
நம்பவே நம்பாமல்
ஒளித்து வைத்த மயிலிறகு
இன்று குட்டி போட்டுள்ளது
அதில் உன் நினைவாய்
பதியம் போட்ட உன் கற்றைமுடி.
வாடாமல்லி என்று
பெயர் வைத்தவனுக்குப்
பரிசளிக்கத் தான் வேண்டும்
எப்போதோ பாடம் செய்த மலரில்
இப்போதும் கூட உன்வாசம்.
கடவுளிடம் வரம்
வாங்கியதாய்ச் சொல்லி
கட்டிவிட்ட நைலான் கயிறு
இன்னும் நைந்து போகாமல்
அருள் பாலிக்கிறது.
என் நினைவில்
நீ மொய்ப்பது போல்
இன்னும் எறும்பு
மொய்த்துக் கிடக்கிறது
நீ சாப்பிட்ட சாக்லேட் கவர்.
டைரித்தாள்களின்
வெந்நீல நிறம் மக்கி
மஞ்சள் பூத்த போதும்
இன்னும் வாடாமல் தான்
இருக்கிறது
உனக்கான காதல்.
-ரகுராமன்