பெண் சுதந்திரம்

ஞாயிறு மாலை ..

இனியதொரு வேளை..

பறம்பின் உறவுகளாம் ..

பாரியின் பங்காளிகளோடு..

பொற்கால இந்தியாவின் ..

எழுபத்தைந்து வருட

சுதந்திர வரலாற்றில் …

பெண்களின் சுதந்திரம்

என் பார்வையில் ..!

தந்திர பூமியில்

சுதந்திரத்தை எங்கு தேட ?

மாந்திரீக மானுடத்தில்

மனித நேயத்தை எங்கு தேட?

அவசர அரசாங்கம் ..

மிக அவசர அரசாணை ..

அனிதாக்கள் ஆற்றாமையில்

சித்ராக்கள் சந்தேகத்தில்

சிந்துக்கள் சில துணுக்கு

பல வரா கணக்கு.. !

எங்கே தேட என் குல மாந்தரின்

சுதந்திரத்தை !

ஊர் எல்லை தாண்டாத

ஏனைய கிராமத்து பெண்கள்..

உலகம் சுற்றும்

அறிவார்ந்த மங்கையர்கள் ..

இன்டர்நெட் அலசும்

இன்னொரு கூட்டம் ..

ராகங்கள் பதினாறு..

ரகங்கள் பலநூறு ..

துருவங்கள் இரண்டல்ல

இடைவெளி ஏராளம் !

எப்படி ஒப்பிட

எது சுதந்திர இந்தியாவென ?

இரவில் பெண் தனியாக

நடக்கட்டும் – காந்தி

நிமிர்ந்த நன்னடை

திமிர்ந்த ஞானச் செருக்கு – பாரதி

அடுக்கலாம் ஆயிரங்கள் ..

அடைந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்.

இரவா … பகலா …

ராவணனா … காலாவா..

சினிமாக்கள் சித்தரிக்கும் – நம்

நினைவுகளும் சிலாகிக்கும் …

பெண் சுதந்திரமோ – இன்றளவில்

மண்ணை பிளக்கும்

முதல் இலை அல்ல !

மனதடியில் மறைந்தே

வளரும் வேர் என்று !

வேங்கையாய் சீறட்டும்

சுனாமியாய் சுழலட்டும்

பட்டி தொட்டி எல்லாம்

சுதந்திர வேட்கை தீ

பரவட்டும் …

ஆசை அறிதல் தரும் !

அறிதல் புரிதல் தரும் !

புரிதல் தேவை தரும் !

தேவை தேடல் தரும் !

தேடல் விடியல் தரும் !

இருபதில் இருமடங்கு

பண்படட்டும் நம் பெண்கள் ..

முப்பதில் முயலட்டும்

விருப்பும் துறையனைத்தும்.

நாற்பதில் நாடாளட்டும்

நம் குல விளக்குகள் .

ஐம்பதில் அனுபவம்

பகிரட்டும் அடுத்த

தலை முறைக்கு !

செல்வங்கள் சேர்க்கட்டும்

சொந்தங்கள் மறவாமல் ..

நடுநிலை அடை மழையில்

சமூகம் சங்கமிக்கட்டும்…

ஆணும் பெண்ணும்

வெற்றிகளை கொண்டாடட்டும் !

அகம்பாவம் வேண்டாம்

பரிதாபம் வேண்டாம்

அடங்கவும் வேண்டாம்

அடக்கவும் வேண்டாம்

ஆடவும் வேண்டாம்

ஆணவமும் வேண்டாம்

அன்பால் அகம் அளப்போம் …

அனைவரும் சுதந்திரம் சுவாசிப்போம் !!

ஜெய் ஹிந்த் !!!

படைப்பாளர் : முரசொலி

புகைப்படம் : பிக்ஸல் யோகேந்திர சிங்