மரப்பாச்சியின் முதுகு

அந்த மரப்பாச்சிக்கு வயது எழுபத்தைந்து
அதற்கு முன் அதற்கு ஆயிரத்திச் சொச்சம் பெயர்களுண்டாம்
கொளுத்தியும் புதைத்தும் படைத்தும்
பலியிடுகையில் அப்பதுமையை வணங்கவும் செய்தார்களாம்…

வணங்கித் துதித்து வந்தனை சொன்னதில்
வளைந்துகொண்டதாம் அக்கைப்பாவை
அதன் பின் வளைதலே அதன்
வாழ்வியலாக்கிப் போனார்கள்

அந்த மரப்பாச்சிக்கு
இப்போது கை கால்கள் முளைத்துவிட்டன
சிறகு கூட முளைத்துவிட்டதாய்க் கேள்வி
ஏடேந்திப் படிக்கவும்
வாளேந்தி முடிக்கவும்
முன்னேறிவிட்டன
வண்ணங்களைப் பூசிக்கொண்டு
வளைய வளைய நடைபோடவும் தெரிந்திருக்கிறது
அடிக்கடி கொண்டாடவும்
செய்கிறார்கள் ஆயினும்
திரவுபதிகளின் சாயல்கள் அடிக்கடி
மரப்பாச்சிகளின் மீது தெரிவதுண்டு
வெற்றியின் சின்னமாய் திரையிலும் நிர்பயாக்கள் மறைவிலும் பொம்மைகளாகிக்
கொண்டேயிருக்கிறார்கள்

ஆனால்
இன்றும்

அதன் பெயர்
மகாசக்தி தான்

பதுமைகளாகவேதான்இருக்கின்றன
நடமாடும் அந்த மரப்பாச்சிகள்

அதன்
பருத்த தனங்களும் சிறுத்த இடைகளும் ரசித்து ரசித்து தேவதையாகிக்
கொண்டிருக்கையில்
உளி குதறிப்போட்ட அதன் முதுகு இன்னும் புழுபுழுத்துத்தான் கிடக்கிறது

சுதந்திரமெனும் பகடியில் இன்றும்
அந்த மரப்பாச்சிகளுக்குப்
பெண்ணென்றே பெயர்

உடைகளைச் சரி செய்துகொள்ளுங்கள்
ஒப்பனையிட்டுக் கொள்ளுங்கள்
நளினமாய் வாருங்கள்
பெண் விடுதலையைக் கொண்டாடுவோம்…..

படைப்பாளர்: கவிஞர். எபிநேசர் ஈசாக்

படம்: dreamstime.com