அவள் அவளாகத் தான் இருக்கிறாள்

அடிமைவீட்டில்,
கொல்லைப் புறமாய்
அங்குபறக்கும் பட்டாம்பூச்சியாய்
இருந்த நீ,

இன்று
பரந்த தேசத்தில்
நந்தவனமாய் 
நந்தவனப் பறவையாய் இருக்கிறாய்

ஆழ்கடல் ஆழியாய் அறிவிருக்க
இணையசுழிக்குள் சிக்கித்தவிக்கிறாய்

பண்பெனப்பட்டதை பண்பலையில்
மட்டும் கேட்கும் பட்டத்தரசி
பாசத்தைக் கடவுச்சொல்
போட்டுப் பார்க்கிறாய்

ஆடைகளில் சுதந்திரம் அடைந்த நீ
ஆசை அலையில் அடித்துச் செல்லப்படுகிறாய்

குடுவை நீரைக் கடலாக நினைத்த நீ
வானமாய் இருக்க எண்ணி
மேகமாய் மறைந்து போகிறாய்

நூலகமாக இருக்கும் நீ
கரையான்களின் புற்றைக்
கையாளத் தெரியாமல்

வனதேசமாய் வாசல்கள் இருந்தும்
அனுமதி இலவசமில்லை.

ஆசைப்பட்டதும் படாததும் விழுங்கும் தொண்டையாய்
அதையும் ஏற்கும் மனதாய்

மறைந்து போகும் மாயாவியல்ல நீ
நிமிர்ந்து நிற்கும் மேரு

பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த நீ
சதமடிக்கவே அவா

ஓரிலக்க எண்ணாய் இருந்தபோது கொண்டாட்டம்
ஈரிலக்கமாக மாறுகிறாயோ உனக்கோ திண்டாட்டம்
கல்விச்சாலையில் கல்வியும் காதலுமாய் வண்டாட்டம்
வேலையையும், குடும்பத்தையும்
இறுக்கிப்பிடிக்க எறும்பாட்டம்
அலுத்து ஓய்ந்தால் கைகளும் கால்களும் நடுக்கத்திலாட்டம்

ஆட்டம் போடும் வாழ்க்கையில் ஆண்டுதோறும் கொண்டாட்டம்.

குட்டையும் , நெட்டையுமாய்
மெலிந்தும், பருத்துமாய்

கேளிச்சித்திரமாய், கேளிக்கை செய்தாலும்  வெற்றியாய்

கற்பித்தாய் மகிழ்வித்து  மகிழ்
கற்பித்தாய் புறம் என்பது புறமே
கற்பித்தாய் அறமென்பது அறமே
கற்பித்தாய் உழைப்பால் பிறர் மகிழ்வார்
கற்பித்தாய் திறமையுடன் கோமாளியாய்..

செலவுகள் சுருக்கப்பட்டது
சம்பளம் கேள்விக்குறியாய் !
இப்போது வேலையும்…

வேலை இல்லை, நேரம் இருக்கிறது..
பணம் இல்லை, பசி இருக்கிறது..

குடும்பம் எங்கோ இருக்க
கால்கள் நடந்து கொண்டே..
எது கொடுத்த நம்பிக்கை  தெரியவில்லை…

செங்குருதி சிந்தப்படுகிறது
சுட்டெரிக்கிறது கதிர்கள்
பிஞ்சுகளை மட்டுமல்ல
பழங்களையும் தான்

கையாலாகாதவள்,
கட்டிலில்,குளுகுளு அறையில்
அடுத்த பதிவினை
எப்படிப் பதிய வைக்க என்று?!

புலம்பெயர்ந்தவர்
புலம்பிக்கொண்டே..
செய்வதறியா
நல்லுள்ளம் பிராத்தனையாவது..

நாட்டுக்குள் நடந்து வந்தேன்,
வளைகுடாவிலும்
இன்னும் பல நாடுகளிலும்…
தேடும் கண்களில்
அகப்படுவாயா
மடியும்முன்..

குடியில்லா நாட்களில் 
பண்டமில்லாவிடினும்
வலியில்லை,
என் குடுமி
உன்கைகளில் சிக்கிவிடுமோ 
என்ற பயம்…
மரணம் தேவலை…

விளைந்த பயிர்
மீண்டும் முளைக்க,
காயும், சோறும்
எட்டாக் கனியாய்..

30, 35 வயதில் கூட
தேவதை காத்திருக்க……

வரலாறு இந்தக் காலகட்டத்தை
எப்படி பதிவு செய்யும்?
தலைவர்களின் சாதனை…
இலவச உணவுத்திட்டம்..
சமூக சேவையாளர்கள்….
பாதுகாப்பு…

என்ன வண்ணம் பூசினாலும்
கண்ணீருக்கு வண்ணமேது…
பிணக்குவியலின் வாடை ஒன்றுதான்…
இழப்பு தரும் வெற்றிடம் நிறப்பூக்கள் உண்டா இங்கு?

ஆடையில்லா 
பிச்சைக்காரன் நான் – தெருவில் 
ஆடைநீக்கி தேனீர் அருந்தும்- உன் மனம் ஆடை இல்லாமல் பார்க்கவே 
பிரியப்படுகிறது போலும்

எனக்கும் குளிரும் பனியும் உண்டென பார்க்கப் பிடித்த உனக்குப் புரியவில்லை போலும்

சரி பிச்சைக்காரன் யாரிதில்
இருந்தும் தர நினையா மனமா
இல்லாமல் மானம் போகும் உடலா….

படுக்கை வரிக்கிறாளோ
பஜ்ஜி சுடுகிறாளோ
பைலட்டாக இருக்கிறாளோ

அவள் அவளாகத்தான் இருக்கிறாள்
75 ஆண்டுகள் கழித்தும்

படைப்பாளர்: கவிஞர். ஆனந்தி ஜீவா

படம்: istockphoto.com