
உரிமைகள் ஆயிரம் உண்டுதான்
ஆனாலும், ஒடுக்கப்பட்ட
இனமாகவே உணர்கிறோம்!
இரு பாலரும் சமம் என
சட்டம் சொன்னாலும்
சங்கடங்களைக்
கடந்தபடியே
சாதிக்கின்றோம்!
சரிபாதி நாங்கள் என
சாத்திரங்கள் சொன்னாலும்
திரிசங்கு நிலையாகத்
தவிக்கிறோம் நவீன உலகில்!
உரிமைகளுக்காக
இன்று மட்டுமல்ல
என்றென்றும்..
தெருவில் இறங்கினால் தான்
தீர்வு கிடைக்கிறது.
விமர்சனங்களைக் காதில்
வாங்கிய படியே,
விண்வெளிப் பயணத்திற்கும்
போய் வருகிறோம்!
உயர்ந்து விட்டோம்
என ஊரே பேசுகிறது
உண்மை நிலை
எங்களுக்கு மட்டுமே
விளங்கும்!
ஓட்டுப் போடும் உரிமை
எங்களுக்கு உண்டு
ஆனால் யாருக்கு
எனத் தீர்மானிப்பது
நாங்களல்ல!
கடவுள் என
கை கூப்பி
வணங்கப்படுகிறோம்!
பின் வன்புணரப்படுகிறோம்,
இங்கேதான்
களப்பணிகளையும்,
காக்கும் பணிகளையும்,
செய்கிறோம்!
கருவில் கலைக்கப்படுகிறோம்!
பருவ வயதில் அமிலம் ஊற்றப்படுகிறோம்!
திருமணச் சந்தையில் விற்கப்படுகிறோம்
இதுதான் உரிமைகளா?
கடமையைக் கற்றுத் தரும் சமூகம்
ஏனோ உரிமைக்கு என்றும்
குரல் கொடுப்பதில்லை!
கேலிக்கும் கேள்விக்கும் கட்டுப்படவும்
கெட்ட வார்த்தைகளின் கிடங்காகவும்
மட்டுமே சமுதாயம் எங்களைப்
பார்க்கிறது!
போராட முற்பட்டால்
பொம்பள எனவும்
பாராட்டப்பட்டால்
பதவி எப்படி வந்திருக்குமோ
எனவும் கேள்விகள்!
வரதட்சணை
வன் புணர்ச்சி
குழந்தைத் திருமணம்
வயது வித்தியாசம்
இல்லாத பாலியல் சீண்டல்
ஆகியவை காண்பிக்கவில்லையா?
எங்கள் உரிமைகளை?
உணவுப் பொருளுக்கும்
உங்கள் உள்ளாடை
விளம்பரத்திற்கும்
நாங்கள் தேவை
ஆனால்
எங்களின் உரிமைகளுக்கு
வாய் திறக்க மாட்டீர்கள்?
இந்திய சட்டத்தில்
எங்களின் உரிமைகள்
ஏராளம்..
ஆனால் அதனை
அனுபவிக்க
இயலாத தடைகள்
அதை விட ஏராளம்!
என்று முழுமையான
உரிமைகளை
அனுபவிக்கிறோமோ
அன்றே இந்தியா
வல்லரசாக மாறும்!
படைப்பாளர்: கவிஞர். தேவிமயில் குமார்
படம்: istockphoto.com