எண்ணிக்கை 75

உதடுகளை இறுக மூடிக் காற்றை

உள்ளும் வெளியும் செலுத்தாமல்

பேச்சைத் தடை போட்டு

மௌனம் கொள்ள முயற்சித்தேன்.

விடா மொழிகள் பேசிக் கொண்ட

மனம்…

வேர்கள் பிடிக்க மண் என்றது.

மனமோ …

என்னை தின்றே நின்ற மரம் என்றது.

தாகம் தீர்க்கும் தண்ணீர் என்றது.

மனமோ …

தரை தொடக் கண்ணீர் சிந்துது.

விசிறியின் வீச்சின் குளுமை அருமை என்றது.

மனமோ …

காற்றின் துளி விசிறிச் சென்றது.

நெருப்புகளை சுடர் என்றது

மனம் …

சுடரின் ஒளி புகை என்றது.

பறந்து விரிந்த வானம் என்றது.

மனமோ …

விரித்து பறக்க சிறகு தேடுது.

விடுதலை என்பது சுதந்திரம் தந்தது

மனமோ …

சுதந்திரம் சொல்லால் இருக்குது என்றது.

எண்ணிக்கையில் 75 என்றது.

மனமோ …

எண்ணம் எப்பொழுதும் ஒன்று என்றது.

மனமே இங்கு பெண்ணாக நின்றது.

என்றது எல்லாம் ஏளனம் செய்யுது.

படைப்பாளர் : சிவகாமி

புகைப்படம் : பிக்ஸல் – அருண் கல்லா