
சமூக ஊடகங்களின்
பரபரப்பான பசிக்கான உணவே
பெண் சுதந்திரம் எனும் பதம்
பேச எழுத உணர்ச்சிகளை
தீம்பிழம்பாக்கி பொங்கிஎழ
அனைவரின் பார்வையையும்
தம் மேல் திருப்பவே இப்பதம்
பெண்கள் சுதந்திரம் என்பது

அவள் அவளாகவே இருப்பது
யாரும் தரவேண்டியதல்ல பெண் சுதந்திரம்
அவளுக்குத் தேவையெனில் விடுதலையாவாள்
இல்லையெனில் தானே
சிறைப்பட்டும் விடுவாள்
கழுத்துநிறைய நகையுடன்
இரவு பனிரெண்டு மணிக்கு
தான் ஏன் போகவேண்டும் என
காந்தியடிகளிடம் கேட்க ஒவ்வொருபெண்ணுக்கும் ஆசைதான்
பகலிலியே போகலாம்
சிவப்புக்கம்பளமும் அதன் மேல்
ரோஜா மலர்தூவிய வரவேற்புடனும்
என்ன ரோஜா பூக்களுடன்
ரோஜாச் செடியையும் அல்லவா
பெரிய மனதுடன்
போட்டு வைத்திருக்கின்றனர்
நத்தையாய் தானே தன் கூட்டுக்குள்
சுருங்கிக் கொள்ள வழித்தடைகளாய்
ஆதிக்கவாதிகள் வகுத்து வைத்த ஆயிரம் வரையறைகள்
போகிற வழியெங்கும் காத்திருக்கையில்
பெண்ணுக்கு சுதந்திரம் என்பதன் பொருள்தான் புரியவில்லை

நவீன வாலிகளாய்தான் பெண்கள்
அவள் நடத்தையைத் தூற்றும்
எதிராளியின் பாதி பலம் அல்ல
முழு பலமுமே அவளுக்குண்டு
அவளை வீழ்த்த இப்பொழுதெல்லாம்
மறைந்து நின்று அம்பு விட வேண்டாம்
சொல்லம்பு போதும்
அவளை சுருண்டு விழவைக்க
காட்டுமரமான அவளை சுதந்திரமாய்
வீட்டில் வளர்க்கிறார்கள்
போன்சாய் என்ற பெயரில்
பெண்மை தாய்மை கடமை
அன்பு பாசம் காதல் என்ற
கண்ணுக்குத்தெரியாத
விலங்குளால் சிறைப்பட்டவளுக்கு
யார் தரமுடியும் சுதந்திரம் ????
படைப்பாளர் : லாஸ்யா
புகைப்படம் : பிக்ஸல்_ஆர்த்தி அகர்வால்