அப்பூந்திநாள் எப்போது பூர்த்தியாகும்

இந்தியா  சுதந்திரம் பெற்று

முக்கால் நூற்றாண்டாயிற்று.

பெண்களின் சுதந்திரத்தை நினைத்ததும்

 விக்கல் உண்டாயிற்று.

தண்ணீர் பருகி நிறுத்திட முடியுமா

பெண்டீர் கொண்டிருக்கும்  

சுதந்திர தாகத்தை…

என்று தணியும்?

என்றவர்களின்  குரல்

இன்றொலித்தால்

வென்றுமா தணியவில்லை?  என்றுதானே கேட்கும்.

குனியவில்லை

பணியவில்லை

அணியவில்லை

என்றெல்லாம்

சொல் வில்லால்  எய்து விட்டு!

பெண்ணிங்கே சமமென்று பெய்து வைக்கும் கானல் நீரால்

தாகந்தான் தீர்ந்திடுமா?

வேகமாய் பாய்ந்தோடும்

விண்கலம் ஏறி

விண் வெளிக்கு சென்று

வந்திட்டாள் பெண்ணிங்கே  பெருமைதான்.

வீட்டுக்கு வெளியே சென்று வரும் உரிமை

எல்லாப் பெண்களுக்கும்

உண்டா?

பிரதமர் நாற்காலியில்

அமரந்த பெண்ணியம்

பிறர் முன் நாற்காலியில்

அமர்ந்தால்    

கண்ணியமில்லையாம்.

பேருந்து இயக்குகிறாள்

விமானம் இயக்குகிறாள்

ரயில் வண்டி இயக்குகிறாள்

எல்லாம் சரிதான்

உண்மையில் பதவி வகிக்கும் பெண்களை

இயக்குவது யார்?

ஊதியத்தில் பெற்றுவிட்டாள் சம பாத்தியதை

கூலியதில் தோற்றுவிட்டாள்

சம சம்பாத்தியத்தை.

மூன்று தலைமுறை

பார்த்திருக்கும்

இச்சுதந்திர தேசம்

கை நாட்டு தலைமுறைக்கு

மருதாணி  பூசியது

கையெழுத்து தலைமுறைக்கு

கடிகாரம் கட்டியது

பட்டத் தலைமுறையின்

முகத்திலோ அமிலத்தைக்

கொட்டியது.

முப்பது மூன்று விழுக்காடு  கொடுத்துவிட்டு

இதோ முழுக்காடு!

என்று சொன்னால்

புல்லெல்லாம் மரமாகி

நின்றிடுமா?

பகலெல்லாம் வேண்டாம்

பெண்கள் நள்ளிரவு  நகையோடு

நடமாடும் நாள் தான்

சுதந்திரம் எனச் சொன்னார் காந்தி

பகற் பொழுதே

பாகற்காய் ஆகிவிட

அப் பூந்தி நாள்

எப்போது பூர்த்தியாகும்?.

எழுபத்து நான்கு சுதந்திர தேதிகளை

கடந்து விட்டோம் ஆகஸ்டில்

ஆனாலும் படிக்கட்டில் தான்  நின்றிருக்கிறாள்

பெண்

வீடெங்கும் நடப்பதெற்கு

விதிசெய்ய

இன்னும் எத்தனை

தேதித்தாள்கள் கழிய வேண்டும்?

பயணங்களில் போக வேண்டும்

நிர்பயா  பயம்

ஆலயங்களில்போக வேண்டும்

ஆஷிபா  அச்சம்

ஆண் லயத்தில்

ஒலிக்க வேண்டும்

பெண் லயம்

அதுதான் சமமான

சுதந்திரத்தின் இலட்சியம்.

பெண்ணுரிமை தாங்கி நிற்கும் தீர்மானத் தாள்களில்

அலட்சியக் கப்பல் செய்யாமல்

அவசியக் கட்டுமரம்

செய்திட்டால்.

தேசியக் கொடிப் பூவில்

மெய்வாசம் ஒட்டிடும்…

தேசியக் கொடிப் பூவில்

மெய் வாசம் ஒட்டிடும்.

படைப்பாளர் : தசாமி

புகைப்படம் : பிக்ஸல் காட்டன்ப்ரோ