
#அலை
கீழ்வானிலிருந்து
பிறக்கின்ற கடலின்
காற்று
நாம் கண்டபொழுதின்

பரவசத்தை வீசுகிறது.
உன்னைத் தேடுவதென்பது
கரையில் நின்றபடி
கடலைப் பார்ப்பதாகிறது.
அள்ளிய மணலோடு
கரையில் தூவுகின்ற
சிந்தனையின்
முதலிலும்,முடிவிலும் பெயரை
அடித்துச்சொல்லிப் போகிறது
அலை.
அலையென உனக்குப்
பெயரிட வேண்டும்போல்
இருக்கிறது.
அலையே
சத்தமிட்டபடி
எதற்கு வருகிறாய்…
எதற்குப் போகிறாய்…
நிற்பவனையும்
நனைத்து விட்டு.
************
#உயிர்ப்பு
தரையை மூழ்கடித்த
அலையொன்றில் பிடிபட்டதிலிருந்து
மன ஓதங்களின் காரணியாகி
ஒதுங்காத பாசிகளைத்
துளையிட்டு
மணிச்சட்டத்தில் கோர்க்கிறாய்.
விடும் பாய்மரக் கப்பல்களை
ஊதியே தள்ளிவிடுகிறாய்.
மௌன கலயத்துள் இருக்கும்
ஒப்புதல்களை சங்குகள் இட்டு

நிரப்பியெடுக்க முற்படுகிறேன்
அகலும் நங்கூர முனைகளை
மணலுக்குள் மறுபடி புகுத்திவிட்டு,
காதல் கடலெங்கும் செறிந்திருக்கிறது
அது
மணலுக்கடியில் ஒளிக்கும்
நுரைகளையேத் தேடுகிறது நண்டென
நிமிண்டுகிறாய்.
உப்பங்கழிகளில்
உயிர்ப்புறுக்கின்றன
அலையாத்தி காடுகள்.
*************
#கடலின்_பசி
பெருத்த பசியினோடு
கடலை பார்க்கின்ற
கரைகளில்
மர்ம தூண்டிலோடு

நிற்கிறது பெருங்கூட்டம்.
தூண்டில் முட்கள்
இழுத்து வரும்
அலைகள்
பெருங்கோட்டைகளை உலுக்கி
ஆதிமுரசை தட்டுகின்றன..
மனதிற்குகந்த இக்காற்றில்தான்
படிந்திருக்கிறது
ஆசுவாசமே பார்த்திடாத
ஒரு அகதியின் சுவாசம்.
வாழ்வை
வாழ்தலோடு
இறுக்கிவிடும்
கடல் முன்
இறுகி
அமர்ந்திருப்பவர்களை
குறைகூறுவதற்கில்லை.
**************
#கரை_தொடா_அலை
ஸ்பிரிங் பொட்டேட்டோ போன்று
வெட்டி நீட்டப்பட்ட
கடற்கரை பொழுதொன்றில்
அமர்ந்தவர்கள் எழும் நேரமெல்லாம்
பறக்கத் தயாராகும்
மணற்துகள்களை பார்த்தபடி
ஐஸ்கிரீம் வண்டிகளை
ஓட்டிக் கொண்டிருக்கிறது மனம்.
கனவுப் பொதிகளை சொருகி
பறக்கவிடும்
வடமுனை ஆலாக்கள்
தொடுவானுள் தொலைகின்றன.
நானோ,
பானிபூரியோடு
கரை தொடாத அலைகளை
விழுங்கிக் கொண்டு இருக்கிறேன்.
அடிமை மாலுமிகளால்
இழுக்கப்படும் கப்பல்கள்
கடற்கரைகளைத் தேடி
விரைந்த
வண்ணமே இருக்கின்றன.
விடுதலை என்னவோ
கடலுக்குள் தான் இருக்கிறது.
படைப்பாளர் : நவீன்.ஜெ
புகைப்படங்கள் : cottonbro