ஒரு ஆன்மாவின் குரல்

கண்மூடித் கண்திறந்து பார்த்தால் இந்த உலகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இவ்வாறு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் என்னுடைய கனவு என்னவோ, இந்த வேளைக்கான உணவு தான். அதுவும் எனக்காக இல்லை, என்னுடைய குழந்தைகளுக்காகவாவது நான் உண்ண வேண்டிய நிலையில் இருந்தேன்.

ஆலய வாயில்கள், திருமண மண்டபங்கள், குப்பைத் தொட்டிகள், கறிக்கடை வாசல்களென எங்கு தேடி அலைந்தாலும், என்னுடைய பசிமொழிக்கு “ச்சூ” என்ற மறுமொழியே முதலில் வரும். என்னுடைய சோகத்தை கடக்க, கடவுளின் பதிலாவது கிடைக்குமா என்கிற ஏக்கத்துடனேயே மீண்டும்… மீண்டும்… அவ்விடங்களில் யாசித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் யாசித்துக் கொண்டுதான் இருப்பேன், எனது பச்சிளங்குழந்தைகளுக்காக.

எனக்கு மட்டுமே இந்நிலையென எண்ணி ஓடிவிடமுடியாத ஒரு போட்டியில், என்னுடன் பல பேர் இணைந்து கொண்டனர். அதில் உணவு கிடைத்தால் வெற்றி இல்லையென்றால் பட்டினிதான். மோப்பம் பிடித்துக்கொண்டே நகரும் வாழ்க்கையாய் எங்கள் பயணம் தொடர்ந்தது.

தெருதெருவாக சுற்றும்போதெல்லாம் எனது அம்மாவும் இப்படித்தான் சுற்றியிருப்பாளோ என நினைத்துக்கொண்டேன். அந்நினைவோடு சிறுதுளி கண்ணீரும் எட்டிப்பார்த்தது. எங்கோ பிறந்த நான், இன்று எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஓட்டம் சிலசமயங்களில் தடுமாறும் இல்லையென்றால் தடம் மாறும். எதுவாக இருந்தாலும், உணவைத் தேடியே இந்த பயணம்.

ஆஹா! எனது கண்களுக்கு ஒரு குப்பைத்தொட்டி தென்படுகிறது. நான் வணங்கும் ஆலயங்களில் அதுவும் ஒன்று. அங்கு மனிதர்கள் மிச்சம் வைத்திருக்கும் உணவுகள் கண்களுக்கு பிரசாதமாக காட்சியளிக்கின்றன. எனது பசியை விரைவில் நான் ஆற்றப்போகிறேன் என நினைத்து வேகம் எடுக்கையில், என்னுடன் வந்தவர்கள் முந்திக்கொண்டனர். இறுதியில் எனக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

தலைதொங்கிய நிலையிலேயே, அடுத்தவொரு இடத்தைத் தேடி அங்கிருந்து புறப்பட்டேன். “கடவுளே! எனது நாவும் வறண்டுவிட்டது. நா தொங்கிய வேளையில், சோகத்தின் பிடியில் நானும் தொங்கிக்கொண்டிருக்கிறேன். உனது கைப்பிடி அளவாவது கருணையை காட்டு. நன்றிசொல்ல நான் காத்திருக்கிறேன்…” என்று வேண்டி முடிப்பதற்குள், ஒன்றுபட்ட சிறுவர்களால் என்மீது கல்லொன்று பட்டது. வேகமெடுத்த ஓட்டத்தால், அடுத்த கல்லிடமிருந்தும் சிறுவர்களிடமிருந்தும் தப்பிப் பிழைத்தேன். ஆனால் கல்லடி பட்ட இடம் மிகவும் எரிச்சலாக இருந்தது. இது இன்று மட்டுமா? தினமும் பழக்கப்பட்டது தானே என்று என்னை நானே தேற்றிக்கொண்டு ஓடினேன்.

தெருவில் தொடர்ந்த எனது பயணம், பிரதான சாலைக்குள் நுழைந்தது. அச்சமயம், இந்த சோகத்தை அறிந்த வருண பகவான்! தனது கண்ணீரை சிந்த, எனது நாவில் சிறுதுளி ஈரம் பட்டது. நீண்ட கண்ணீரை சிந்திய அவரால், எனது உடலை சிலிர்த்துக் கொண்டே ஒரு மரத்தினடியில் ஒதுங்கி விட்டேன்.

அப்பொழுது, எனது கண்ணெதிரே ஒரு உணவு விடுதி இருந்தது. அதற்கு வெளியே சில எச்சில் இலைகள் சிதறியிருந்தன. ஆனால், அவற்றையும் வருணபகவான் சுத்தம் செய்துகொண்டிருந்தார். கொட்டும் மழையில் சோகமும் சேர்ந்து கொட்டியது. இனி நான் என்ன செய்வேனென்று யோசித்தவாறே எட்டு வைக்க, எனது சிந்தனையும் பயணித்தது. மழையும் மெல்ல…மெல்ல…குறையத் தொடங்கியது.

வாகனங்கள் பறக்கும் இந்த சாலையில், எனது பசிமொழியை நான் யாரிடம் சொல்வேன்? அதுவுமின்றி, எனது குழந்தைகளை விட்டு வெகுதூரம் வந்துவிட்டேன். திரும்பிப் பார்க்கும் நொடியெல்லாம் பசியே என்னை துரத்திக் கொண்டிருந்தது. இந்த தொடர் ஓட்டத்தின் நிறுத்தம் எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால் கடவுளின் மீதான நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

சிறிது தூரத்தில், எனது கால்களின் வேகம் குறையத் தொடங்கியது. நான் காண்பது நிஜம் தானா? என்னால் நம்ப முடியவில்லையே! ஆம் இம்முறை எனக்கு நிச்சயமாக ஏமாற்றம் கிடையாது. நான் அதனை பார்த்து விட்டேன், பசியும் தீரப் போகிறது.

ஆம்! நான் நின்றுகொண்டிருக்கும் சாலையின் எதிர்ப்புறம், ஒரு கருங்கல்லின்மீது சிறிதளவு சோறும், நன்றாக நசுங்கியிருந்த எலும்புத் துண்டுகளும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. எனக்கான நேரம் வந்துவிட்டதென எண்ணி சாலையின் எதிர்ப்புறம் நோக்கி நகர்ந்தேன். அந்நேரத்தில், என்னை தூக்கியெறிந்தது விபத்து ஒன்று…

கீழே விழுந்தநொடியில் பாதி உயிரை இழந்து விட்டேன். மீதியிருந்த உயிர் அந்த சோற்றையும், எலும்புத் துண்டுகளையும் பார்த்துக்கொண்டிருந்தது. “கடவுளே! என்னை காப்பாற்றுவாயா? மனிதர்களுக்காக வரும் மருத்துவ அவசர ஊர்தி, நிச்சயம் எனக்காக வரப்போவதில்லை. அங்கே பசியுடன் சுற்றித்திரிய காத்திருக்கும் என் குழந்தைகளையாவது காப்பாற்று” என்றவாறே கண்களை மூடினேன்.

இறுதியில், இரத்த வெள்ளத்தில் மிதந்த என்னை ஈக்கள் கூட்டமே மொய்த்துக் கொண்டிருந்தது.

கதையாசிரியர் : ஆ. கிருஷ்ணதாஸ்