
டாக்டர் கூப்பிடுவதற்காக காத்திருந்தார்கள் மாதுவும் தீபாவும். மாது இங்கு வந்ததே தீபாவின் கட்டாயத்தின் பேரில்தான். தீபாவுக்குத்தான் ஒரு முறை இதையும் முயற்சி செய்யலாமே என்று விசாரித்து இந்த ஹாஸ்பிடல் வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரின் ரிப்போர்ட்டுமே பெரிய பைலா இருந்தது,
”இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்?”
”கூப்பிட்டாதானேங்க போக முடியும்.” சரியா அந்த சமயத்தில் டாக்டர் உள்ளே வரச்சொன்னார். டாக்டர் உமா, பாத்தா தீபா வயசுதான் இருக்கும், பைலை வாங்கி பொறுமையா எல்லாம் படித்தார்.
”உங்க பிரச்னை என்னவென்பது உங்களுக்கு தெரியுமா?”
”தெரியும் டாக்டர். பிரச்னை எனக்குத்தான். Fallopian block, both overies are polysistic, கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரியும். உங்களிடம் சிகிச்சை எடுத்த நிறைய பேருக்கு குழந்தை பிறந்திருக்குன்னு சொன்னாங்க. அதான் வந்தோம்.”
”உங்கள் இருவருக்கும் வயது 40 மேலானதால், வாய்ப்புகள் கம்மிதான். ஆனால் முயற்சி செய்து பாக்கலாம். உங்களுக்கு IVF சிகிச்சை சரி வரும்னு தோணுது. என்ன சொல்லறீங்க.”
“அப்படின்னா”
’கருமுட்டையையும், விந்தணுக்களையும் எடுத்து, லேபில் இணைத்து, பின்னர் கருப்பையில் பொருத்துவது. உன் ரிப்போர்ட் பாத்தா உனக்கு கருமுட்டை உருவாவதில் பிரச்னை இருக்கு. ஆனா உன் கணவரின் விந்தணுக்களின் மொடிலிடி நல்லாயிருக்கு. அதனால் வேற ஒரு பெண்ணின் கருமுட்டை வாங்கி முயற்சிக்கலாம். என்ன சொல்றீங்க.?”
யோசித்து சொல்றோம்னு தீபா சொல்வதற்குள் மாது ஓகேன்னு சொன்னது, தீபாவுக்கு ஆச்சரியமா இருந்தது.
”ஆனா அதுக்கு நீங்க தனியா பணம் கொடுக்கணும். யாரு அந்த டோனார்னு உங்களுக்கு சொல்ல மாட்டோம். உங்கள் அப்பாயின்ட்மெண்ட் இருக்கற நாள்ல நீங்க என்னை மட்டும்தான் பார்க்க முடியும். மத்த பேஷண்ட்ஸ சந்திக்க முயற்சி பண்ணாதீங்க. ஏன்னா எல்லோரோட ரகசியத்த நாங்க காப்பாத்தணும். நீங்க இந்த விஷயத்தில ஒத்துழைக்கணும்.”
”இந்த முயற்சி வெற்றி பெரும்னு தோணுது. சரியென்றால் மத்த ரொட்டீன் ஆரம்பிக்கலாம்,”
அடுத்த ஒரு மாதத்தில் நிறைய டெஸ்ட்ஸ், இன்செக்ஷன்ஸ். அந்த நாளும் வந்தது. மாது சாம்பிள் கொடுத்துட்டு வரும்போதே ”தீபா அந்த பெண்ணாயிருக்குமோ. ஆனா பல்லு எடுப்பாயிருக்கே. சே அதுவாயிருக் கூடாது. அதோ அந்த பச்சை புடவை, அவ அழகாயிருக்கா, கலராவும் இருக்கா இல்ல.”
மாதுவின் இந்த பேச்சு ஏனோ தீபாவிற்கு பிடிக்கல. டாக்டரைப் பார்க்கச் சென்றார்கள்.
”கரு உருவாயிருச்சுன்னா உங்க கருப்பை கருவ ஏத்துக்கறாமாதிரி இருக்கணும். அதற்கு மாத்திரைகள் தரேன். அதனால பிரியட்ஸ் வந்த 13ம் நாள் முதல் ஒரு 6 நாளைக்கு ஹாஸ்பிடலில் தங்க வேண்டியிருக்கும். நான் கன்பர்ம் பண்ணி சொல்லும் போது வாங்க.”

12ம் நாள் தகவல் வந்தது. இரண்டு கரு உருவாயிருக்காம். அடுத்த நாள் அட்மிட் ஆயாச்சு. இந்த சிகிச்சை ஆரம்பத்ததிலேந்து மாது எப்பவும் அந்த பச்சை புடவை பத்தியே பேசினான். டாக்டர் உமாவிடமும் கேட்டான். அவங்க கோபப்டவும், அவங்க கிட்டே கேக்காம நர்ஸிடம், லேப் பையனிடம், யாரிடமாவது விவரம் கிடைக்குமான்னு பார்த்தான். தீபாவிற்கு இந்த போக்கு மன உளைச்சலா இருந்தது.
13ம் நாள் அந்த கருவை தீபாவின் கருப்பையில் வைப்பதற்கான முறைகள் செய்யப்பட்டன. இதற்கென மும்பையிலிருந்து டாக்டர் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். Special wardக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் தீபா. உமா டாக்டர் திரும்ப திரும்பச் சொன்னார். ”ரிலாக்ஸா, மகிழ்ச்சியா இரு.”
அங்கே நிறைய பெண்கள் படுக்க வைகப் பட்டிருந்தார்கள், எல்லோருக்கும் இடையே திரை. மெல்லிய இசையும், ஊதுபத்தி மணமும் நிறைந்திருந்தது அங்கே. மும்பை டாக்டரின் முகம் கூட பாக்க முடியல,
Its over. All the best என்ற குரல்தான் கேட்டது. பிறகு அவளின் வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டாள். நெருங்கிய தோழி மட்டும் உடனிருந்தாள். மாதுவிற்கு விவரங்கள் கிடைக்காததில், எரிச்சலோடு போய் விட்டான். பெட் ரெஸ்ட் என்று சொன்னதால், தோழி அருமையா பார்த்துக்கொள்ள, டாக்டரின் கவனிப்பில் 6 நாள் ஓடியது. மாது 19ம் நாள்தான் வந்தான். வீட்டிற்கு கூட்டிப் போக. அவளிடம் சரியா பேசல. தீபா தனிமையா உணர்ந்தாள்.
தினமும் காலையில் டாக்டர் தொலைபேசியில் விசாரித்துக் கொண்டே இருந்தார். எல்லோரின் நம்பிக்கையும் கடைசியில் பொய்த்துப் போனது, 28ம் நாள் பீரியட்ஸ் வந்து விட்டது. உமா டாக்டரும் வருத்தம் தெரிவித்தார்கள்.
”எத்தனை பேருக்கு டாக்டர் சக்ஸஸ் ஆச்சு?” பொறுக்க முடியாமல் கேட்டாள் தீபா.
”தீபா உன்னுடன் சேர்த்து 25 பேருக்கு செய்தோம். இருவருக்குத்தான் சக்ஸஸ் ஆச்சு. நம்பிக்கையை விடாதே. மீண்டும் முயற்சிக்கலாம்.”
”இன்னொரு தடவையா. எனக்கு கஷ்டம் டாக்டர். இதற்கே செலவு லட்சக்கணக்குல ஆகிடுச்சு,”
”பணத்தைப் பாத்தா முடியுமா தீபா.”
”நான் யோசிச்சு சொல்றேன் டாக்டர்.”
மாதுவோ ரொம்பவும் அப்செட். ”உன்னாலத்தான் கருத்தரிக்க முடியல. இந்த கருவையும் தக்க வச்சுக்க முடியாதா. அந்த பச்ச புடவ மாதிரி அழகா பொறந்திருக்குமில்ல. எல்லாம் போச்சு இப்ப.”
”இதே நான் சரியாயிருந்து டோனார் விந்து வாங்கியிருந்தோம்னா?” ன்னு கேக்க நினைத்து, கேக்கல தீபா.
கதாசிரியர் : மாலதி
Photo credits: pexels-nataliya-vaitkevich