தப்பட்டது. சங்கரய்யா என்ற மாமனிதரின் ஆளுமையால், முதலமைச்சர் அண்ணா அவர்கள் தனது தீர்மானத்தில் திருத்தத்தைக்கொண்டு வந்தார் என்பதை தமிழக சட்ட மன்றம் பார்த்தது. அதுமட்டுமன்று அன்றைய விவாதத்தில் சங்கரய்யா எழுப்பிய மொழிசார் மற்றொரு பிரச்சனை
இன்றுவரை மொழிப்பிரச்சனையில் தீராத ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு மனிதனின் மொழி அறிவும் சமூக அறிவும் எவ்வளவு கூர்மைபெற்று விளங்கியுள்ளது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

தமிழக அரசியல் பெருவெளியில் தன்னிகரற்று அமர்ந்திருப்பவர் சங்கரய்யா. எட்டாண்டுகால சிறைவாழ்வும் எண்ணிப்பார்க்க முடியாத தியாகவாழ்வும் கொண்ட மாமனிதரின் நினைவுகளில் இருக்கும் செய்திகள் எதுவும் மறக்காதவை. வயோதிகம் என்பது அவரது உடலுக்குத்தான்; அறிவாற்றலிலும் நினைவாற்றலிலும் அவர் அடங்காத இளங்காளை.

கொரோனாவின் முதலலையின் போது என் தாயும் தந்தையும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அதனை அறிந்து தொலைபேசியில் அழைத்து விசாரித்தார்.
ஒவ்வொருவரின் உடல்நிலையையும் விசாரித்துவந்தவர். ”நீ இன்னும் ஆழ்வார்களை திட்டுறயா?” என்று கேட்டார். நான் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டேன்.
எனது திருமணத்தை தோழர் சங்கரய்யாதான் நடத்திவைத்தார். நானும் கமலாவும் மணமேடையில் இருக்க, மேடையில் எங்களுக்கு இருபுறமும் நின்றிருந்த எங்கள் பெற்றோர்களிடம் “உங்களுக்கு இந்தக் காதல் திருமணம் சந்தோஷந்தானே?” என்று கேட்டார்.

என் தாயார், “சந்தோஷந்தான் , ஆனால்….!” என்று எதையோ சொல்லவந்து, சொல்லாமல் நிறுத்தினார்.

அருகில் இருந்த எனக்கு சற்றே ”திக்” என்று இருந்தது.

“பரவாயில்ல..என்ன விசயம் சொல்லுங்க?” என்றார் சங்கரய்யா.

நீண்டநாள் காத்திருந்த வாய்ப்பு இன்று கிடைத்தென்று நினைத்த என் தாயார், “இவன், ஆழ்வார்களைத் திட்டுறான். திட்டக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார்.

சொல்லிமுடித்த கணத்தில், “இவன் கம்யூனிஸ்ட், ஆழ்வார்களைத் திட்டமாட்டான். ஆழ்வார் பாசுரங்கள் மட்டுமல்ல, எந்த இலக்கியத்தையும் காலத்தோடு பொருத்திப்பார்த்துதான் புரிஞ்சுக்கனும்” என்று சொல்லியபடி என்னைப் பார்த்தார்.

“ஆமாம் தோழர்” என்று தலையசைத்தேன். மணவிழா மேடையில் நடந்த பஞ்சாயத்து இது.

இது நடந்து இருப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் தாயாரின் உடல்நலத்தை விசாரித்த அடுத்த கணத்தில் “நீ இன்னும் ஆழ்வார்கள திட்டுறயா?” என்று அவர் கேட்டபொழுது நான் உறைந்து போனேன்.

“நான் ஏன் தோழர் ஆழ்வார்களத் திட்டப்போறேன். வடக்கே கொடுங்சமஸ்கிருதம் இருப்பதால் திருவரங்கன் செந்தமிழ் மணக்கும் தென்திசையில் தலைவைத்துப்படுத்து உள்ளான் எனப்பாடிய பாட்டுக்காரர்கள் நம் மரபினர் அல்லவா” என்று பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால் இருப்பத்தைந்தாண்டுக்கு முன் என் தாய் சொல்லிய சொல்லின்மேல் நின்று அவர் கேட்ட கேள்வி என்னை எதையும் சொல்லவிடாமல் நிறுத்தியது.

கண்ணில் நீர்பெருகியபடி, மனம் அவரை வணங்கியது.

நீர் எம் தலைவன்

  • சு.வெங்கடேசன், எம்.பி., கௌரவ தலைவர், பறம்பு தமிழ்ச் சங்கம்
தோழர்.சங்கரைய்யா அவர்கள்.