மீளா வட்டங்கள்

நீர் நிறைந்த ஒரு குளம்
சுண்டாட்டக் காய்களாய்
குளம் நிறைக்கும்
நீர்வட்டங்கள்..
கையில் கூழாங்கற்களைக் கொடுத்து
“வா கல்லெறியலாம்” என்கிறீர்கள்.

அம்மாவின் புடவையை
உடுத்திக் கொண்டு
தானும் தாயாகி விட்டதாய்க்
கூறிக் கொள்ளும்
ஒரு மழலையைப் போல
ஓடிச் சென்று கரைமோதி
தானும் ஆழிப்பேரலை
ஆகிவிட்டதாய்
நினைத்துக் கொள்ளும்
கடலறியாத அந்நீர்வட்டங்களின்
அப்பாவித்தனத்தை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களைப் போலவே
என்னுடைய கூழாங்கல்லை
நானும் நீரில் எறிகிறேன்.
என் குரல்வளையின் குருத்தெலும்புகளாய்
என் சிந்தனையின் விரவல்களாய்
என் திறமையின் கொலுசுகளாய்
அவை படர்ந்து சென்று
கரை மோதுகின்றன.

“இவ்வளவு தூரமாய் எறியாதே”
“முகத்தில் நீர் தெறிக்கிறது”
“உன் அலை வட்டங்கள் ஏன்
என் எல்லைக்குள் வருகிறது?”
என்று ஏகப்பட்ட கேள்விகள்
அலையலையாய்
இறங்குகின்றன என் மேல்.

கணிதப் புத்தகத்திலிருந்து
தப்பித்து வந்திருந்தாலும்
வடிவியலின் விதிகளை
இன்னும் மதிக்கும்
என் வட்டங்களை
மற்றொரு நீர்வட்டம்
வெட்டிச் சென்று
குளம் முழுதையும்
தான் மட்டுமே
ஆக்கிரமிக்க நினைக்கிறது.

மீசையின் முறுக்காய்
இறுகித் திருகிய
அலைவட்டங்கள் கூட
அருகில் வந்ததும்
நெகிழ்ந்து விடுகின்றன.

நான் தோற்றுவித்த
நீர் வளையங்களைத்
தோற்கடிப்பவை எல்லாம்
வளையலின் சலசலப்புடன் வரும்
வண்ண வளையங்களாகவே
பெரும்பாலும் இருக்கின்றன.

நீங்கள் பறக்கச் சொல்கிறீர்கள்
நானோ எனக்கு ஒதுக்கப்பட்ட
அரை சாண் வானம்
போதாதென்கிறேன்

என் ஆட்டத்தைக்
கண்டு கொள்ளாதவர்கள்
என் அகவலில் மட்டும்
குறை காண்கிறீர்கள்

‘புயலெனப் புறப்படு பெண்ணே’
என்று நீங்கள் தானே
சொன்னீர்கள்?
பிறகு ஏன்
அவளின் வேகத்தைக்
கேள்வி கேட்கிறீர்கள்?வன

எரிமலைக் குழம்பின்
வெப்பநிலையை
சோதிப்பவளிடம் போய்
உங்கள் வீட்டு
சமையலறையின் சாவியைக்
கொடுத்துவிட்டு
சுதந்திரம் கொடுத்து விட்டதாய்ப்
பீற்றிக் கொள்ளாதீர்கள்

உங்கள் வட்டங்களுக்குள்
அவள் வந்து நிற்க மாட்டாள்
அவளுக்கான வட்டங்களை
வரைய விடுங்கள்

கரையில் நிற்பதற்கும்
கல்லெறிவதற்கும்
சுதந்திரம் கொடுத்தவர்களே!
அவளது வட்டங்களையும்
கொஞ்சம் வாழ விடுங்கள்
நீங்கள் செய்யாவிட்டாலும்
பரவாயில்லை
குளத்தில் நீர் இருக்கும் வரை
எழுந்து எழுந்து
ஒரு நாள் கரையைத்
தொட்டே தீரும்
அந்த மீளா வட்டங்கள்..

படைப்ப்பாளர்: கவிஞர்.கோகிலாராணி

படம்: istockphoto.com