பாரியது பறம்பே

வேள்பாரி

எக்கணமும் போர் துவங்கும் அறிகுறி இருந்தது. காற்றில் எங்கும் பகை வாடை  போர் முகாமில், மூவேந்தர்களும் ஆலோசனையில் இருந்தார்கள். கபிலர் வருவதை வாயிற்காப்போன் அறிவித்தான்.

“வாருங்கள். அமருங்கள். பாரி உங்கள் நெருங்கிய நண்பனாமே? எங்களைப் பற்றி அவனிடம் சொன்னீர்களா? எங்களிடம் மோதினால் அவன் வீணாக தோல்வியைத்தான் சந்திப்பான் பாருங்கள்.” சேரன் செருக்கோடுப் பேசினான்.

“வேடிக்கையாக இருக்கிறது உங்கள் பேச்சு. பாரியுடன் போர் புரியாதீர்கள் என்று நான் உங்களை எச்சரிப்பதற்காக வந்திருக்கிறேன். உங்களுக்கு பேரிழப்பு நேரிடும். இந்த முயற்சியை கை விடுங்கள்.” என்றவாறே கபிலர் இருக்கையில் அமர்ந்தார்.

“என்ன உளறுகிறீர்கள்? அவன் பணிந்து போகத்தான் வேண்டும்” கண்கள் சிவக்க கோபமாகப் பாண்டியன் எழுந்தான்.  கோப்பையில் இருந்த பானம் சிதறியது.

“பாரி ஏன் பணிய வேண்டும். உங்கள் மூவரையும் அவன் சார்ந்திருக்கிறானா? பறம்பு நாட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

“எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்.” ஏளனம் கொப்பளித்தது சோழனின் குரலில்.

“உழவு விளைவித்துத் தராத நான்கு வளங்கள் உண்டு பறம்பிலே. ஒன்று, மூங்கில் நெல் விளைகிறது. இரண்டு, பலாப்பழம் உண்டு. மூன்று, வள்ளிக்கிழங்கு உண்டு. நான்கு, ஒரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள் உண்டு.
 
பறம்பு மக்கள் தற்சார்பு வாழ்கை வாழ்கிறார்கள். அபரிமிதமான நீர் வளம் கொண்ட நாடது. வானத்து விண்மீன்கள் போல் சுனைகள் கொண்டது. வான் போல் பரந்து விரிந்து கிடக்கும் அந்த மலை.”
 
“இருக்கட்டுமே… நாங்கள் மூன்று பக்கங்களிலுருந்தும் படையெடுப்போம்.  சேரனும் சோழனும் என்னுடன் இதற்காகவே சேர்ந்திருக்கிறார்கள்.”
 
“பாண்டியா, பாரிக்கு அந்த மலையில் யார் காலடி எடுத்துவைத்தாலும் உடனே தெரிந்து விடும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.”
 
“யானைப்படை, குதிரைப்படை காலாட்ப்படை என்று பலம்  பொருந்தியவர்கள் நாங்கள். ஒன்று சேர எதிர்த்தோமென்றால் அவன் தோல்வியுறுவான்” மீண்டும் சேரன் சொடுக்கடித்து பேசினான்.
 
“உங்களை பேச்சு மூடத்தனமானது. உங்கள் யானைகளை அங்கிருக்கும் ஒவ்வொரு மரத்தில் கட்டினாலும். காலியிடங்களில் தேரை நிறுத்தினாலும் அவன் அத்தனையும் அழித்து விடுவான். வாள் வீசிப்போரிட்டாலும் அவனை வெற்றிக் கொள்ளவும் முடியாது. பறம்பு நாட்டை அடையவும் முடியாது.”
 
“அவனது பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு உரிய வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன்.  யாழ் மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள்.  உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன் பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம்” பதிலை எதிர்ப்பார்க்காமல் வெளியேறினார் கபிலர்.
 

புறநானூறு  பாடல் 109

அளிதோதானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;             
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, 
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.
               
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
திணை வாகை; துறை, அரசவாகை
           
காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

வெதிரின் நெல் 
(மூங்கில் நெல்) 

கதையாசிரியர் : – மாலதி மகாதேவன்