
சுதந்திரம்! ஒற்றைச்சொல் கொண்டே மனதிற்கு சிறகு பூட்டும் உணர்வு!
இறுகிப்போன கல்லறையில் முளைத்தெழும் விதையின் நெகிழ்ச்சி!
நீரில் மூழ்கையில் கிட்டும் பிடிக்காற்று!
அன்றெம் பெண்களின் தியாகமும், வீரமும்
உரமாகிய விடுதலைப்போராட்ட அறுவடையே!
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றின் நறுமணம்!
ஆயிற்று ஆண்டுகள் எழுபத்தைந்து!
ஆயினும், அகற்றவில்லை மாதரைப்பிணைத்த விலங்குகளை – அதை
குடும்பம் என்றும், பாதுகாப்பு என்றும் நாமம் சூட்டி…
மாற்றிவைத்தோம் பொன்னில்!
இன்றும் இயலவில்லை
அடுக்களைச்
சங்கிலியை அறுத்துவிட!
அகலாய் ஒளிர்ந்திட அனுமதித்திட்டோம்!

பகலவனாய் உதிக்கையில்
முகிலாய் மறைத்திட்டோம்!
அறிவுக்கண்கள் திறந்திடவே
ஆயிரம் கதவுகள் திறந்திட்டோம்!
பகுத்தறிவு பேசிட வரையறைகள் வகுத்திட்டோம்!
பூட்டிக்கொள்ள சிறகுகளை ஈய்ந்துவிட்டு
வானத்தை கூண்டுக்குள் வைத்திட்டோம்!
உயிர் பிய்த்தெறியும் பிரசவத்தின் வலியிலும்,
மகவின் பூமுகம் நோக்கிப் புன்னகைக்கும்
வலிமைக்கு வேறேதும் இணையுண்டா?
வேண்டா வரையறைகள் தகா்த்திட்டால்
விண்ணை முட்டும் சாதனைகள் பெண்ணுடையதாகாதோ?
ஆதிக்க அரணகற்றி அருகிருந்தால்,
வானம் கூட வளைந்து பெண் பாதம் தொடாதோ?
மனதின் மாற்றம் ஒன்றே
அகிலத்தை ஆளுமைப் பெண்பூக்களின் வனமாய்
மாற்றிடும் வித்தாகும்!
சேற்றில் மலரும் செந்தாமரைகளையும்
கோபுரத்தில் ஏற்றிடும் ஏணி என்றாகும்!
இளம்பிறை முழுமதியாகிட வழிசமைத்தால்
மேகம் விலக ஜொலிக்கும் உலகாய்…
நீருற்ற வளரும் விருட்சமாய்…
ஆழிப் பேரலையின் ஆற்றலாய்…
மலைச்சிகர வைரமாய் மின்னிடுவாளே மங்கையவள்!
படைப்பாளர் : விஜயா சூர்யகுமார்
புகைப்படம் : பிக்ஸல் விவேக்