
சமையலறையில் பாத்திரம் ‘நங்’கென்று வைக்கப்பட்ட ஓசை உச்சி மண்டைக்குள் சென்று எதிரொலித்தது.
“என்னாடி.. ஒரே சத்தமா இருக்கு? கிச்சனுக்குள்ள பூன கீன புகுந்துருச்சா?”
“எது எங்க புகுந்தா எனக்கென்ன?”
“இப்ப என்ன பிரச்சன ஒனக்கு?”
“ஆமா.. நாந்தான் எப்ப என்ன பிரச்சன பண்ணலாம்னு காத்திருக்கேன். மத்தவங்க பண்றதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதுல.. நான் எதாவது பண்ணா மட்டும் விளிச்சுனு தெரிஞ்சிரும்”
“இப்ப என்ன சொல்ல வர்ற?”
“எத்தன தடவ சொல்றது? இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது சாமி. எல்லாம் பண்ணியும் கடைசில நாந்தான் பேச்சுக் கேக்க வேண்டிருக்கு. ஒழுங்கா நாளைக்கு ஆபீசுக்கு லீவு போட்டுட்டு டாக்டர் கிட்டப் போய் காட்டிட்டு வாங்க”
மனைவியின் வசைமொழி இன்னமும் ரீங்கரிக்கிறது காதுகளுக்குள். ‘நியூரோ கேர்’-ன் வராண்டாவில் மருத்துவரின் அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். தத்தம் மூளையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கைகளில் ஏந்தியபடி பலர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்குள் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது?
“என்ன ரமேஷ்? இது எவ்ளோ முக்கியமான ப்ராஜெக்ட் தெரியும்ல? மண்டேக்குள்ள முடிச்சாகணும். இப்பப் போய் லீவு கேட்டா எப்டி? இந்த ஆபீஸ்லயே நீங்க தான் பொறுப்பானவர். நீங்களே இப்பிடிப் பண்ணலாமா?”
அப்படி இவரிடம் என்ன கேட்டு விட்டார்கள்? இவன் பெண்ணையா கட்டித் தரச் சொல்லிக் கேட்டேன்? அலுவலகத்திற்கே என்னை நேந்து விட்டது போலல்லவா பேசுகிறார்? விடுப்பு கேட்டாலே ஏதோ சமூக விரோதியைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள் இந்த உயர் அதிகாரிகள். எனக்கு மட்டும் என்ன ஆசையா? இவர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று? இதற்குத்தான் இத்தனை நாள் தட்டிக் கழித்தது. எல்லா நடுத்தர வர்க்கத்து ஆண்களுமே மத்தளம் தான் போல.
வேண்டா வெறுப்பாகக் காத்துக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த என் அம்மா சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் இவளால் தான்.
பக்கத்தில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா சிநேகமாகப் புன்னகைத்தார். இந்த இடத்தில் என்னத்தை சிநேகம் வேண்டிக்கிடக்கிறது?
பதிலுக்கு சிரித்து வைத்தேன்.
“ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்களா?” என்றார் அந்தப் பெண்மணி.
இதெல்லாம் தெரிந்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினேன்.
பக்கத்தில் பாதி நரைத்த தலையுடன் ஒருவர். அவர் கணவராக இருக்கலாம். சிகிச்சைக்கு வந்திருப்பார் போல. இந்தம்மா உடன் வந்திருக்கலாம்.
“எனக்கு இங்க தான் பத்து வருசமா பாத்துட்ருக்கேன்.. பைபோலார் “
என்றார் அந்தம்மா.
ஏதோ ஒரு படத்தில் ஒரு மனநோயாளி ஆக்ரோஷமாக அருகில் இருந்தவரின் சங்கைக் கடிக்க வந்ததாய் ஞாபகம். ஒருமுறை என் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அதன் பிறகு அந்தப் பக்கமே திரும்பவில்லை நான்.
“அன்னபூரணி” என்றொரு குரல் கேட்டது.
“நாங்க தான் ” என்றபடி, அம்மாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.
டாக்டர் அர்ச்சனா. எம்.டி. சைக்கியாட்ரி அப்புறம் நமக்குப் புரியாத ஆங்கிலத்தில் பத்து அங்குல நீளத்திற்கு எழுதப்பட்டிருந்தது அவர் பெயர். பெரிய மருத்துவராகத்தான் இருக்க வேண்டும்.
“குட்மார்னிங் டாக்டர். “
“மார்னிங். உக்காருங்க”
இதழில் உதிர்த்த புன்னகையை, அறை முழுதும் படர விட்டார் அவர்.
” தேங்க்யூ டாக்டர்”
“சொல்லுங்க. என்ன தொந்தரவு?”
“ஐ ஆம் ரமேஷ். சாஃப்டுவேர் இன்ஜினியர். இவங்க என் அம்மா. அன்னபூரணி. அண்ணன் யு.எஸ்.ல இருக்கான். இவங்கள நாங்கதான் பாத்துக்குறோம். ஒரு ஆறு மாசமாவே இவங்க சரியில்ல டாக்டர்.
எதுக்கெடுத்தாலும் கோவப்படுறாங்க, சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்றாங்க. நானும் என் மனைவியும் வேலைக்குப் போயிடுவோம். வீட்ல இவங்க சும்மாதான் இருக்காங்க. கடன் வாங்கி புது தையல் மிஷின் வாங்கிக் குடுத்தேன். இப்ப அது ஒரு மூலைல கெடக்கு. வேலை செய்யலனாக் கூட பரவால்ல. பிரச்சன பண்ணிக்கிட்டே இருக்காங்க டாக்டர். குளிக்கக் கூட மாட்றாங்க. சேலை கூட என் மனைவி தான் உடுத்தி விட வேண்டிருக்கு. எதாவது சொன்னா கோவம் வந்துருது. எப்பப் பாரு எங்கயோ பாத்துக்கிட்டு, பைத்தியம் மாதிரி உக்காந்திருக்காங்க. நேத்து பாருங்க, வளையலக் காணோம்னு ஒரே ரகள. நீ எடுத்தியானு என் மனைவிய கேக்க, அவ தாம் தூம்னு குதிக்க, ஒரே சண்ட… “உங்கம்மா என்னத் திருடினு சொல்லுவாங்க. நான் கேட்டுக்கிட்டு பேசாம இருக்கணுமா” னு அவ அழ ஆரம்பிச்சிட்டா. கடைசில பாத்தா இவங்க தான் பாத்ரூம்ல வச்சிருக்காங்க. ஒரு கொறயும் இல்லாம தான் பாத்துக்குறோம். இவ்ளோ பண்ணியும் ஏன் இப்டி நடந்துக்குறாங்கனு ஒண்ணுமே புரியல டாக்டர்”

தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்து விட்ட மாணவனின் நிம்மதியுடன் அருகில் அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்தேன்.அவள் எதுவுமே பேசவில்லை.
” அம்மாவுக்கு என்ன வயசு?”
” ஒரு 66,67 இருக்கும் டாக்டர்”
“இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எப்டி இருந்தாங்க?”
“நல்லாதான் இருந்தாங்க டாக்டர். ஸ்கூல் டீச்சர். ரிட்டையர்டு ஆகி 8 வருசம் ஆச்சு. இவங்க தான் சமைப்பாங்க. எல்லா வேலையும் பாப்பாங்க. தையல், எம்பிராய்டரி னு எதாவது பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எங்களுக்கு கொழந்த இல்ல. அதனால் மருமகள யாரும் எதுவும்
சொல்லிரக்கூடாதுனு அவ்ளோ பாசமா, மக மாறி தான் அவள பாத்துக்குவாங்க. ஒரு வார்த்தை கூட தடிச்சு பேசுனதில்ல. இதுவரைக்கும் ரெண்டு பேருக்கும் சண்ட வந்து நான் பாத்ததே இல்ல.”
“சரி. அன்னபூரணி அம்மா.. உங்ககிட்ட சில கேள்விகள் கேப்பேன். பதில் சொல்றீங்களா?”
“சரி டாக்டர்” என்றாள் அம்மா.
“உங்க பேர் என்ன?”
” அன்னபூரணி “
“குட். இவரு யாரு?”
” என் பையன்”
“ பேரு?”
யோசித்தாள். என் முகம் நெளிந்ததை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, “சுரேஷ்” என்றாள்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘ஏன் பொய் சொல்கிறாள்?’
“சரி. உங்களுக்கு எத்தன குழந்தைங்கமா?”
” ஒரு பையன் தான்”
” அம்மா..என்ன சொல்ற நீ?”
“நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்க?”
மீண்டும் மெளனம்.
“நான், என் மவன், மருமவ, ரெண்டு பேரப்புள்ளைக”
‘மானத்த வாங்காதம்மா’ என மனதுக்குள் நினைத்தது நிச்சயமாய் முகத்தில் பிரதிபலித்திருக்கும்.
“வீடு எங்க இருக்குமா ?”
“அது வந்து … நான் சீக்கிரம் போணும்”
எரிச்சல் தெறித்தது பதிலில்.
” அப்டிங்களா? சரி போலாம். நான் சொல்ற வார்த்தைய திருப்பி சொல்றீங்களா?”
“ம்”
“ WORLD.இதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க”
“W…0… R….L… D”
“வெரிகுட்.இப்ப அத அப்டியே ரிவர்ஸ் ல சொல்லுங்க.”
“D….R…” அதற்கு மேல் பூமி நகரவில்லை.
எனக்கு ஒரே ஆச்சரியம். ஆங்கில இலக்கணத்தை அக்கு அக்காகப் பிரித்து வைத்த, தனக்கே உரிய பாணியில் உச்சரித்துப் பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சரா இது ?
“நான் போலாமா டாக்டர் ?” அம்மா மீண்டும் நெளிந்தாள்.
“கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்ட?”
என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ரமேஷ்.. பானிப்பட்டுப் போர் நடந்த வருசம் என்ன?”
“தெரியாது.”
“ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஆங்கில அதிகாரி யாரு?”
“படிச்சிருக்கேன். ஞாபகம் இல்ல. இதெல்லாம் ஏன் கேக்குறீங்க டாக்டர்?”
“நீங்க ஏற்கனவே படிச்ச, தெரிஞ்ச, இப்போ மறந்து போன ஒண்ணக் கேட்டா உங்களுக்கு எப்டி கோவம் வருதோ, அப்டித்தான் இப்போ அம்மாவுக்கும் இருக்கும். இந்த வயசுல வர்றதுதான். டிமெண்ஷியானு சொல்லுவோம். அவங்களோட நினைவடுக்குல இருக்குற எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வருது. உங்க பேர மறந்துட்டாங்க. எப்டி குளிக்கணும், எப்டி சமைக்கணும்கிறத மறந்துட்டாங்க. தான் இதையெல்லாம் மறந்துட்டோம்னு அவங்க உணரும்போது வருத்தமோ, கோபமோ, எரிச்சலோ வருது.”
நம்பவே முடியவில்லை. இவளது மாற்றங்களுக்குப் பின் இருப்பது மறதி என்னும் நோயா? இது புரியாமல் எத்தனை முறை திட்டி விட்டோம்?
” இத குணப்படுத்த முடியாதா டாக்டர்?”
“இதுக்குனு பெருசா எதுவும் ட்ரீட்மெண்ட் இல்ல. நீங்க அவங்களப் புரிஞ்சுகிட்டு அன்பா பாத்துக்கிறது தான் இதுக்கு சரியான ட்ரீட்மெண்ட். மாத்திரை எழுதித்தரேன். நோய் இன்னும் மோசமாகாம இருக்க ஹெல்ப் பண்ணும். பத்தரமா பாத்துக்குங்க. அம்மாவ தனியா எங்கயும் விடாதீங்க”
குறை சொல்லும் மாணவனாய் உள்ளே நுழைந்தவன், குழந்தையைக் கையிலேந்திய தகப்பனாய் வெளியே வந்தேன் கனத்த இதயத்துடன்.

வளர்ந்ததும் நாம் தான் பெரியவர்கள் என்றும் நமக்குத் தான் எல்லாம் தெரியும் என்றும் நினைத்துக் கொள்கிறோம். முதுமையின் தனிமையை, பெற்றவர்களின் மனதை கவனிப்பதே இல்லை. அதற்கெல்லாம் நமக்கு நேரமும் இல்லை. முதுமை வருவதே நாம் இதுவரை சேர்த்து வைத்த அனுபவங்களை நினைத்து அசை போடத் தான் என்பார்கள். இத்தனை வருடங்களாய் தான் ஆசை ஆசையாய் வாழ்ந்த வாழ்க்கையை, சேகரித்த நினைவுகளை மொத்தமாய் இழந்துவிட்டு நிற்கிறாள் இவள். ஒரு பேனா தொலைந்தாலே நம்மால் தாங்க முடிவதில்லை. இவளுக்கு எப்படி இருந்திருக்கும்? தன் நிலையை அவள் சொல்வதற்குக் கூட இடம் ஏற்படுத்திக் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கும் போது எனக்கே என் மேல் கோபமாக வந்தது.
அந்த பைபோலார் அம்மா இன்னும் அதே காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தார். அவர் கணவரின் முகத்தை உற்றுப் பார்த்தேன். அமைதியாய் எந்த வித சலனமுமின்றி தெளிந்த நீரோடை போலிருந்தது.
அந்த அம்மா எதேச்சையாய் என்னைப் பார்த்தார். ஏனோ அவரைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்று தோன்றியது. செய்தேன்.
ஏதோ ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன். அம்மாவின் கை, என் கையை இறுகப் பற்றியிருந்தது.
“ஒரு நாள் நான் உன்னையும் மறந்துருவேனாடா?” என்றாள்.
புதைந்து போன நினைவுகளையும் தாண்டி பீறிட்டெழுந்திருந்தது தாய்மை அவள் விழியோரம் நீர்த்துளியாய்.

கதையாசிரியர் : கோகிலாராணி, மனநல மருத்துவர்.