
பெண் ஒரு புனிதப் புத்தகம்.!
ஆயிரமாயிரம் அர்த்தங்கள்
நிறைந்த வாழ்வியல்.!
வேதாந்தங்களையும் மிஞ்சும் வேதாந்தம்.!
இறைத்துவத்தையே சுமந்து,
உலகில் இறக்கி வைத்த இறைத்துவம்.!
ஆண்மை என்றால் என்னவென்று
அவனுக்கே போதிக்க வந்த போதிமரம்.!
பத்து மாதம் பொறுத்திருந்து
உயிரைப் பிய்த்து, உந்தித் தள்ளி
‘நீ மனிதன்’ எனச் சொல்லும் மகாத்மா..!
உலகிற்கான விடியல் அவளே
விடியல் தேடி அலைவதும் அவளே.
சுதந்திர இந்தியாவில் பெண்
விமானி ஆனாள்.!
வீராங்கனை ஆனாள்.!
மருத்துவர் ஆனாள்.!
காவல் உயர் அதிகாரி ஆனாள்.!
நீதிபதியானாள்.!
முதல்வரானாள்.!
ஆளுநரானாள்.!
பிரதமர் ஆனாள்.!
இந்தியாவின் குடியரசுத் தலைவர்
ஆனாள் – ஆனாலும்,
ஆணுக்கு எழுதிய அடிமைச் சுவடியாய்,
அவனுக்காகவே வாழும்
ஆயுத எழுத்தாய்,
அனைத்து பக்கங்களிலும்
ஆண் பெயரே.!
பிறந்த பெயர் சான்றில் ஆரம்பம்!
பத்து கனிந்து பெற்ற பின்னும் ஆணே!
உடல் எரியூட்ட ஏந்தும்
கொள்ளியில் கூட ஆண்மகனே!
இந்தியாவில் தீட்டு என்னும் சடங்கு
திரும்பத் திரும்ப வட்டம் போட்டு
இவள் வாழ்வைச் சுற்றும்!
மாதம் ஒன்று பத்து மாதம் வீதம்
பொறுத்திருந்தால் நீளும் ஓர்மாதம்!
மங்கை அவளை கங்கை என்பான்!
மங்கா நிறத்து மங்களொளி என்பான்!
தங்கு தடை இல்லா தாரகம் பேசுவான்!
சங்கு அல்லது சமநிலை வகுப்பார்!
முண்டாசுக்காரனின் முறுக்கு மீசை
பேசிய ரௌத்திர மொழியும்,
தடி ஊன்றிய பின்னும் தளராத
பகுத்தறிவுப் பகலவனின் வசைமொழியும்,
பெண்மையை வீறு கொண்டு
எழச் செய்தது!
பெண்ணிய சுதந்திரம் பேணச் செய்தது.
சாதியும் மதமும் சூத்திரமானது,
அரசியல்வாதி கையில் ஆயுதமானது!
முத்துலட்சுமி அம்மையார் பிறந்த மண்ணில் தானே
மருத்துவக் கனவு அனிதாவையும் புதைத்தோம்!
மீரா பாய்க்கு லிஃப்ட் கொடுத்த
ஓட்டுனர் நடத்துனர் வாழும்
இதே மண்ணில் தானே
நிர்பயாவும் சிதையக் கண்டு
சட்டமியற்றினோம்!
மகாத்மாவின் வார்த்தைக்கு சவால் தானே,
நிர்பயாவின் நள்ளிரவுக் கதறல்.!
பின் எங்கே சுதந்திரம் தேட?
பிவி சிந்துவிற்கு கைதட்டும் கரங்கள் தானே
நம் வீட்டுப் பெண்களின் கைக்குள்
விளக்குமாற்றைத் திணிக்கிறது!
பின் எங்கே சுதந்திரம் தேட?
பெண் என்பதாலேயே புறக்கணிக்கப்பட்ட
சமீஹா பர்வீன் செவி கேளாதோர்,
உலக தடகளத்தில் கால் பதிக்க
நீதி மன்றம் நாடுகிறாள்!
இந்திய அணி தோற்றது என கலங்கிய வேலையில்,
வந்தனா வீழ்ந்தாள் என
வெடி வெடித்துக் கொண்டாடிய
சாதியமான மண்ணில்,
எங்கே சுதந்திரம் தேட?
பொள்ளாச்சியின் கதறல்கள்
இமைகளைத் துளைத்துக் கொண்டு,
இதயத்தோடு யுத்தம் செய்து,
இரவுகளை உறங்க விடாமல் தின்று தீர்த்தனவே!
கதறல்களின் காணொளி
வந்த தினம் முதல்,
இளம் பெண்களைக் கொண்ட
எத்தனை எத்தனை வீடுகள்,
பகல் இரவின்றி நரகமாய் துடித்தனவே..!
அத்தனையும் ஜாதிய அரசியல் தேர்தலால்
கனவாகிப் போனதுவே.!
பின் எங்கே பெண்ணிய சுதந்திரம் தேட.!
மிருகத்தில் கொடியது ஓநாய்!
சிதைத்து உண்ணும் சிதையத் தின்னும்!
ஓநாயினையும் மிஞ்சும்
ஒப்பில்லா மிருகமானான் மனிதன்..
ஆம் ஆசிபா!
கடவுள் ஒருவன் உண்டு என்றால்
கோவிலுள்ளும் உள்ளான் என்றால்,
குழந்தை ஆசிஃபா கதறியபோது
காம நாய்கள் குதறிய போது
எங்கிருந்தானோ?
பிள்ளைக் கறி உண்ட பழக்கத்தால்
உள்ளிருந்து கண்டு களித்தானோ?
மதம் தூக்கி விரித்தாடும்
இம்மண்ணிலே,
எங்கே தேட பெண்ணிய சுதந்திரம்?
நீதி தேவியின் நீதி காக்கும் நீதியரசரை
பட்டப்பகலில் ஆட்டோ ஏற்றி
பலியெடுக்கும் சமூகத்தில்
எங்கே தேட பெண்ணிய சுதந்திரத்தை?
ஒரு பெண்ணின் தற்கொலை
அந்த சமூகத்தின் அவமானம்!
ஆணும் பெண்ணும் வெஃகி
நாணிடல் வேண்டுமன்றோ!
ஆகாயத்தில் தடம்பதிக்க சாதிப்பவன்,
ஆபாச இணையத்திற்கு மூடுதிரை
காணமுடியாமல் தவிக்கும் நிலையில்,
எங்கே தேட பெண்ணிய சுதந்திரத்தை?
பாலியல் குற்றவாளி ஆனபின் தானே
அந்த சாமியாருக்கு
பக்தகோடிகள் குவியத் தொடங்கினர் – பின் எங்கே தேட பெண்ணிய சுதந்திரத்தை..!
மெய்க்காப்பாளன் கையாலேயே
சுடப் படுகிறாள்,
உயர்பதவி ஆய்வாளராலயே
சீண்டப்படுகிறாள்,
மருத்துவக் கனவுக்கு ஏங்கி மரணம் ஏற்கிறாள்.!
இரவில் பயணப்பட்டால் சிதைக்கப்படுகிறாள்,
இனிக்க சிரித்து விளையாடிய
குழந்தை கிழிந்து கிடக்கிறாள்!
மனநலம் பாதிக்கப்பட்டதால்
64 பேரின் பசிக்கு இரையாகிறாள்!
காதலாகி கசிந்து உருகினாள் காணொளியாகி
கட்டாய வேட்டைக்குள்ளாகிறாள்!
இந்த நிலையில்
எங்கே தேட பெண்ணிய சுதந்திரத்தை?
பெண்ணியம் காக்க
பெண்மையின் சுதந்திரம் பேண
மாற்றம் வேண்டும்!
மாறாத மாற்றம் வேண்டும்!
ஏற்றவேண்டும்
ஏறெடுக்கும் பார்வையில்
ஏற்றம் வேண்டும்!
வெண்ணிலவென்று வர்ணித்திட வேண்டாம்
பகலிரவினில் சுதந்திரமாய் நடமாடவிட்டால் போதும்!
வேருக்கு நீரிட வேண்டாம்
வெந்நீர் விடாமல் இருந்தால் போதும்!
கண்ணீருக்குத் தத்துப் பிள்ளையாகாமல்,
மண்ணில் சுதந்திரமாய் தழையவிட்டால் போதும்,
விழுதுகளைத் தானாய் ஊன்றிக்கொள்ளும்.!
பெண்களைக் கண்களாக வேண்டாம்
பெண்களைப் பெண்களாகவே கண்டால் போதும்..!
பெண்ணே..
பெண்மை இன்றி மண்ணில்
உயிர்கள் இல்லை,
பெண்மை இல்லாவிட்டால்
உலகே இல்லை.!
பெண்மனம்.,
ஆணாதிக்கம் அழிக்க நினைத்து
வெகுண்டெழுந்தால்
அகிலத்தில் ஆண் சமூகமே
இருக்காது..!
எத்தனை பெரிய உயர்நிலை
அடைந்தாலும் – ஆண்மை
என்னும் கூட்டுக்குள்
அவள் அடையாமல் இருப்பதில்லை..
அந்தக் கூடு கூடாக இல்லாமல்,
சுதந்திரக் காடாக இருந்தால்,
பெண்ணியம் பூப்பூக்கும்!
இன்னும் கோடி பல ஆண்டுகள்,
பூமி உயிர் காக்கும்…
படைப்பாளர்: கவிஞர். புதியவன் அன்பரசு
படம்: istockpic.com