ஶ்ரீ ராம ஜெயம்


“பூமிக்கடியில இருந்து வர்ற தண்ணிலயோ, வானத்துல இருந்து வர்ற தண்ணிலயோ இருந்து எனக்குக் கோயில் கட்டக்கூடாது. நாதனுக்கும் எனக்கும் பக்கத்துல பக்கத்துல கட்டு.”

பத்ரகாளியின் குரலில் அனைவரும் அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடந்தனர். மலர்விழி சாமியாடிக் கொண்டிருந்தாள். ராமமூர்த்தி, அம்மாவின் அருள்வாக்கை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“சாமியும், பேயும் உலகத்தில இல்லடா. ஒருத்தனோட பரிதாப நிலையப் பாத்து உதவி செய்யிறவன் சாமி. அடுத்தவன கொடுமபடுத்தி அவனப் பாத்து அற்ப சந்தோசப்படுறவன் பேயி.”

ராமமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்னாடி வரை இப்படித்தான். நம்பியார் சாமியைப் பார்த்தப்பிறகு எல்லாம் மாறி விட்டது. ஆம் நடிகர் நம்பியாரே தான்.

ராமுக்கு பிடிக்காத ஒன்று ஓய்வெடுப்பது. தூங்கும் போது கூட எதாவது வேலை செய்து கொண்டிருப்பானோ என் சந்தேகிக்கும் அளவுக்கு எதாவது வேலை செய்து கொண்டே இருப்பான். கடின உழைப்பால் கைகளில் எப்போது காசு புரண்டு கொண்டிருக்கும். சகல சௌபாக்கியங்கோடு வாழ்பவன் கடவுளை ஏன் தேடப் போகிறான். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வடநாட்டு கடவுள்களை எல்லாம் இறக்குமதி செய்து வழிபட்டுக் கொண்டிருக்க அவனோ அதற்கு எதிராய் இருந்தான்.

படங்களில் வில்லனாய் நடிப்பவர்கள் பலரும் நிஜத்தில் நல்லவர்களாய் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவே ராமுவுக்கு பல நாட்களானது. நடிகர் நம்பியார் அய்யப்பனுக்கு விரதமிருந்து பல ஆண்டுகாலம் பாதயாத்திரை சென்று குருசாமி நிலையை எல்லாம் கடந்து நம்பியார்சாமி என்கிற இடத்தை அடைந்திருந்தார்.

அவரைத் தொட்டு வணங்கினால் நல்லதொரு ஆசி கிடைக்கும் என நண்பர்களில் யாரோ கொளுத்திப்போட அப்படியெல்லாம் இல்லை என்கிற முயற்சியில் இறங்கினான் ராமு.

பாதயாத்திரையின் போது ஓரிடத்தில் ஓய்வெடுத்த நம்பியாரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய போது மின்சாரம் போல ஒரு உணர்வு ராமுவை ஆட்கொண்டது. அதை அவனால் நம்பவே முடியவில்லை. பித்துப் பிடித்தவன் போல ஆகிப்போனான் ராமு.

வீட்டிற்கு வந்து கிணற்றடியில் நின்று தண்ணீரை மோந்து மோந்து ஊற்றினான். ஏதோ பிரமை அவனை ஆட்கொண்டது போல இருந்தான். அருகில் இருந்தவர்கள் ராமுவின் அம்மாவிடம், “விடாம வேலை பாக்குற பிள்ளைக்கு ஏதோ ஆகிப்போச்சு. மந்திரிச்சு தாயத்து கட்டி விடு” என்றனர்.

மாலை அவன் முகத்தில் தெளிவு பிறந்தது. 108 அம்மன் ஸ்தோத்திரத்தை அட்சரம் பிசகாமல் சொன்னான். அனைவரும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பக்திப்பழமாக மாறிப் போனான் ராமமூர்த்தி.

காளியின் அருள்வந்து தனக்கும், சிவனுக்கும் கோயில் கட்டச் சொன்னாள். பூமியிலிருந்தும், வானத்திலிருந்தும் எடுக்கப்படாத தண்ணீரை ராமமூர்த்தி மிக எளிதில் கண்டடைந்தான்.

ஒரு இளநீரின் விலை ஒண்ணாரூபாய். ஆயிரக்கணக்கில் வாங்கி நீரெடுத்து கோயிலை கட்டத் தொடங்கினான். கும்பாபிசேகத்திற்காக மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் குளத்திலிருந்து நீர் எடுத்து வந்தான்.

கும்பாபிசேகத்திற்கு முன்னர் தினமும் பூஜை செய்ய அறிவுறுத்தப்பட்டான். தியாகராய நகர் போக் ரோட்டில் தினமும் இரவில் மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கின. அவனைப் போலவே தன் பெயரிலும் முதல் பாதியை வைத்திருந்தவர் முதலமைச்சராய் இருந்தார் அப்போது. ராமமூர்த்தியின் பூஜை தனக்கு இடையூறாய் இருக்கிறதென முதல்வருக்கு நெருக்கமானவர் மூலம் தகவல் போக அக்கோயிலை இடிக்க உத்தரவு பறந்தது.

கதையைச் சொல்லி விட்டு ராமமூர்த்தி என் முகத்தையே பார்த்தார்.

“ஆமா நீங்க கல்யாணம் பண்ணிக்கல” என்றேன்.

“பண்ணி வச்சாங்க. என்னனு தெர்ல. என்னை விட்டுட்டு ஓடிப்போய்ட்டா”

“எந்த இடத்தில கோயில் கட்டி இருந்தீங்க.?”

“இங்க தான்” என ஒரு ப்ளாட்பார்மைக் காட்டினார்.

“அடுத்து என்ன செய்யிறதா உத்தேசம்?”

“கோயிலை கட்டி முடிச்சே தீருவேன்” என்றார்.

“அம்மன் கோயில் கட்டாதீங்க. ராமர் கோயில் கட்டுங்க” என்றேன்.

விழுந்து விழுந்து சிரித்தார். அங்கிருந்து இளநீர் வாசமும் விபூதி வாசமும் வந்து கொண்டிருந்தது. அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.



கதையாசிரியர் : டேனியல் ராஜா