வரையாத கோலங்கள்

நீ தந்த மேகங்கள்
பொழியாமல் போகிறது
உன்னிடம் திருப்பி
அனுப்ப மனமில்லை
உன் நினைவின்
மெத்தையாய்
நானே வைத்துக்
கொள்கிறேன்

வானம் நிறைக்க
பொழிந்து தள்ளி
வாசலில்
வெள்ளமிட்ட
அந்நாட்களை
நினைவு கூர்கிறேன்

இன்றோ
ஈரப்பசையை
எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
என் வறண்ட வாசல்

ஆனால்
அன்றும் சரி
இன்றும் சரி
என் வாசலில்
கோலங்கள்
இருந்ததேயில்லை

-ச.கோகிலாராணி